Loading...

பாதுகாக்கும் தூதர்கள்!

Shilpa Dhinakaran
09 Nov
சர்வ வல்லமையுள்ள தேவன் எப்பொழுதும் உங்களுடனே கூட இருக்கின்றார். அவர் உங்களுக்கு முன்னே சென்று, நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பார். உங்களுக்கு முன்பாக எந்தவொரு மனிதரும் எதிர்த்து நிற்பதில்லை. உங்களுக்கு எதிராக எழும்புகிறவர்கள் மடங்கடிக்கப்பட்டு, ஏழு வழியாய் ஓடிப்போவார்கள் (யாத்திராகமம் 23:27). 

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு மிஷனரியை குறித்த கதை இது. அவர் ஒரு கிராமத்து மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அவர் தனது சைக்கிளில் நகரத்திற்குச் சென்று மருந்துகளையும், அவருக்கு தேவையான பொருட்களையும் வாங்கி வருவார். இவ்வாறு ஒருமுறை அவர் நகரத்திற்கு சென்றுவிட்டு காட்டு பாதை வழியே கிராமத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது காட்டின் நடுவே இரண்டு நபர் சண்டையிட்டு கொள்வதையும், அதிலொருவர் பலமாக காயமடைந்திருப்பதையும் கண்டு, காயம்பட்ட நபருக்கு  உடனடியாக மருத்துவ உதவிச்செய்து, கிறிஸ்துவின் அன்பை அவருடனே பகிர்ந்துகொண்டார். பின்பு அவரை நகரத்திற்கு அனுப்பி வைத்தார். 

சில வாரங்களுக்குப் பிறகு, காயமடைந்த அந்த நபர் மிஷனரியை நகரத்தில் சந்தித்தார். அப்போது, அவர் செய்யவிருந்த குற்றம் அவருக்குள் உறுத்திக்கொண்டிருந்தபடியால், அதை மிஷனரியிடம் பகிர்ந்துகொண்டார். (இது காயம்பட்ட அந்த நபருக்கு மிஷனரி சிகிச்சையளிப்பதற்கு முன்பு நடந்தது) “ஒருநாள் நானும் எனது நண்பர்களும் உங்களிடமிருந்த பணத்தை பறித்துக்கொண்டு, காட்டின் நடுவே உங்களை கொலை செய்ய திட்டமிட்டோம். நான் கத்தியை வெளியே எடுக்கவிருந்த நேரம்,  ஆயுதம் ஏந்திய 26 வீரர்கள் உங்களைச் சுற்றிலும் தோளோடு தோள் கொடுத்து பாதுகாப்பதை நான் மட்டுமல்ல, என்னுடனிருந்த என் நண்பர்களும் பார்த்து அதிர்ந்துபோனோம். அதனால் மட்டுமே நாங்கள் உமக்கு தீங்கு செய்யவில்லை” என்றான். 
அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியிலுள்ள ஒரு தேவாலயத்தில் இந்த சம்பவத்தை அந்த மிஷனரி பகிர்ந்துகொண்டபோது, சபையிலுள்ள ஒரு இளைஞன் அவசரமாக எழுந்து நின்று போதகரை இடைமறித்து, சம்பவம் நடந்த சரியான தேதி மற்றும் நேரத்தை அறிய விரும்பினான். “பாஸ்டர், நான் அந்த நேரத்தில் கோல்ஃப் விளையாடுவதற்காக புறப்பட்டேன். அப்போது உங்களுக்காக ஜெபிக்கும்படி ஒரு வலுவான உந்துதல் எனக்குள் ஏற்பட்டது. உடனடியாக சபையை கூடிவரச்செய்தேன். சரியாக 26 பேர் ஒன்றிணைந்து உங்களுக்காக ஜெபித்தோம் என்றான். என்ன ஒரு அதிசயம்! மிச்சிகனில் தேவஜனங்கள் ஒன்றாக கூடி ஜெபித்தபோது, மிஷனரிக்கு வரவிருந்த பெரிய ஆபத்திலிருந்து அவரைப்பாதுகாக்கும்படி தனது தூதர்களை தேவன் அனுப்பினார். எவ்வளவு அற்புதமான தேவன் நமக்கிருக்கிறார் பாருங்கள்! 

தாவீது கர்த்தருக்கு பிரியமானபடியினால், அவனை ஆபத்திலிருந்து பாதுகாத்தார் என்பதை நாம் வேதத்தில் வாசிக்கிறோம். இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலும்கூட தாவீதுக்கு முன்பாக நிற்க முடியவில்லை. கர்த்தர் நம்மீதும் பிரியமாயிருக்கிறார். நாம் அவருடைய அன்பு பிள்ளைகளானபடியால், நம்மைச் சுற்றியுள்ள பொல்லாப்பிலிருந்தும், சடிதியில் நேரக்கூடிய ஆபத்திலிருந்தும் அவர் நம்மைக் காப்பாற்றுவார். “உங்களுக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்” (ஏசாயா 54:17) என்று அவர் வாக்கு அருளியிருக்கிறார். ஆகவே, நீங்கள் எதைக்குறித்தும் கலங்காமல், அவரிடத்தில் விண்ணப்பம் பண்ணுங்கள். அவர் உங்கள் அருகிலேயே இருக்கிறார். நீங்கள் எங்கு சென்றாலும் அவர் உங்களை பாதுகாப்பார். 
Prayer:
அன்பின் தகப்பனே,

நான் எங்கு சென்றாலும் எப்போதும் என்னை சுற்றிலும் உமது தூதர்களை அனுப்பி எல்லாவிதமான பொல்லாப்பிற்கும், ஆபத்திற்கும் விலக்கிக் காப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். சாத்தானின் சகல சதித்திட்டங்களிலிருந்தும் நீர் என்னை பாதுகாக்கும் அரணாயிருக்கிறபடியினால் உமக்கு ஸ்தோத்திரம்.  எனக்கு விரோதமாய் எழும்புகிற எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும் என்ற உறுதியான வார்த்தைக்காக உமக்கு நன்றி. எனது ஒவ்வொரு நகர்வையும் பாதுகாக்கிறவரே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம். தொடர்ந்து உமது பாதுகாப்பின் வளையத்திற்குள் என்னை வைத்து மூடிமறைத்து பாதுகாத்தருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000