Loading...
Paul Dhinakaran

சமாதானத்தின் பாதை!

Dr. Paul Dhinakaran
09 Oct
இன்று பலரும் வெவ்வேறு வழிகளில் மன அமைதியையும் சமாதானத்தையும் தேடுகிறார்கள். உலக இன்பங்களான, போதைபொருள், மதுப்பழக்கம், ஒழுக்கக்கேடான காரியங்கள், பண ஆசை போன்ற அழிந்துபோகிற விஷயங்களை நாடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், நம்முடைய தேவனோ தம்முடைய சமாதானத்தையே நமக்கு கொடுப்பதாக வாக்குப்பண்ணியிருக்கிறாh. தேவனுடைய வார்த்தையை பின்பற்றுவதன் மூலம் சமாதானத்தை நாம் பெற்றுக்கொள்ள முடியும். கடினமான சூழ்நிலைகளின் மத்தியிலும் நாம் இயேசுவை நோக்கிப் பார்க்கும்போது, அவர் ஒரு இரட்சகராக, நண்பராக தமது சமாதானத்தை நமக்கு கொடுத்து நம்மை ஆசீர்வதிக்கிறார். 

நியூ கினியாவிலுள்ள பப்புவா என்ற பழமையான பழங்குடியினரிடையே பல ஆண்டுகளாக மிஷனரியாக பணியாற்றிய டான் ரிச்சர்ட்சன்  என்பவர்  “சமாதான குழந்தை”  என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார். இது பப்புவா நியூ கினியாவின் இரண்டு வெவ்வேறு பழங்குடிகளுடைய கதை. இந்த இரு தரப்பினரும் தங்களுக்கிடையே குறுதி வடிய பல தலைமுறைகளாக சண்டையிட்டு வந்தனர். ஒவ்வொரு தலைமுறையினரும் தங்கள் காயங்களுக்காக மீண்டுமாக போராடி, போராடி அதிகமானோரை கொன்று குவித்துள்ளனர். பல வருட போராட்டத்திற்குப் பிறகு, இரு தரப்பினரும், இனிமேலும் என் ஜனங்கள் மரிக்கக்கூடாது, சண்டையை நிறுத்த வேண்டுமென்று உணர்ந்தனர். அதற்கு என்ன செய்ய வேண்டுமென்று சிந்தித்தனர். அப்போது டான் ரிச்சர்ட்ஸன், இரு பழங்குடி மக்களின் தலைவர்களுடைய குழந்தையை அழைத்து, அவர்களுக்கு “சமாதான குழந்தை” என்று பேரிட்டு, ஒரு பழங்குடி தலைவருடைய குழந்தையை, மற்றொரு பழங்குடி தலைவருடைய குடும்பத்தினர் தத்தெடுக்க வேண்டுமென்று கூறினார். அந்த குழந்தை வாழ்கிற வரையில், அனைவரும் வாழக்கூடிய வகையில் சண்டையை நிறுத்தப்போவதாக இரண்டு தலைவர்களும் உறுதியளித்தனர். தேவன் நம்மேல் வைத்த அன்பினிமித்தம், நமக்காக மரிக்கும்படி “சமாதான பிரபு” வாகிய தனது ஒரேபேறான குமாரனை இந்த பூமிக்கு அனுப்பினார்.    
பிரியமானவர்களே,  இயேசுவே அந்த “சமாதான பிரபு” என்று வேதம் கூறுகிறது. “கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்கு சமாதானம் கட்டளையிடக்கடவர்.” (எண்ணாகமம் 6:26) என்று வேதம் கூறுவதுபோல, தேவன் தமது சமாதான மழையை உங்கள்மீது பொழிந்தருளுவார். “அப்பொழுது எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (பிலிப்பியர் 4:7). நீங்கள் அவரை சந்திக்க ஆயத்தமா? வேத வசனங்களை படித்த, அவருடைய வார்த்தையை விசுவாசித்து, பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் வாழ்வில் புயல் போன்று எழும்புகிற பிரச்சினைகளை கண்டு கலங்காமல் அவற்றை தேவனிடத்தில் சமர்ப்பித்துவிடுங்கள். அவர் உங்களுக்கு கொடுத்திருக்கும் வார்த்தையில் நிலைத்திருங்கள். தேவன் தமது சமாதானத்தினால் உங்களை காத்துக்கொள்வார். 
Prayer:
அன்புள்ள ஆண்டவரே,

 நான் போராட்டமான சூழ்நிலையில் இருக்கிறேன். என் உதவியற்ற நிலையை கண்ணோக்கிப்பாரும். என்னுடைய ஜெபம் உமது சமூகத்தில் எட்டட்டும். என்றும் மாறாத உமது வாக்குறுதிகளை நான் நம்புகிறேன். உமது வார்த்தைகள் ஒருபோதும் வெறுமையாய் திரும்புவதில்லை. எனக்கு நீர் கொடுத்த வாக்குறுதிகள், உமது நோக்கத்தை நிறைவேற்றும் என்பதை நான் விசுவாசிக்கிறேன். சமாதான பிரபுவே, உம்முடைய சமாதானத்தினால் என்னை நிரப்பும். என் சிந்தையில் ரீங்காரமிட்டு என் சமாதானத்தை கெடுக்கின்ற தேவையற்ற சத்தங்களை நிறுத்தி, உமது வார்த்தைகளின் பக்கமாக என் கவனத்தை திருப்பியருளும். என் பிரார்த்தனைக்கு பதிலளித்தமைக்கு நன்றி.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.  

For Prayer Help (24x7) - 044 45 999 000