Loading...
Dr. Paul Dhinakaran

இயேசுவின் சாயல்!

Dr. Paul Dhinakaran
08 Apr
பிரியமானவர்களே, பரந்து விரிந்த இந்த பிரபஞ்சத்தையும், அதிலுள்ள உயிரினங்களையும் ஆண்டவர் உண்டாக்கினார். ஆனால் மனுஷனை மாத்திரம் அவர் தமது சாயலாக உருவாக்கினார் (ஆதியாகமம் 1:27). ஆதாம், ஏவாளுடைய கீழ்ப்படியாமையினால் மனிதன் தேவ அழைப்பிலிருந்து விலகி அழிவின் பாதையை தெரிந்துகொண்டான் (ஆதியாகமம் 3:8-13). இருப்பினும், தேவன் தம்முடைய மிகுந்த இரக்கத்தினால் மனித குலத்தை நித்திய அழிவிலிருந்து காப்பாற்ற விரும்பினார். ஆகையால்தான், தமது ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இவ்வுலகிற்கு தந்தருளி அவர்மூலம் நம்மை இரட்சித்தார்.  

நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, பாவ வாழ்க்கையை புறம்பே தள்ளி, கிறிஸ்துவின் சாயலாக மறுரூபமாகுங்கள். “...ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்”  (2 கொரிந்தியர் 3:18) என்று வேதவார்த்தை கூறுகிறது. 
சில காலங்களுக்கு முன்பு, ஒரு ஓவியர் இயேசுவின் முகத்தை வரைவதற்கு வாஞ்சித்து, மாதிரி ஒருவரை கண்டுபிடிக்க தேடிச்சென்றார். தேசம் முழுவதும் தேடிய பின், ஒளியால் நிறைந்த முகமுடைய மனிதன் ஒருவரைக் கண்டார். உடனடியாக அந்த மனிதனுக்கு நிறைய பணம் கொடுத்து, மாதிரிக்காக முன்பதிவு செய்தார். இயேசுவை வரைந்து முடிந்ததும் அந்த மனிதன் சென்றுவிட்டான். பல வருடங்கள் கழித்து, அதே ஓவியர், இயேசுவை மறுதலித்த யூதாஸின் முகத்தை வரைவதற்கு மாதிரி ஒருவரைத் தேடினார். ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார். ஓவியர் அந்த மனிதனிடம், ‘உங்கள் முகம் அப்படியே  யூதாஸின் முகம்போல் இருக்கிறது’ என்றான். அதற்கு அந்த மனிதன், ‘உங்களுக்கு என்னை நினைவில்லையா? சில ஆண்டுகளுக்கு முன்பு, என்னைப் பார்த்து இயேசுவின் முகத்தை வரையும்பொழுது, ‘வாலிபனே, உன் முகம் அப்படியே இயேசுவின் முகம்போல் இருக்கிறது என்றீர்களே’ என்று சொன்னான். அதனைக் கேட்ட ஓவியர் திடுக்கிட்டார். அந்த மனிதன் ஓவியரிடம், தான் ஆண்டவரை விட்டு வழிவிலகி தூரம் போனதைக் குறித்து விவரித்தான். மேலும், அவன், இயேசுவை உள்ளத்தில் சுமந்தபோது இயேசுவைப்போல் இருந்ததாகவும், இப்பொழுது இயேசு இல்லாமல் யூதாஸைப் போல் இருப்பதாகவும் கூறினான்.

ஆம் என் நண்பரே! நீங்களும்கூட இயேசுவை சுமக்கும்போது அவருடைய பிரகாசமான ஒளியைப் பிரிதிபலிக்க முடியும். உங்கள் கிரியைகளினாலும், கனிகளினாலும்  நீங்கள் யாரை பிரதிபலிக்கிறீர்கள் என்பதை அறியலாம். “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது” (மத்தேயு 7:16-18) என்று ஆண்டவர் இயேசுவே உவமையாக கூறியுள்ளார். உங்களுக்குள் இயேசு இருப்பாரென்றால்,  நீங்கள் எப்பொழுதும் நற்கிரியைகளையும்,  நற்சிந்தனைகளையுமே கொண்டிருப்பீர்கள். இன்று நீங்கள் அவரை விட்டு எவ்வளவுதூரம் சென்றிருந்தாலும் பரவாயில்லை. அவரிடம் மீண்டும் ஓடி வாருங்கள். அவர் உங்களை சேர்த்துக்கொள்ளுவார்.
Prayer:
என்னை மிகவும் அதிகமாய் நேசிக்கும் அன்புள்ள கர்த்தாவே, 
இன்று உம்முடைய வார்த்தையின்மூலம் நீர் என்னோடு பேசியதற்காக நன்றி. பரிசுத்த ஆவியானவரால் என்னை நிறைத்தருளும். என் உள்ளத்தில் உம்மை சுமந்து, உமது மகிமையின் ஒளியை வீச உதவிச் செய்யும். 
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
ஆமென்.

1800 425 7755 / 044-33 999 000