
தேவ சித்தத்தில் தொடருங்கள்
அன்பு சகோதரரே / சகோதரியே, "தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்" (பிலிப்பியர் 2:13) என்பதே இன்றைய வாக்குத்தத்தம். ஆம், இந்த வசனம் கூறுகிறபடி, அவருடைய நன்மையான திட்டத்திற்கேற்ப உங்களுக்குள் விருப்பம் உருவாகவும், அந்த நன்மையான நோக்கத்தை நிறைவேற்றும் வல்லமையை நீங்கள் பெற்றுக்கொள்ளவும் தக்கதாக தேவன் கிரியை செய்வார். ஆகவே, சந்தோஷமாயிருங்கள்! எல்லாமே தேவனுடைய ஆளுகைக்குள் இருக்கிறது.
ஆண்டவரால் எப்போது உங்களுக்குள் கிரியை செய்ய முடியும்? தேவன், உங்கள் வாழ்க்கையைக் குறித்து நன்மையான நோக்கம் கொண்டிருக்கிறார் என்பதை முதலாவது நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். வாழ்க்கையில் சில காரியங்கள் தவறிப்போயிருக்கலாம். உங்களைச் சுற்றிலும் மோசமான காரியங்கள் நடந்துகொண்டிருக்கலாம்; நீங்களும்கூட அவமானத்தின் வழியாக கடந்துசெல்ல நேரிட்டிருக்கலாம். பலவற்றை இழந்திருக்கலாம். தேவன் இதை ஏன் அனுமதிக்கிறார் தெரியுமா? நீங்கள் வெறுமையாகும்படியே அனுமதிக்கிறார். உங்கள் பெலத்தின் மீது நீங்கள் கொண்டிருக்கும் அகன்று போகும். அப்படித்தான் உங்கள் வாழ்க்கையில் தேவன் கிரியை செய்ய தொடங்குகிறார். உங்களை தம்மால் நிரப்பும்படி, தேவன் முதலாவது உங்களை வெறுமையாக்குகிறார். அப்போது அவருடைய நல்ல நோக்கம் உங்கள் வாழ்க்கையிலும், உங்கள் வாழ்க்கை மூலமாகவும் நிறைவேறும். தேவனுடைய சித்தத்தை செய்கிறவர்கள் மட்டுமே என்றைக்கும் நிலைத்திருப்பார்கள். மனுஷனும் அவனுடைய திட்டங்களும் ஒருபோதும் நிலைத்திருக்காது. ஆகவே, தங்களுக்கு இஷ்டமானதை தங்கள் பெலத்தில் செய்கிறவர்கள் கொஞ்சகாலமே இருப்பார்கள். ஆனால், தேவனோ நித்தியமானவர்.
பரம தகப்பனே, இந்த அருமையான வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் வாழ்க்கைக்கென நீர் நன்மையான நோக்கத்தை வைத்திருக்கிறீர் என்று விசுவாசிக்கிறேன். நீர் என்னை வெறுமையாக்கும்படி ஜெபிப்பதற்காக உம்முடைய சிலுவை முன்னே வருகிறேன். என்னுடைய சுயம் நீங்கும்படி என்னை வெறுமையாக்கி, உம்முடைய பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பும். விசுவாசத்தை துவக்கிறவரும் முடிக்கிறவருமான நீர், என்னில் கிரியை செய்ய ஆரம்பிக்கவேண்டும் என்று ஜெபிக்கிறேன். இனி நான் அல்ல; கிறிஸ்துவே என்னில் ஜீவிக்கிறார். என்னை உபத்திரவப்படுத்தும் எல்லா சூழ்நிலைகளிலிருந்தும் என்னை உயிர்த்தெழச் செய்யும். என்னுடைய வாழ்க்கையை குறித்து நீர் கொண்டிருக்கும் நன்மையான நோக்கம் இன்றிலிருந்து நிறைவேறுவதாக. என்னிலும் என் மூலமாகவும் உம்முடைய நாமம் மட்டுமே மகிமைப்படுவதாக. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.