Loading...
Paul Dhinakaran

தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்!

Dr. Paul Dhinakaran
23 Jan

“கர்த்தர் தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்” (சங்கீதம் 149:4) என்று வேதம் கூறுகிறது.  நாம் வாழ்வில் உயர்வதற்கு மனத்தாழ்மை மிகவும் அவசியம். சிலர், மனிதர்களுக்கு முன்பாக தன்னை தாழ்த்த மாட்டார்கள். ஆனால், தேவனுக்கு முன்பாக தாழ்மையோடு நடந்துகொள்வார்கள். “ஒன்றையும் வாதினாலாவது, வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்” (பிலிப்பியர் 2:3) என்று வேதவசனம் நமக்கு போதிக்கிறது. மனத்தாழ்மையின் ஆழமான அடித்தளம், ஒரு நபரின் வாழ்க்கை இயேசு கிறிஸ்துவின் மீது கட்டமைக்கப்பட்டதற்கான அறிகுறியாகும். அத்தகைய அடித்தளம்  எந்தவொரு நபரையும் அசைக்கவோ அல்லது தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதிலிருந்து விலகிச்செல்லவோ அனுமதிக்காது.  ஜான் நியூட்டன் கூறுகிறார், “அன்பும் மனத்தாழ்மையும் கிறிஸ்துவின் பள்ளியில் மிக உயர்ந்த சாதனைகள் மற்றும் அவர் உண்மையில்  எங்கள் எஜமானர் என்பதற்கான பிரகாசமான சான்றுகள் என்பதை நான் நம்புகிறேன்.”

அநேக ஆண்டுகளுக்கு முன்பு, ஜெர்மனி தேசத்தில் வயதான இடைநிலை பள்ளியின் முதல்வர், ஐந்தாவது கிரேடு பட்டமளிப்பு விழாவை சிறப்பாக நடத்தினார். ஒவ்வொரு தடவையும் சான்றிதழ்களை மாணவர்களுக்கு கொடுக்கும்போது, அவர் குனிந்து பணிவுடன் கொடுப்பார். இதைக் கவனித்து மக்கள் ஆச்சரியப்பட்டனர். அவர்கள் அவரிடம், “ஐயா, பெரிய தலைவர்கள் முன்னால், பணிந்து குனியலாம்; ஆனால், இந்த சிறு பிள்ளைகள் முன்னால் அப்படிச்செய்யலாகாது’ என்றனர். அதற்கு அவர், “இந்த குழந்தைகளெல்லாம் பிற்காலத்தில் நாட்டை ஆளுபவர்களாக, விஞ்ஞானிகளாக, மருத்துவர்களாக, எஞ்ஜினியர்களாக எழும்பக்கூடும். எனவே, அவர்களிலுள்ள அந்த தனிச்சிறப்புகளை நினைத்து போற்றும் வண்ணம் அப்படிச் செய்து, அவர்களை கனப்படுத்துகிறேன்” என்று கூறினார். 

பிரியமானவர்களே, இந்த கல்லூரி முதல்வரைப் போல, உங்களிலுள்ள சிறப்பு தன்மைகளை தேவன் காண்கிறார். ஆகவே, எவ்வித பாகுபாடுமின்றி எல்லோரிடமும் தாழ்மையோடு பழகுங்கள். அவர்களும் தேவனுடைய சிருஷ்டிகளே. அவர்களுக்கும் தனிச்சிறப்பு உண்டு. இந்த தாழ்மை குணநலன் உங்களிலிருந்தால், நீங்கள் உயர்த்தப்படுவீர்கள். மற்றவர்கள் மீது இரக்க குணம், உபசரித்தல், அன்புசெய்தல், கனப்படுத்துதல் போன்ற கிறிஸ்துவின் சுபாவங்கள் உங்களை நிரப்புவதற்கு இன்றைக்கு உங்கள் இருதயத்தை திறவுங்கள். மனத்தாழ்மையை அணிந்து வாழ்வில் உன்னத நிலைக்கு உயர்ந்திடுங்கள்.
Prayer:
என்னை அதிகமாய் நேசிக்கிற அன்பின் தகப்பனே,
 
உமக்கு முன்பாகவும், மனிதர்களுக்கு முன்பாகவும் நான் சில நேரங்களில் பெருமை கொண்டிபடியினால் அடியேனை மன்னித்தருளும். நான் தாழ்மையோடு வாழ என்னை ஒப்புக்கொடுக்கிறேன். எனக்கு தாழ்மையைத் தந்து, மற்றவர்களிலுள்ள தனிச் சிறப்புகளை மதிக்க கிருபை செய்தருளும். இப்படியாக கிறிஸ்துவின் சிந்தையை  நீர் எனக்கு தருவதற்காக உமக்கு நன்றி.
 
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
 
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000