Loading...
Stella dhinakaran

பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் பண்ணுங்கள்!

Sis. Stella Dhinakaran
13 Oct
“சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி....சகல பரிசுத்தவான்களுக்காக... பண்ணும் வேண்டுதலோடு விழித்துக்கொண்டிருங்கள்” (எபேசியர் 6:18).
அன்பானவர்களே, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் நிறைவது மட்டும் போதாது. ஆவியில் நிறைந்து எப்பொழுதும் ஜெபத்தில் தரித்திருப்பது மிகவும் மேன்மை நிறைந்த தெய்வீக அனுபங்களைத் தரும். அவைகளுள் மேலானது, சகல பரிசுத்தவான்களுக்காகவும் ஆவியில் நிறைந்து வேண்டுதல் செய்வது! “சகல பரிசுத்தவான்களுக்காக பண்ணும் வேண்டுதலோடு விழித்துக் கொண்டிருங்கள்” (எபேசியர் 6:18) என்று வேதம் கூறுகிறது. கர்த்தர் அதை விரும்புகிறார். இன்று  இந்த விதமாக உங்கள் ஜெப வாழ்வு ஆழமானதாக இருக்கிறதா? என்று சோதித்துப் பார்த்து, இல்லையென்றால், இன்றே அந்த தெய்வீக அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவரையும் குறை சொல்லிக்கொண்டு, காலம் கழிக்காமல், “ஒவ்வொருவரையும் கர்த்தர் ஆசீர்வதிக்க வேண்டும்” என்று பாரத்துடன் ஜெபியுங்கள்.
வேத வசனங்களை கருத்தாக வாசித்து, அவைகளை தியானித்து, அதிலுள்ள அநேக சத்தியங்களை அறிந்து, கர்த்தருக்கேற்ற ஒரு நல்ல ஊழியனாக விளங்கவேண்டுமென்று  தன் வாழ்வையே அர்ப்பணித்தார் ஒரு மனிதர். பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெறுவதின் மேன்மையை  அறிந்து, அதற்காக காத்திருந்து சீஷர்கள் பெற்றுக்கொண்டதுபோல், தேவன் இவரையும் அக்கினி அபிஷேகத்தால் நிரப்பினார். நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் ஆவியிலே நிறைந்து ஜெபிப்பார். பரிசுத்தவான்கள் பலருடைய தேவைகளுக்காகவும், பரிசுத்தர்களாக வாழ்ந்த பல குடும்பத்தினருக்காகவும் கருத்தாக ஜெபித்து வந்தார். கர்த்தர் அவர் ஜெபத்தையெல்லாம் கேட்டு, அவர்களையெல்லாம் ஆசீர்வதித்தார். அவரையும் சகல நன்மைகளாலும் நிரப்பி உயர்த்தினார்.
 
இந்த வகையான அவருடைய நிறைவான வாழ்வினிமித்தம், அவருக்கு விரோதமாக எழும்பின சத்துருக்களும் அவரோடே சமாதானமாகும்படி செய்து, அவருக்காக, அவருடைய ஊழியத்திற்காக அவரோடுகூட சேர்ந்து உழைக்க, அநேகரை அவருக்கு துணையாகக் கொடுத்து, அவருடைய பிரயாசங்கள் யாவையும் ஆசீர்வதித்தார். இன்றைக்கு நீங்களும் ஊழியர்களுக்காகவும், பரிசுத்தவான்களுக்காகவும், உங்களிடத்தில் ஜெப உதவியை நாடி வருபவர்களை கருத்தாய் விசாரித்து அவர்களுக்காகவும்  ஊக்கமாய் ஜெபியுங்கள். நீங்கள் மற்றவர்களை விசாரித்து அவர்களுக்காக ஜெபிக்கும்போது, கர்த்தர் உங்களை விசாரித்து உங்கள் தேவைகள் அனைத்தையும் சந்திப்பார்.
Prayer:
ஆண்டவரே!
என் வாழ்விலும் அத்தகைய தெய்வீக வாழ்வைத்தாரும். உமக்கு மகிமையாக ஒளியின் பிள்ளையாக வாழ அருள்செய்தருளும். பரிசுத்தவான்களுக்காக பயபக்தியுடன் வேண்டுதல் செய்யும் தெய்வீகக் கிருபையினால் என்னையும் நிரப்பும். அதின்மூலம் உம் ஊழியத்தில் நான் எடுக்கும் பிரயாசங்களையும் ஆசீர்வதியும்.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே!
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000