Loading...
Evangeline Paul Dhinakaran

சோர்ந்துபோகாமல் ஜெபம்பண்ணுங்கள்!

Sis. Evangeline Paul Dhinakaran
09 Apr
பிரியமானவர்களே, சில நேரங்களில், நாம் ஜெபம் செய்யும்பொழுது, நமக்கு பதில் கிடைக்காமல் போகிறது. அப்பொழுது, “நமக்கு அதிர்ஷ்டமே இல்லை. அதனால் தான் நம் விண்ணப்பம்  கேட்கப்படவில்லை.” என்று சொல்லுகிறோம். மாறாக, ஆண்டவரை நேசிக்கிறவர்களாகிய நமக்கு, “நான் கேட்டதை ஆண்டவர் கொடுக்கவில்லை, ஆனால், நான் கேட்டதைவிட நன்மையானதை, மேன்மையானதை எனக்காக வைத்திருக்கிறார்” என்று நன்மை வரும் வரைக்கும் சோர்ந்துபோகாமல் ஜெபித்துக்கொண்டேயிருக்க வேண்டும். “சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும்...” லூக்கா 18:1

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரைச் சேர்ந்த யமுனா-கோவிந்தராஜ் தம்பதியர் ‘இயேசு அழைக்கிறார்’ தொலைபேசி ஜெபகோபுரத்தில் பகிர்ந்துகொண்ட சாட்சி: திருமணமாகி பல வருடங்கள் கடந்தும் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. அதன் காரணமாக அதிக நிந்தை, அவமானத்தின் வழியாக கடந்து சென்றோம். அதிக பொருளாதார வசதி இல்லாத நிலையிலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றோம். ஆனாலும் சிகிச்சை பலனளிக்கவில்லை. திருமணமாகி இருபது வருடங்கள் ஆகிவிட்டதால் மிகவும் மனமுடைந்த போனோம். ஒருநாள் ‘இயேசு அழைக்கிறார்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அதில் சகோதரர்  பால் தினகரன், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்காக விசேஷமாக ஜெபித்து கொண்டிருந்தார். அப்போது நாங்கள் இருவரும் தம்பதியாக, சகோதரரோடு இணைந்து பிரார்த்தனை செய்தோம். அதைத் தொடர்ந்து, சென்னை வானகரத்தில் உள்ள ஜெபகோபுரத்தில் நடைபெற்ற கூட்டம் ஓன்றில், பால் தினகரன் அவர்கள் செய்தியளிப்பதை அறிந்து, அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டோம். கூட்டத்தின் இறுதியில் சகோதரர் அவர்களை நேரடியாக சந்தித்து ஜெபித்துக் கொண்டோம். அநேக நாட்கள் நாங்கள் செய்த வேண்டுதலை, சகோதரர் அவர்களோடு இணைந்து ஏறெடுத்த விண்ணப்பத்தை  ஆண்டவர் கேட்டார். திருமணமாகி 20 ஆண்டுகள் கழித்து கர்ப்பந்தரிக்கவும், ஆண் பெண் என இரு குழந்தைகளைப் பெற்றெடுக்கவும் கிருபை செய்தார். அவருக்கே மகிமை.
ஒருவேளை, நீங்களும்கூட இதுபோன்றதொரு தேவைக்காக அநேக நாட்கள் ஜெபித்துக் கொண்டிருக்கலாம். மனம் சோர்ந்து போகாதிருங்கள்!  உங்கள் பிரார்த்தனையை அவர் கேட்பார். “சோர்ந்து போகாமல், இடைவிடாமல் ஜெபியுங்கள்” (1 தெசலோனிக்கேயர் 5:17). கர்த்தர் உங்கள் கண்ணீரின் ஜெபத்தைக்கேட்டு ஆசீர்வாதமான பதிலை உங்களுக்கு கொடுப்பார்.
Prayer:
ஜெபத்தை கேட்கிறவரே,

உம்முடைய சமூகத்தில் நீண்ட நாட்களாக நான் ஏறெடுக்கிற என் விண்ணப்பத்திற்கு பதில் தாரும். நீர் என்னை கைவிடாத தேவன். என் நம்பிக்கையை விட்டுவிடாமல் தொடர்ந்து ஊக்கமாய் ஜெபிக்க எனக்கு பெலன் தாரும். நிச்சயமாகவே  நீர் என்னை ஆசீர்வதிப்பீர் என்று  நான் விசுவாசிக்கிறேன்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

1800 425 7755 / 044-33 999 000