Loading...
Dr. Paul Dhinakaran

ஞானத்தை பெற்றிடுங்கள்!

Dr. Paul Dhinakaran
13 Aug
உலக ஞானத்தை பார்க்கிலும் தேவ ஞானம் மேலானது. கடந்த காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் அனைத்தும் தேவஞானம் ஜனங்களுக்குள் செயல்பட்டதற்கான முன் உதாரணங்களாகும். தேவனால் நோவாவுக்கு அருளப்பட்ட ஞானத்தின்படியும், அளவுகளின்படியும், தண்ணீரில் மூழ்காத ஒரு பேழையை நோவா உருவாக்கினான். தேவஞானம் நோவாவில் செயல்பட்டதினால் பேழையை அவனால் செய்ய முடிந்தது.  மனிதர்களுக்கு தேவைப்படுகிற காரியங்களை உருவாக்குவதற்கும் கண்டுபிடிப்பதற்கும் கர்த்தர் தமது ஞானத்தின் மூலம் ஜனங்களுக்கு கற்றுக்கொடுக்கிறார். “கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்” (நீதிமொழிகள் 2:6). நம்முடைய வேலை, படிப்பு மற்றும் வாழ்க்கையின் பிற துறைகளில் நாம் சிறந்து விளங்க நமக்கு ஞானம் தேவை. தேவனை தேடுவது தான் ஞானத்தை கண்டறிய ஒரே வழி. “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்” (யாக்கோபு 1:5).  தேவனிடத்தில் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. கேட்கிற யாவருக்கும் அவர் சம்பூரண ஞானத்தை கொடுக்கிறவர். தேவஞானம், இவ்வுலக ஞானமுடைய மக்களிடையே நமக்குள்ஒரு வித்தியாசத்தை உண்டுபண்ணும்.  

எகிப்து தேசத்தில் ஏழு வருடம் செழிப்பைத் தொடர்ந்து, ஏழு வருடம் பஞ்சம் வந்தது. இதனால், தேசத்தில் முன்பிருந்த பரிபூரணமெல்லாம் ஒழிந்துபோனது. ஆனால், தேவன் யோசேப்புக்கு, தீர்க்கதரிசனம், வெளிப்பாடு இவைகளின் மூலம், தானிய விளைச்சலை அதிகரிப்பது கெட்டுப்போகாமல் பாதுகாப்பது, சரியான விதத்தில் விநியோகம் செய்வது, இவைகளின் மூலமாக தேசத்திற்குச் செழிப்பைக் கொண்டு வருவது ஆகிய எல்லா வகையான ஞானத்தையும், சூழ்நிலைக்கேற்ற உணவு தானிய நிர்வாகத் திறமையையும் அளித்தார். யோசேப்பின் வெளிப்பாடு மூலமாக, அவன் எகிப்து முழுமைக்கும் அதிகாரியானான். எகிப்தின் களஞ்சியங்களெல்லாம் தானியத்தால் நிறைந்திருந்தது. சகல தேசத்தார்களும் எகிப்திலே தானியம் கொள்ளும்படி யோசேப்பினிடத்தில் வந்தார்கள்.
பிரியமானவர்களே, யோசேப்பு களஞ்சியங்களில் சேமித்து வைத்த உணவு தானியங்களை மக்களுக்கு விநியோகித்து சகல தேசத்தாரையும் பட்டினியிலிருந்து காப்பாற்றினான். அதினிமித்தம், யோசேப்பு ஆராதித்த தேவாதி தேவனை சகல தேசத்தார்களும் அறிந்துகொண்டனர். எகிப்து தேசம் உலகப்பிரகாரமாகவும், ஆவிக்குரிய பிரகாரமாகவும் செழிப்பாயிருந்தது. இதேபோல தேவன் அவருடைய பரிசுத்த ஆவியால் ஒரு வெளிப்பாட்டைக் கொடுக்கும்போது, அதை நீங்கள் பெற்றுக்கொண்டால், நீங்கள் முழு உலகத்தையும் காப்பாற்றுவீர்கள். நீங்கள் உங்களை அவரிடத்தில் ஒப்படைக்கும்போது, தேவன் உங்கள் பகுதியிலுள்ள, பட்டணத்திலுள்ள மக்களைக் காப்பாற்றுவதற்கு அவர் உங்களை பயன்படுத்துவார். பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும் மாயமற்றதாயுமிருக்கிறது (யாக்கோபு 3:17). மக்களுடன் எவ்வாறு தொடர்புகொள்வது என்பதை தேவன் நமக்குக் கற்பிப்பார். இதனால் நாம் அவர்களின் தயவைப் பெற முடியும். நம் மூலமாக தேவன் மற்றவர்களுடைய வாழ்வில் மகத்தான காரியங்களை செய்ய முடியும். “உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன் (யாக்கோபு 3:13). ஆகவே, நாம் ஞானமுள்ளவர்கள் என்பதை நம்முடைய நல்ல நடக்கையின் மூலமே நிரூபிக்க முடியும். ஞானமுள்ளவர்களாக வாழவும், அவருக்காக பெரிய காரியங்களைச் செய்யவும் தேவனிடத்தில் கேளுங்கள். 
Prayer:
தேவனே,

சகல தேசத்தாரையும் காப்பாற்றிய யோசேப்பை நீர் உம்முடைய பரிசுத்த ஆவியால் நிரப்பி அபிஷேகித்ததுபோல என்னையும் நிரப்பும். என்னை நொறுக்கி, உருக்கி, உருவாக்கி, உம்முடைய நாம மகிமைக்காக பயன்படுத்தும். எனக்கிருக்கும் கொஞ்ச அறிவை உம்முடைய கரங்களில் தருகிறேன். உமது திட்டங்களை இயேசுவின் நாமத்தில் வெளிப்படுத்தி, அதை நிறைவேற்றும் பெலனை எனக்குத் தாரும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000