Loading...
Stella dhinakaran

பாதுகாப்பு உறுதி!

Sis. Stella Dhinakaran
01 Jun
அன்பானவர்களே, இயேசுவைத் தவிர நாம் பரலோகச் செல்ல வழியில்லை. சமாதானமும் ஆசீர்வாதமும் நிறைந்த வாழ்க்கையை நாம் வாழ்வதற்கு இயேசு வழியாயிருக்கிறார். ஒரு கதவானது பாதுகாப்பின் சின்னமாகும். இந்த ஊரடங்கின் நாட்களிலும் நாம் நம்முடைய வீட்டிற்குள் இருந்தால் மட்டுமே நமக்கு பாதுகாப்பு. நாம் வெளியே செல்லும்போது அதிகமான தீங்கு நம்மை தாக்குவதற்கு காத்திருக்கிறது. வெளியே இருந்து ஆபத்துகள் நம்மை நெருங்காதபடி ஒரு கதவு நம்மை பாதுகாக்க முடியுமானால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, திருடனாகிய சாத்தான் நம் வாழ்வில் நுழைய முடியாதபடி எவ்வளவாய் பாதுகாப்பார். தேவனுடைய இரத்தம் நம் பாதுகாப்பின் அரணாயிருக்கிறது. 

இரவு நேரத்தில் தன் ஆடுகளை கிடையில் அடைத்துக் கொண்டிருந்த ஒரு மேய்ப்பனை, ஒரு மனிதன் சந்திக்க நேரிட்டது. அந்த ஆட்டுக்கிடை நாற்புறமும் சுவர்களால் சூழப்பட்டிருந்தது, உட்செல்ல ஒரு வழியும் இருந்தது. மேய்ப்பன் கூறினான், “ஆடுகள் உள்ளே இருக்கும்போது மிகவும் பாதுகாப்பாக இருக்கும்” என்றான். “ஆனால், கதவு இல்லையே,” எப்படி பாதுகாப்பாயிருக்கும் என்று அந்த மனிதர் கேட்டார். அதற்கு மேய்ப்பன் “நானே வாசல்” என்று பதில் கூறினார். அவர் ஒரு அரபு நாட்டு மேய்ப்பன். அவர் கிறிஸ்துவை அறிந்தவரல்ல, ஆனால், இயேசு கூறிய அதே வார்த்தையை அவரும் பயன்படுத்துகிறார். அந்த மனிதன் மேய்ப்பனிடம், “நீங்கள் இரவில் எங்கே செல்வீர்கள்?” எனக் கேட்டார். வெளிச்சம் மறைந்த பின்பு, ஆடுகளை உள்ளே அடைத்துவிட்டு நான் இந்த திறந்த வெளியில் படுத்துக்கொள்வேன். ஆடுகள் என்னைத்தாண்டி வெளியே செல்வதில்லை. அதுபோல, எந்த ஓநாயும் என்னை கடந்து தான் உள்ளே செல்ல முடியும். “நானே வாசல்” என்று கூறினார்.
யோவான் 14:6ல் இயேசு கூறுகிறார், “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.” வாசலின் உள்ளே நுழைய விரும்புகிறவர்கள் சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும். எல்லோராலும் உள்ளே நுழைய முடியாது. ஆண்டவருடைய ஆசீர்வாதங்களுக்குள் நுழைவதற்கான ஒப்புதல் சீட்டு இயேசு தான் வழங்க வேண்டும். வழியாகிய இயேசுவின்றி நாம் எந்தவொரு ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்குள்ளும் நுழைய முடியாது. இயேசு நம் வாழ்வில் இருந்தால் மட்டுமே, பரிசுத்த ஆவியானவரை ஆலோசகராக நாம் பெற முடியும். இரட்சகராகிய இயேசுவை நாம் ஏற்றுக்கொள்ளாமல் பிதாவிடம் செல்ல முடியாது. இயேசு கிறிஸ்து மட்டுமே நாம் பரலோகம் செல்வதற்கான ஒரே வழி என்பதை தெளிவுபடுத்தவதற்காகவே, அவர் “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்ற உண்மையை நமக்கு கூறியுள்ளார். கள்ளத்தனமாக நுழைகிற சாத்தானின் கிரியைகளினால் நாம் குழப்பமடையாமல் தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருக்க வேண்டுமென்று இயேசு விரும்புகிறார். நமக்காக சிலுவையில் இரத்தம் சிந்தி தன் ஜீவனையே தியாகம் செய்த தேவன் அவர். இந்த மாதம் நமக்கு எப்படி இருக்குமோ என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். நான் சொல்கிறேன், முதலாவது தேவனை தேடுங்கள். இயேசுவின் மூலமாக பிதாவினிடத்தில் பாதுகாப்பிற்காகவும், தேவைகள் சந்திக்கப்படவும், சமாதானத்திற்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயமாகவே உங்கள் பிரார்த்தனைக்கு பரலோகத்திலிருந்து பதில் வரும். 
Prayer:
அன்பின் பரமபிதாவே,

இயேசுவின் நாமத்தில் உம்மிடத்தில் வருகிறேன். இயேசு கிறிஸ்து மட்டுமே எனக்கு ஆசீர்வாதமான வாழ்வை தரமுடியும் என்று நான் நம்புகிறேன். என் வாழ்விலுள்ள பிசாசின் கிரியைகளை நீக்கி நல்வழியில் என்னை நடத்தும். நான் இழந்த எல்லாவற்றையும் இரண்டு மடங்கு திருப்பிக்கொள்ள உதவிச்செய்யும். அதன்மூலம் நான் உமது சாட்சியாக இருப்பேன். இம்மாதத்தில் எவ்வித குறைபாடுமின்றி என்னை வழிநடத்தும். என் தேவைகளை பூர்த்தி செய்து, உமது பாதுகாப்பை அருள வேண்டுமென ஜெபிக்கிறேன். இம்மாதத்தின் ஒவ்வொரு நாளிலும் உமது பிரசன்னம் என்னோடு தங்கியிருக்க அருள்புரியும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000