Loading...
Evangeline Paul Dhinakaran

பூரண சமாதானம்!

Sis. Evangeline Paul Dhinakaran
25 Sep
“உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசாயா 26:3)
பிரியமானவர்களே, 
ஆண்டவர் தம்முடைய பூரண சமாதானத்தினாலே உங்களை நிரப்புவார். “என்னுடைய கணவர்/மனைவி என்னை விட்டு பிரிந்துபோய்விட்டார். என்னுடைய குடும்பத்தில் ஒரே சண்டையாக இருக்கிறது. என் பிள்ளைகள் என்னை மதிப்பதில்லை” என்று அநேகர் குறை கூறுகிறார்கள். இந்த நாளில் ஆண்டவர் உங்கள் குடும்பத்தை தம்முடைய சமாதானத்தினால் நிரப்புவார். நாம் அவரை உறுதியாய் பற்றிக்கொண்டவர்களாக வாழ்கிறதினால், நம்மை பூரண சமாதானத்தினால் அவர் நிரப்புவார் (ஏசாயா 26:3).

ஒரு சகோதரி கணவரால் கைவிடப்பட்டு தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றார்கள். நாட்கள், மாதங்கள், வருடங்கள் கடந்தன. கண்ணீரில் வாழ்ந்துவந்தார்கள். அவர்களுடைய கணவர் எங்கே சென்றார் என்று கூட அவளுக்குத் தெரியவில்லை. அவரிடத்திலிருந்து ஒரு கடிதமும் வரவில்லை என்றாலும், எப்படியாவது தன் கணவரை திரும்பக்கொண்டுவர வேண்டுமென்று ஆண்டவரிடத்தில் அழுது ஜெபித்து வந்தார்கள். ஆனால், சுற்றியிருந்த ஜனங்களோ அவர்களைப் பார்த்து, “நீ எத்தனையோ நாட்கள் காத்திருந்துவிட்டாய். உன் கணவரோடு சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை மிகவும் குறைவானதுதான். ஆகவே, இன்னொருவரை திருமணம் செய்துகொள்” என்று வற்புறுத்தினார்கள். ஆனாலும் அவர்கள் அதைக் கேட்காமல், “ஆண்டவர் எனக்கு உதவி செய்வார்” என்று சொல்லி ஆண்டவரை உறுதியாகப் பற்றிக்கொண்டார்கள். அதேபோல சுற்றியிருக்கிற ஜனங்கள் ஆச்சரியப்படும் விதமாக ஒரு வருடம் கழித்து அவர்களது கணவர் திரும்ப வந்தார்.  அந்த சகோதரி “இதை செய்தது ஆண்டவர்தான்” என்று சொல்லி அவரை மகிமைப்படுத்தினாள். மட்டுமல்ல எல்லாரிடமும் “ஆண்டவர் தான் என் கணவரை என்னோடு கொண்டு வந்து சேர்த்தார்” என்று சொல்லி மிகவும் சந்தோஷப்பட்டார்கள்
இப்படியாக நாமும் ஆண்டவரை உறுதியாகப் பற்றிக்கொள்ளும்போது, எந்தப் பிரச்சனையும் நமக்கு ஒரு மலையைப்போன்று தோன்றாது. நாம் எல்லாவற்றையும் ஆண்டவரிடத்தில் சமர்ப்பித்துவிடும்பொழுது, “உன் பாரத்தை என்மேல் வைத்துவிடு” (சங்கீதம் 55:22) என்று சொன்ன ஆண்டவர், என்ன கஷ்டமாக இருந்தாலும் சரி, கீழ்ப்படியாத பிள்ளைகளானாலும் சரி, அவை யாவற்றையும் சரிப்படுத்தி உங்களுக்கு பூரண சமாதானத்தைத் தருவார். “அவர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நிற்கும்” என்று வேதம் சொல்லுகிறது (சங்கீதம் 33:9). இந்தக் காரியத்தை அவர் ஒரே நிமிடத்தில் உங்களுக்குச் செய்ய முடியும். நாம் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொள்ளும்பொழுது,  ஆண்டவர் இந்தக் காரியங்களை உங்களுக்குச் செய்வார். “நிறைவானது வரும்பொழுது குறைவானது ஒழிந்துபோகும்” (1 கொரிந்தியர் 13:10).
Prayer:
அன்பின் பரலோக தேவனே,
ஒவ்வொரு நாளையும் உம்முடைய கிருபையால் நிரப்புகிறீரே ஸ்தோத்திரம்! என் குடும்ப வாழ்விலும்/தனிப்பட்ட வாழ்விலும் சமாதானமில்லாத பாதையின் வழியாய் நான் கடந்து வருகிறேன். என்னை இரட்சியும். உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. நீரே என் நம்பிக்கை. என் பாரத்தையெல்லாம் உம்மிடத்தில் ஒப்புகொடுக்கிறேன். எல்லாவற்றிலுமிருந்து என்னை விடுதலையாக்கும். என்னையும், என் குடும்பத்தாரையும் பூரண சமாதானத்தினால்  நிரப்பி ஆசீர்வதியும்!
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே, ஆமென்!

For Prayer Help (24x7) - 044 45 999 000