Loading...
Paul Dhinakaran

களிகூருங்கள், நாம் தேவனோடு இணைந்திருக்கிறோம்!

Dr. Paul Dhinakaran
09 Aug
அன்பு சகோதரரே / சகோதரியே, "...மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்" (ஏசாயா 62:5) இன்றைய வாக்குத்தத்தம், ஆண்டவர் உங்கள்பேரில் மகிழ்ச்சியாயிருப்பதாக கூறுகிறது. ஆம், நாம் ஆண்டவரோடு ஒரே ஆவியாக இணைந்திருக்கிறோம் என்று வேதம் காட்டுகிறது. நீங்கள் உங்கள் வாழ்க்கையை இயேசுவுக்குக் கொடுத்து, உங்கள் வழிகள் யாவற்றையும் முழுவதுமாக அவருக்கு அர்ப்பணித்து, "ஆண்டவரே, நான் பாவத்திலிருந்து விடுபட விரும்புகிறேன். பாவத்தின் காரணமாக வரும் சாபம் எனக்கு வேண்டாம். பாவ இன்பங்கள், பாவ சுபாவம் எதுவும் எனக்கு வேண்டாம். நான் உம்முடைய சாயலாக இருக்கவிரும்புகிறேன்," என்று கூறும்போது, ஆண்டவர் இயேசு, உங்கள் பாவங்களை தமது இரத்தத்தினால் கழுவுவார்; பாவமோ, அடிமைத்தனங்களோ, தவறான உறவுகளோ இல்லாத புத்தம்புது வாழ்க்கையை உங்களுக்குத் தருவார்.

 பிறகு, மற்றவர்களுக்கு விரோதமாக நீங்கள் செய்த தவறுகளையெல்லாம் சீர்ப்படுத்துவதற்கு முயற்சிப்பீர்கள். உங்கள் செய்கைகள் மூலமும், வாழ்க்கையை நடத்தும்விதம் மூலமும் நீங்கள் தேவனுடைய பிள்ளையாகிவிட்டதையும், பாவத்திலிருந்து நீதியுள்ள வாழ்க்கைக்கு திரும்பிவிட்டதையும் ஜனங்களுக்கு காண்பிப்பீர்கள். ஆகவே, நீங்கள் மற்றவர்களுக்கு விரோதமாக தீமை செய்ததற்கு மன்னிப்பை நாடுவீர்கள் அல்லது அவர்களுக்குச் செய்த தவற்றை சீர்ப்படுத்த முயற்சிப்பீர்கள். அப்போது ஆண்டவர் உங்கள் வாழ்க்கையை கண்டு மகிழ்ந்து, "நீ நீதியுள்ள என்னுடைய மணவாட்டி. நீ கறையற்றவன்(ள்). நீ பிழையற்றவன்(ள்). நீ பரிபூரணமானவன்(ள்)," என்று கூறுவார். ஆண்டவர் நம்மைப் பார்த்து, இப்படிப்பட்ட அருமையான வார்த்தைகளைக் கூறினால் எவ்வளவு சந்தோஷமாயிருக்கும்! ஆம், ஆண்டவர், "நீ எல்லாவிதங்களிலும் பரிபூரணமாயிருக்கிறாய். என்னுடைய பரிசுத்தத்தின் அலங்காரத்தோடு இப்போது நீ என் சமுகத்திற்குள் பிரவேசிக்கலாம்," என்று கூற விரும்புகிறார்.
இன்று, உங்களை வாழ்க்கையை திருப்பி, கறைதிரையற்ற, பரிசுத்தமான, அவருக்கு உகந்த மணவாட்டி என்று கூறத்தக்கதாக உங்களை மாற்றும்படி ஆண்டவரிடம் கேட்பீர்களா? நீங்கள் அவ்வாறு கேட்கும்போது, ஆண்டவர் உங்கள்பேரில் மகிழுவார். "அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, ...உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்" (செப்பனியா 3:17) என்று கூறுகிறபடி நடக்கும். ஆண்டவர் உங்கள்பேரில் மகிழும்போது, உங்கள் வாழ்க்கையில் விளங்கும் தேவ தயவை உலகமே காணும்; உலகமும் பரலோகமும் உங்களைப் புகழும். எல்லா ஆசீர்வாதங்களும் உங்களுக்கு வந்து சேரும். நீங்கள் தேவனுடைய இருதயத்திற்கு உகந்தவர்களாக, எப்படி அவரை மகிழ்ச்சியாக்க முடியும்? மற்றவர்களுக்கு தம்முடைய நாமத்தை அறிவிக்கும்படி இயேசு தம் சீஷர்களை அனுப்பினார் என்று வேதத்தில் வாசிக்கிறோம் (லூக்கா 10ம் அதிகாரம்). அவ்வாறே சீஷர்கள் இயேசுவின் நாமத்தில் அற்புதங்களைச் செய்தார்கள்; அவருடைய நாமத்தால் பிசாசுகள் மக்களை விட்டு ஓடுவதைக் கண்டார்கள். அவருடைய நாமத்தைக் கொண்டு தாங்கள் செய்தவற்றை சீஷர்கள் இயேசுவிடம் கூறியபோது, அவர் களிகூர்ந்தார் என்று பார்க்கிறோம் (லூக்கா 10:21). அவ்வாறே ஆண்டவர் உங்கள்மேல் களிகூருவார். இன்றைக்கு ஆண்டவர் இந்தக் கிருபையை உங்களுக்கு அருளிச்செய்வாராக.
Prayer:
அன்பு ஆண்டவராகிய இயேசுவே, நீர் கொடுத்த அன்பின் வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய அன்பின் கரங்களுக்குள் என் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறேன். நான் பாவத்தை மீண்டும் மீண்டும் செய்ய விரும்பவில்லை. உம்முடைய கண்களுக்கு முன்பாக பிரியமான வாழ்க்கையை நடத்த விரும்புகிறேன். ஆண்டவரே, என்னை உம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் கழுவி, உமக்கேற்ற கறைதிரையற்ற மணவாட்டியாக மாற்றும். நீதியுள்ள வாழ்க்கை நடத்தும்படி எனக்கு உம்முடைய கிருபையை தாரும். நீர் என்பேரில் கெம்பீரமாய் மகிழவேண்டுமென்று நான் விரும்புகிறேன். நான் பரிபூரணமாக உம்முடைய சாயலாக மாறும்படி என்னை கிருபையாக உம்மோடு இணைத்துக்கொள்ளும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000