Loading...
Samuel Paul Dhinakaran

இயேசுவே பெலத்தின் காரணர்!

Samuel Dhinakaran
09 Jun
நண்பரே, நானும் என் சகோதரியும், சிறுவயதாய் இருக்கும்போது, எங்கள் தந்தை எங்களுக்கு நீச்சல் சொல்லித்தர விரும்பினதால், ஒரு ஆழமான நீச்சல் குளத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார். நேரத்தை வீணாக்காமல், அவர் எங்களை ஆழமான தண்ணீருக்குள் தூக்கி எறிந்தார். நாங்கள் பயந்துபோனோம். நான் மூச்சுத்திணறிக் கொண்டே, “அப்பா, என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கதறினேன். அவர், நாங்கள் எப்படி நீச்சல் அடித்து மேலே வருவதென்று சொன்னார். நாங்கள் அப்படியே செய்து, தண்ணீருக்கு மேல் வந்தோம்! ஆம், நாங்கள் அதை கடினமான முறையில் கற்றுக்கொண்டோம்.

அதைப்போலத்தான், தேவன் நம்மை ஆழமான தண்ணீருக்குள் போடுகிறார். நாம் நீச்சல் அடித்தும், கஷ்டப்பட்டும் இறுதியில் அவரை நோக்கிக் கதறும்போது, அவர் தம் கையை நீட்டி, மெதுவாக பேதுருவை தூக்கியதுபோலவே நம்மையும் தூக்கிவிடுவார். உங்கள் சுயபெலத்தினால் அதை செய்ய முயற்சிக்கும்போது, அது உங்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கும். ஆனால், நாம் அவருடைய பெலத்தின்மேல் சார்ந்திருந்தால், பொறுமையாக அவர் நமக்கு கற்றுக்கொடுக்கும் காரியம் வியக்கதக்கதாயிருக்கும்.
யோனாவை பாருங்கள். அவர் கடலிலே தூக்கியெறியப்பட்டபோது, தண்ணீரின் ஆழத்தில் மூழ்கினார். பின்னர் ஆண்டவர் ஒரு மீனை அனுப்பி அவரை விழுங்கச் செய்தார் (யோனா 1-ம் அதிகாரம்). என் தாத்தா ஒருமுறை பரலோக தரிசனத்தை கண்டார். அவர் யோனாவை பரலோகத்தில் சந்திக்கும் கிருபையை கர்த்தர் அவருக்கு கொடுத்தார். அவர் கூறினார்: “உங்களுக்குத் தெரியுமா? நான் மீனின் வயிற்றிலிருந்தபோது, எல்லாப் பக்கத்திலிருந்தும் ஜீரண அமிலங்கள் வந்து என்னை நெருக்கி ஜீரணிக்கச் செய்ய வரும், அதின் மத்தியிலும் தேவனுடைய கிருபை என்னை மூடிக்கொண்டதைக் கண்டேன். அது என்னை மூடிக்கொண்டு என்னை ஜீரணிக்கச் செய்யாதபடிக்கு பாதுகாத்தது. தேவன் என்னை மீனின் வயிற்றுக்குள் அனுப்பினாலும் அவர் கிருபையாக எதுவும் என்னை சேதப்படுத்தாதபடி காத்தார். அவரது கிருபையினுடைய வல்லமையை அன்று நான் கற்றுக்கொண்டேன்”

நீங்கள் ஆண்டவரிடத்தில், “ஆண்டவரே! ஏன் இந்த கஷ்டங்களை எனக்கு அனுமதிக்கிறீர்?  நான் உம்மை நம்ப வாஞ்சிக்கும் வேளையில் ஏன் இந்த வேதனையை எனக்கு அனுமதிக்கிறீர்” என்று கேட்கிறீர்களா? நீங்கள் நொறுங்கிப் போக அவர் அனுமதிக்கமாட்டார். யோனா அந்த மீனின் வயிற்றிற்குள் இருந்தபோது, தேவ கிருபை அவரை எப்படி மூடி பாதுகாத்து கொண்டதோ, அப்படியே தேவன் தம் கிருபையை அனுப்பி உங்களை மூடி பாதுகாப்பார். இந்த கிருபை உங்களைப் பாதுகாத்து, இந்த உலகத்திலிருந்து உங்களை வேறுபடுத்தும்.  நீங்கள் தேவனுடைய குரலை கேட்கும்படி செய்யும்: அவர்தான் பரிசுத்த ஆவியானவர்.  “சத்திய ஆவியாகிய அவர் வரும்போது சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்” (யோவான் 16:13).

பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய திட்டத்தை நமக்கு வெளிப்படுத்துவார். நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய நோக்கத்தை வெளிப்படுத்துவார். நாம் தண்ணீருக்குள் இருந்தாலும் தெளிவாக நமக்கு உதவிச்செய்வார். இல்லையென்றால், தேவனுடைய குரலை நாம் கேட்கமாட்டோம். வாழ்க்கையில் எப்பொழுதும், எல்லாவற்றிலும் நமக்கு அவசரம். ஆகையால்தான் அவருடைய திட்டத்தை கேளாமலும், அவரில் வேர் பற்றாமலும் இருக்கிறோம். நம்முடைய பெலன் ஒடுங்கி போன பின்னர், “இயேசுவே, நீர் மாத்திரம் தான் என் பெலத்தின் காரணர்” என்று சொல்கிறோம். தேவன் அதை விரும்புவதில்லை. நீங்கள் எப்பொழுதும் அவருடைய பெலனையே சார்ந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறார்.  “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாக” (நீதிமொழிகள் 3:5) இருக்க வேண்டுமென்று வேதமும் நமக்கு வலியுறுத்துகிறது. ஆகவே உங்கள் வாழ்வின் ஒவ்வொரு காரியங்களிலும் தேவனையே சார்ந்துகொள்ளுங்கள். அப்பொழுது அவர் உங்களை தமது பெலனால் நிரப்புவார்.
Prayer:
என் பெலனாகிய கர்த்தாவே,

என் சுய பெலனை சார்ந்து நான் மனமடிந்து போகாமல், உம்முடைய பெலனை சார்ந்து வாழும்படி அருள்புரியும். உம்முடைய சித்தத்தை கேட்டறிந்து அதற்கு கீழ்ப்படியும் கிருபையை எனக்கு தந்தருளும். யோனாவிற்கு அருளின கிருபைகளை எனக்கும் அருள வேண்டுமென்று கேட்கிறேன். பெலவீன பாண்டம் நான், உம்மில் பெலப்பட அருள்புரியும்.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000