Loading...
Stella dhinakaran

தெய்வீக தலைமுறை!

Sis. Stella Dhinakaran
31 Jul
மேற்கண்ட வேதவசனத்தின்படி சொல்லக்கூடிய குடும்பங்கள் இன்று எத்தனை பேர் உண்டு! ஒவ்வொரு குடும்பத் தலைவரும் இவ்வாறு சாட்சி பகர்ந்தால், கர்த்தரின் நாமம் எவ்வளவாய் மகிமைப்படும்! கர்த்தர், ஆபிரகாமைப் போலவே ஒவ்வொருவர் குடும்பத்தையும், சந்ததி சந்ததியாக தேவ பக்தியுள்ள சந்ததியாக இருக்க விரும்புகிறார் (மல்கியா 2:15). “இன்று, நானும் என் குடும்பத்தாரும் மேற்கண்ட ஆசீர்வாதத்தை பெற்றிருக்கிறோமா?” என்று சிந்தித்துப் பார்த்து, செயல்படுவோம். “நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்” (யோசுவா 24:15) என்ற வார்த்தையின்படியே, தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் எப்பொழுதும் கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிந்திருங்கள் (எபேசியர் 5:21). நாம் அவ்வாறு செய்யும்போது ஆபிரகாமை ஆசீர்வதித்ததுபோல தேவன் நம் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார். “கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன்” (ஆதியாகமம் 18:19) என்று ஆபிரகாமைக்குறித்து சாட்சி பகிர்ந்தார்.

திரு.வி. அப்பாதுரை என்ற அருமையான தேவதாசன், அம்பாசமுத்திரம் என்ற ஊரில் இருந்தார். அவர் ஒரு வயலின் வித்வான். ஆண்டவர் நாம மகிமைக்கென்று, ஆலய ஆராதனைகளில் பக்தியுடன், இசைக்கருவியை வாசிப்பதுண்டு. இவருடைய முதல் பேரன் தான் சகோதரர் தினகரன் அவர்கள். சகோதரர் தினகரனுடைய தகப்பனார் திரு. துரைசாமி அவர்கள், ராணுவத்தில் பணிபுhய சென்றிருந்த காலத்தில், இந்த தாத்தாவோடுதான் அவரும், அவருடைய அம்மாவும் தங்கியிருந்தார்கள். இவர் ஓய்வு நாட்களில் தன் பிள்ளைகளுக்கும், பேரன் சகோதரர் தினகரனுக்கும், கர்நாடக இசையில் பக்திப் பாடல்கள் அடங்கிய கீர்த்தனைகளை கற்பிப்பார். அவருடைய பிள்ளைகள் அவைகளை கற்றுக்கொண்டார்களோ இல்லையோ, சகோதரர் தினகரன் கற்றுக்கொண்டார். தாத்தாவின் ஆசீர்வாதத்தால் வாலிப வயதில் இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டார். தேவனுடைய ஊழியத்தை செய்கிறதிலும், அற்புத அடையாளங்கள் மூலம் ஆண்டவரை மகிமைப்படுத்துவதிலும் கர்த்தரால் உபயோகிக்கப்பட்டார். தாத்தாவிற்கு பேரனைக் குறித்து எல்லையில்லா சந்தோஷம். அதுமட்டுமல்ல, பேரனுக்கு ஒரு வாழ்க்கைத் துணையை தெரிந்தெடுத்து, பெற்றோர் தெரிவித்தபொழுது, அதற்காகவும் ஜெபித்து, கர்த்தர் சித்தத்தை வெளிப்படுத்தினார். ஆம்! இவ்விதமாக பெரியோரின் பக்தியினிமித்தமே, இன்று எங்கள் குடும்பம் கர்த்தராலே அடையாளங்களாகவும், அற்புதங்களாகவும் ஆசீர்வாதமாக விளங்கி வருகிறது.
அன்பானவர்களே, நீங்களும், பெரியோரும் சிறியோருமாக இத்தகைய பேரின்ப வாழ்வைப் பெற்றிட உங்களை இன்றே அர்ப்பணியுங்கள். நாம் நம்முடைய குடும்பத்தினருக்கு தேவனுடைய வார்த்தையை கற்பிக்கும்போது, அவர்கள் வயோதிபர்களாகும்போதும் தேவனுடைய வழியை விட்டு விலகமாட்டார்கள். “நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயது முதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்” (2 தீமோத்தேயு 3:14-15) என்று பவுல் அப்போஸ்தலன் கூறுகிறார். சந்ததி சந்ததியாக தேவனுக்கு பயந்து நடப்பதற்கும், அவரை உண்மையாக சேவிப்பதற்கும் இதுவே வழி.
Prayer:
என் அருமை இரட்சகரே!

நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் என்ற வேத வசனத்தின்படியே என் குடும்பமும் விளங்க, உம் கிருபையை அருளிச்செய்யும். சந்ததி சந்ததியாக உமக்கு பயந்து உம்மை சேவிக்கும் ஆசீர்வாதத்தை எங்களுக்கு அருளியருளும். உம்முடைய வல்லமையினால் இந்த ஆசீர்வாதமான வாழ்வை பெறும்படி உம்பாதம் பணிந்து கெஞ்சுகிறேன்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000