
நன்மையினால் நிரப்பும் தேவன்
அன்பானவர்களே, "உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டுபண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது! (சங்கீதம் 31:19)என்று இன்றைய வாக்குத்தத்த வசனம் கூறுகிறது. ஆம், ஆண்டவர் உங்களை ஆசீர்வதிக்க காத்திருக்கிறார். உங்களுக்குப் பெரிதான நன்மையை தந்து ஆசீர்வதிக்க ஆண்டவர் விரும்புகிறபடியால், தம்மில் அடைக்கலம் கொள்ளும்படி அவர் உங்களை அழைக்கிறார். நாம் சேவிக்கும் தேவன் எவ்வளவு பெரியவர்! தம் பிள்ளைகளை ஆசீர்வதிக்கவே ஆண்டவர் விரும்புகிறார். உங்களை வாழ்க்கையில் செத்துப்போனவை என்று நினைக்கிறவற்றையும் ஜீவனோடு எழுப்ப ஆண்டவர் இன்றைக்கு ஆயத்தமாயிருக்கிறார். ஆகவே, சந்தோஷப்பட்டு களிகூருங்கள்!
லாசருவின் வாழ்க்கையில் தேவனுடைய உயிர்த்தெழுந்த வல்லமை வெளிப்பட்டதை வேதத்தில் காண்கிறோம். லாசரு மரித்துப்போனான்; அவனுடைய சகோதரிகள் இருவரும் அழுது தவித்தனர். 'மீண்டும் நம் சகோதரனை காணமுடியாது; அவன் வாழ்க்கை முடிந்துபோயிற்று' என்று அவர்கள் எண்ணினர். ஆனால் இயேசு வந்து லாசருவை மீண்டும் உயிரோடு எழுப்பினார். சுற்றிலுமிருந்த ஜனங்களும் லாசருவின் வாழ்க்கை முடிந்துபோயிற்று என்று எண்ணியிருக்கக்கூடும். ஆனால், ஆண்டவர் வித்தியாசமானதொரு திட்டத்தை வைத்திருந்தார். தம் பிள்ளைகளுக்கு நல்லவராக இருக்கவும், அவர்களை நன்மையினால் நிரப்ப அவர் விரும்பினார்.
நீங்கள் இன்று இதேபோன்ற சூழ்நிலையில் இருக்கலாம். 'உன் வாழ்க்கை முடிந்துபோயிற்று; இனி ஒரு நன்மையும் கிடைக்காது' என்று சுற்றியிருப்பவர்கள் கூறலாம். உங்களை பெற்றவர்கள் கூட அப்படிச் சொல்லக்கூடும். "நீ ஒன்றுக்கும் உதவாதவன்(ள்)" என்று மற்றவர்கள் உங்கள் காதுகேட்க சொல்லலாம். மனங்கலங்காதிருங்கள். எல்லா நன்மையையும் உங்களுக்குத் தந்து உங்களை ஆசீர்வதிக்க தாம் காத்திருப்பதாக ஆண்டவர் கூறுகிறார். ஆண்டவர் எல்லாவற்றையும் உங்களுக்காக வைத்து வைத்திருக்கிறார். அவரில் அடைக்கலம் காணுங்கள்.
அன்புள்ள ஆண்டவர் இயேசுவே, நீர் என்மீது கொண்டிருக்கும் அன்புக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய நித்திய இரக்கத்தினால் என்னை நீர் திருப்தியாக்கவேண்டுமென்று ஜெபிக்கிறேன். உம்மையே அடைக்கலமாக கொள்ளுகிறேன். உம்மேல் நம்பிக்கை வைத்து உம்மை மட்டுமே நோக்கிப் பார்க்கிறேன். உம்முடைய நன்மை என்மேல் வருவதாக. இன்றைக்கு நீர் வாக்குப்பண்ணியுள்ளபடி என்னை உம்முடைய மகிழ்ச்சியினாலும், உம்முடைய சமாதானத்தினாலும் நிறைத்து, மிகுதியான ஆசீர்வாதத்தை தந்தருளும். இந்த நாளில் ஒவ்வொரு கணமும் உம்முடைய பிரசன்னம் என்னை சூழ்ந்திருப்பதை நான் உணரட்டும். என் வாழ்வில் செத்துப்போனவை எல்லாவற்றும் ஜீவன் கொடுப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய அன்பின் கரங்களிலிருந்து பெரிதான நன்மையை பெற்றுக்கொள்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.