Loading...
Stella dhinakaran

அதிகாலையில் தேவனைத் தேடு!

Sis. Stella Dhinakaran
27 Dec
“என்னை சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்” (நீதிமொழிகள் 8:17) என்று வேதம் கூறுகிறது. நீங்கள் அவரை நேசிக்க ஆரம்பித்த பின்னர் தான் அவர் உங்களை நேசிக்கிறார் என்பது இதற்கு அர்த்தமல்ல. 1 யோவான் 4:19ல்“அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்” என்று வாசிக்கிறோம். ஆம், ஆண்டவரை நேசிப்பவர்களையும், அவரது பிரசன்னத்தை தேடுகிறவர்களின் இருதயத்தையும் அவர்  நிரப்புகிறார். மேலும், அதிகாலையில் அவரை தேடுகிறவர்கள் பரம இரகசியங்களை அறிய தேவன் கிருபை தருவார். வேதத்தை சாதாரண புத்தகத்தைப் போன்று வாசிப்பதும், செய்திகளை கேட்பதும் மாத்திரம் போதாது. அதிகாலையில் எழும்பி தேவனுடைய வார்த்தையை தியானித்து ஜெபிப்பது மட்டுமே நீங்கள் ‘தேவனை கண்டறிய’ வழிவகுக்கும். ஆம் அதிகாலையில் தேவனை தேடுகிறவர்களுக்கு தேவன் தமது இருதயத்தில் உள்ளவைகளையெல்லாம் வெளிப்படுத்துவார். தாவீது தன் இளம் வயதிலேயே தேவனை அதிகமாய் தேடினான். எல்லாவற்றையும் விட அவரை அதிகமாய் நேசித்தான் என்று வேதத்தில் வாசிக்கிறோம். ஆகையால் தான், சாதாரண மேய்ப்பனாயிருந்த தாவீதை தேவன் இஸ்ரவேலை ஆளும் ராஜாவாக தெரிந்தெடுத்தார். ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; அவன் எனக்கு சித்தமானவைகளையெல்லாம் செய்வான் என்று அவனைக்குறித்து சாட்சியுங் கொடுத்தார் (அப்போஸ்தலர் 13:22).

தேவனுடைய ஊழியர் ஒருவர் வேதாகமக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.  அவர் அதிகாலையில் 4 மணிக்கு எழுந்து, தன் கரங்களை பரலோகத்திற்கு நேராக விரித்து, ஆண்டவரோடு பேசும் பழக்கத்தை கொண்டிருந்தார்.  இதனால் அவருடைய அனுதின வாழ்க்கை எப்படி இருந்தது? மோசேயின் முகம் தேவபிரசன்னத்தால் நிறைந்திருந்தது போல் அவர் முகமும், ஏன் அவர் வாழ்க்கையும்கூட தேவ பிரசன்னத்தால் நிறைந்திருந்தது. இதனால் அவர் எந்த காரியம் செய்தாலும் மிகவும் ஆசீர்வாதமாய் இருந்தது.  மாணவர்கள் அவருடைய வகுப்பில் மிகவும் அமைதலாக, அவர் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையையும் தேவ பயத்தோடு கேட்டு, ஆசீர்வாதம் பெற்றனர்.  அக்கல்லூரிக்கே அவர் ஓரு எரிந்து பிரகாசிக்கும் விளக்காயிருந்தார்.
என் அன்பு சகோதரனே, சகோதரியே, நீங்களும்கூட இதே வண்ணமாக அதிகாலையில் எழுந்து, ஆண்டவரைத் தேடுவதில் கவனமாய் இருக்கிறீர்களா? இன்று முதல் ஒரு தீர்மானம் செய்யுங்கள், தினமும் அதிகாலையில், “ஆண்டவரே நான் உம்மைத் தேடி வருகிறேன். என் வாழ்வெல்லாம் ஆசீர்வாதமாய் இருக்க அருள்புரியும்” என்று ஆண்டவரிடம் உங்களை சமர்ப்பிப்பீர்களென்றால் அவர் காலைதோறும் உங்களை எழுப்புவார்.  கற்றுக் கொள்ளுகிறவர்களைப்போல் அவருடைய தெய்வீக சித்தத்தை அறிந்துகொள்ளும்படி உன் செவிகளை கவனிக்க செய்வார் (ஏசாயா 50:4). நம் முன்னோர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு பெற்ற தெய்வீக ஆசீர்வாதங்களை உங்களுக்கும் நிச்சயம் தருவார்! அது மாத்திரமல்ல! நீங்கள் அவரோடு இணைந்து, அவருக்கு பிரியமான சிநேகிதனாக வாழ்வீர்கள்.
Prayer:
அருமையான தெய்வமே,

நீர் மெய்யாகவே உயிரோடு இருக்கிறீர். எனவே உம்மைத் தேடுவதில் பயபக்தியையும், ஜாக்கிரதையையும் எனக்குத் தந்து அதன்மூலம் என் வாழ்க்கை ஆசீர்வாதமாய் இருக்கவும் உமக்கு பிரியமான நல்ல சிநேகிதனாக, சிநேகிதியாக இருக்கும்படி அருள்தாரும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்!

For Prayer Help (24x7) - 044 45 999 000