Loading...
Dr. Paul Dhinakaran

சோதனையை வென்றிடுங்கள்!

Dr. Paul Dhinakaran
28 May
என் நண்பரே, உலகம் மக்களை பாவம் செய்யும்படி தூண்டுகிறது. அது வீட்டிலோ, உங்கள் பணியிடத்திலோ அல்லது நீங்கள் தனியாக இருக்கும்போதோ, பாவம் ஒரு நிழலைப்போன்று உங்களை பின்தொடருகிறது. ஆகையால் தான், “எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்” (மத்தேயு 6:13) என்று ஒவ்வொரு நாளும் ஜெபிக்க இயேசு நமக்குக் கற்றுக்கொடுத்தார். தேவனால் தோற்கடிக்கப்பட்ட சாத்தான் ஒரு விழுந்துபோன தூதன், அவனைப்போல நாமும் பாவத்தில் விழவேண்டும் என்று அவன் விரும்புகிறான். அப்போதுதான் அவன் நம்மை குற்ற உணர்ச்சியால் துன்புறுத்த முடியும். ஆகவே தான் பேதுரு கூறுகிறார், “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” (1 பேதுரு 5:8). எனவே, நீங்கள் பாவத்திற்கு காரணமான விஷயங்களிலிருந்து விலகியிருங்கள். அது உங்கள் நண்பர்களின் கட்டாயப்படுத்தலோ அல்லது உங்கள் சொந்த பழக்கமாகவோ இருக்கலாம். கர்த்தர் நமக்கு கற்பித்த ஜெபத்தின்படி ஜெபிப்பதன் மூலம் சோதனையில் விழுந்துபோகாதபடி, கர்த்தர் உங்களை எல்லா தீமைக்கும் விலக்கிக் காப்பார். 

அநேக ஆண்டுகளுக்கு முன்பு, குடிகாரன் ஒருவன் இருந்தான். அவனுடைய தாய் அவனை அதிகமாய் நேசித்தாள். அவனும் தன் தாயை மிகவும் நேசித்தான். ஒருநாள் அந்தத்தாய், மரணப்படுக்கையில், தன் அன்பு மகனை அழைத்து, தேவபக்தியுள்ள ஒரு வாழ்க்கைத் துணை கிடைக்கும்வரை மது அருந்தமாட்டேன் என வாக்குக்கொடு மகனே” என்று கெஞ்சினாள். அடுத்த வினாடியே மகனும் அதற்கு சம்மதித்து வாக்குக்கொடுத்தான். தாய் மரித்தாள். அந்த மகனின் திருமணத்தன்று நண்பர்கள் அவனிடம் விருந்தொன்று வேண்டும் என கேட்டனர். அப்படியே அவன் சம்மதித்து அதற்கான ஆயத்தங்களை செய்தான். நண்பர்களின் விருப்பத்தின்படி எல்லோருக்கும் அந்த வாலிபன் அவன் கையால் மதுவை ஊற்றினான். திடீரென்று அந்த வாலிபனின் கைகள் மிகவும் நடுங்க ஆரம்பித்தன. மதுபாட்டில்கள் கீழே விழுந்து சுக்குநூறாக உடைந்தன. அவன் மனக்கண்களுக்கு முன்பாக, மரணப்படுக்கையில் தவித்த அன்பு தாயும், அவன் தாய்க்கு செய்து கொடுத்த வாக்குறுதியும் தோன்றியது. அந்த வினாடியே அவன் அந்த இடத்தை விட்டு எழுந்து வெளியே நடந்தான். 
பிரியமானவர்களே, ஒருவேளை நீங்கள் இதுபோன்ற சூழ்நிலையில் இருக்கும்போது, சிலுவையில் உங்களுக்காக தம் உயிரையே தியாகம் செய்த இரட்சகரை நோக்கிப் பாருங்கள். அப்பொழுது பிசாசு உங்களை விட்டு ஓடிப்போவான். தேவனிடத்தில் உங்களை அர்ப்பணியுங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான் (யாக்கோபு 4:7). நீங்கள் தேவனிடத்தில் திரும்பும்போது, அவர் தவறான காரியங்களில் விழாதபடி சோதனையிலிருந்து தப்புவிப்பார்.  ஆம், “தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடு கூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1 கொரிந்தியர் 10:13). தேவனையும், சாத்தானையும் ஒரே நேரத்தில் மகிழ்விக்க முடியுமா? அது முடியாதே. நீங்கள் தேவனை பிரியப்படுத்த விரும்பினால், சோதனைக்கு தப்பும்படி உதவிக்காக அவரை நோக்கிப்பாருங்கள். நிச்சயமாக அவர் உங்களை பரிசுத்தமாய் காப்பார். உங்களில் அன்புகூறுகிறவராலே நீங்கள் முற்றிலும் ஜெயங்கொள்ளுகிறவர்களாக இருப்பீர்கள் (ரோமர் 8:37).
Prayer:
பிதாவாகிய கர்த்தாவே,

என்னுடைய பாவங்களுக்காக நீர் சிலுவையில் பாடுகளை அனுபவித்தீர். உமக்கு நன்றி. என்னுடைய வழிகளை உமது கரங்களில் ஒப்புவிக்கிறேன். தீமையைவிட்டு விலகவும், சோதனைக்கு தப்பி பிழைக்கவும் உமது பெலனை தந்தருளும். உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் என்னை எல்லாவிதமான பொல்லாப்பிற்கும் விலக்கி காத்து உமது செட்டைகளின் கீழ் மூடி மறைத்துக்கொள்ளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000