Loading...
Evangeline Paul Dhinakaran

உன் அலங்கத்திற்குள்ளே சமாதானம்!

Sis. Evangeline Paul Dhinakaran
10 Aug
பிரியமானவர்களே, இன்று கர்த்தர் அற்புதமான வாக்குறுதியை கொடுத்து உங்களை ஆசீர்வதிக்க விரும்புகிறார். “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்” (ஏசாயா 65:21). நீங்கள் வீடுகளை கட்டி, அவற்றில் குடியிருப்பீர்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார். “என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்” (ஏசாயா 32:18) என்று வேதத்தில் வாசிக்கிறோம். மேலும், “உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக” (சங்கீதம் 122:7) என்று ஆண்டவர் கூறுகிறார். நாம் சமாதானத்தோடு வாழும்படி தேவன் விரும்புகிறார். நம்முடைய அலங்கம் சமாதானத்தினால் நிறைந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறார். நாம் குடும்பத்திலுள்ள அனைவருடனும் நாம் சமாதானமாக இருக்க வேண்டும். இன்று தேவன் உங்களுக்கு அளித்துள்ள வாக்குறுதி இதுவே.
 
கர்த்தர் சாலொமோன் ராஜாவை எவ்வாறு சமாதானத்துடன் வாழும்படி ஆசிர்வதித்தார் என்பதை நாம் வேதத்தில் அறிந்தகொள்கிறோம். அவர் தனது அண்டை நாடுகளுடனே சமாதானத்துடன் வாழவும், அவர்களுடன் வர்த்தகம் செய்யவும், தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்கு தேவையான பொருட்களை பெறவும் ஏற்ற ஞானத்தை தேவன் அவருக்கு கொடுத்தார். அவர் இஸ்ரவேலை ஆண்டபோது, தேசத்தில் எங்கும் அமைதி நிலவியது. நமது அண்டை அயலகத்தாருடனே, சொந்த பந்தங்களுடனே சமாதானமாக வாழ தேவஞானம் நமக்கு தேவை. ஒருமுறை, ஒரே நேரத்தில் பிள்ளை பெற்ற இரண்டு பெண்களில் ஒருவளுடைய குழந்தை அவள் குழந்தையின்மீது திரும்பி படுத்ததினால் மரித்து போனது. அவள் உயிரோடிருக்கும் குழந்தை தன்னுடையது என்று வாதாடினாள். இந்த பிரச்சினையை தீர்த்து நியாயம்செய்யும்படி அந்த பெண்கள் சாலொமோன் ராஜாவினிடத்தில் வந்தார்கள். சாலொமோன் ராஜா ஞானத்தில் நிறைந்தவனாய் பட்டயத்தைக்கொண்டு குழந்தையை இரண்டாக பிளந்து பாதியை இவளுக்கும், பாதியை மற்றொருவளுக்கும் கொடுங்கள் என்றான். அதற்கு குழந்தையின் தாய், என் ஆண்டவனே பிள்ளையை கொல்லவேண்டாம். அதை அவளுக்கு கொடுத்துவிடும் என்றாள். அப்பொழுது ராஜா பிள்ளையை கொல்லவேண்டாம் என்று சொன்னவளுக்கு பிள்ளையை கொடுத்துவிடுங்கள். அவளே குழந்தையின் தாய் என்றான். அவருடைய ஞானமான தீர்ப்பு ஜனங்கள் மத்தியில் சமாதானத்தை கொண்டுவந்தது (1 இராஜாக்கள் 3:16-27). உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவராகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன். அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும் (யாக்கோபு 1:5). தேவனிடத்தில் கேட்கிறவர்களுக்கு அவர் ஞானத்தை தாராளமாய் கொடுக்கிறவராயிருக்கிறார். உங்கள் வீட்டாரை எப்படி நடத்த வேண்டுமென்ற ஞானத்தை தருமாறு கர்த்தரிடத்தில் கேளுங்கள்.  அவர் உங்களை ஞானத்தால் நிரப்புவார்.
“நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள்” (2 கொரிந்தியர் 6:16) தேவன் நமக்குள்ளே உலாவினால் அவரது பிரசன்னம் நமக்கு சமாதானத்தை கொண்டுவரும். அவரே நமக்கு தேவனாயிருப்பார். அவர் நமக்கு போதித்து, நடக்க வேண்டிய வழியிலே நம்மை நடத்துவேன் என்று வாக்குப்பண்ணியிருக்கிறார். “அந்த நாட்களுக்குப்பின் நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எபிரெயர் 10:16). தேவன் இதை செய்யும்போது, நீங்கள் காரியங்களை எப்படி செய்ய வேண்டுமென்கிற ஞானம் உங்களுக்கு அருளப்படும். தேவன் உங்களுக்கு சமாதானத்தை அருளுவார்.
Prayer:
அன்பின் தேவனே,

நீர் எனக்காக வீடுகளைக்கட்டி, என் வீட்டை சமாதானத்தினால் நிரப்புவேன் என்று வாக்குறுதி அளித்ததற்காக நன்றி. என் வீட்டிலுள்ள அனைவரும் சமாதானத்தோடே இருக்க உமது ஞானத்தினால் என்னை நிரப்பும். உமது பிரமாணங்களை என் இருதயத்திலே பதித்தருளும். இதனால் நான் என்ன பேசவேண்டும், என்ன செய்யவேண்டுமென்ற ஞானம் எனக்கு கொடுக்கப்படும். உமது தெய்வீக பிரசன்னமும் சமாதானமும் என்னை நிரப்புவதாக. 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000