Loading...
Evangeline Paul Dhinakaran

குணமாக்கும் தண்ணீர்!

Sis. Evangeline Paul Dhinakaran
03 Oct
“தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்பப்பாய்ச்சுகிறீர்: தண்ணீர் நிறைந்த தேவ நதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்: இப்படி நீர் அதைத் திருத்தி, அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர். அதின் வரப்புகள் தணியத்தக்கதாய் அதின் படைச்சால்களுக்குத் தண்ணீர் இறைத்து, அதை மழைகளால் கரையப்பண்ணி, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர்” (சங்கீதம் 65:9,10) என்று சங்கீதக்காரனாகிய தாவீது கூறுகிறார்.
 
பிரியமானவர்களே! தேவாதி தேவன் நம் சரீரத்தை, ஆத்துமாவைக் குணமாக்குகிறவர், தேவைகளை சந்திக்கிறவர். தண்ணீர் நிறைந்த தேவ நதியினால் நம்மை செழிப்பாக்குகிறவர். அவர் பூமியை விசாரிக்கிறவராகவே இருக்கிறார். ஆகவே, நம்முடைய பாரங்கள் எல்லாவற்றையும் அவருடைய கரத்தில் நாம் கொடுக்கும்பொழுது, அவர் நம்மை விசாரித்து, நம் பாரங்களை சுமக்கிறார். நம்மை செழிப்பாக்குவதுதான் அவருடைய விருப்பம். ஆகவே தான், ஏசாயா 58:11-ல், “நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும் வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்” என்று ஆண்டவர் வாக்களிக்கிறார். “நீரூற்று” என்பது என்றென்றும் வற்றாததாய் இருக்கும்.
வற்றாத நீரூற்றிற்கு தண்ணீர் எங்கிருந்து வருகிறது? மோசே இஸ்ரவேல் ஜனங்களை வனாந்தரத்தின் வழியாக நடத்தினபோது, அந்த ஜனங்கள் தண்ணீர் தாகத்தினாலே தவித்தார்கள். அப்போது அவர்கள், நாங்கள் தாகத்தினால் மடிந்துபோகவா எங்களை இங்கு அழைத்துவந்தீர் என்று மோசேயோடு வழக்காடினார்கள். அப்பொழுது ஆண்டவர் மோசேயோடு, “நான் ஓரேப் என்ற கன்மலையின்மேல் நிற்பேன், அந்த கன்மலையை அடி, அங்கிருந்து தண்ணீர் புறப்படும்” என்றார். அதுபோல மோசேயும் தன் கரங்களில் இருந்த கோலினால் அந்த கன்மலையை அடித்தான். தண்ணீர் புறப்பட்டு வந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் அத்தனை பேரின் தாகமும் தீர்ந்தது (யாத்திராகமம் 17:5,6).
 
அந்த கன்மலையாகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி, “ஆண்டவரே, நீர் எனக்கு கன்மலையிலிருந்து தண்ணீரைக் கொடும், என் தாகத்தையும் தீரும்” என்று நீங்கள் கேட்கும்பொழுது, அவர் வற்றாத நீரூற்றாய் உங்களுக்கு என்றென்றும் விளங்குவார். "என்னிடத்தில் விவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருத்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்" (யோவான் 7: 38) என்று தேவன் சொல்லியிருக்கிறார். ஆகவே கர்த்தரிடத்தில் விசுவாசமாயிருங்கள். அவர் உங்களுக்கு வற்றாத நீரூற்றை தந்து, உங்கள் தாகத்தை தீர்ப்பார்.
Prayer:
என்னை நேசிக்கும் அன்பு பரமபிதாவே,
இயேசுவின் நாமத்தில் உம்மிடம் வருகிறேன். அப்பா! நான் உம்மை முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறேன். நீரே எனது சந்தோஷம் என்னை குறித்த உமது திட்டத்தை எனக்கு வெளிப்படுத்தும். என்னை ஜீவனுள்ள தண்ணீராக மாற்றும். நான் உமது வேதவார்த்தைகளை சுவைக்கும்படியான கிருபையை எனக்குத் தாரும். நான் உம்மில் களிகூர்ந்து, எனது வாழ்க்கையில் நான் ஓர் நற்சாட்சியாக வாழ உதவிசெய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே.
 ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000