Loading...
Paul Dhinakaran

கீழ்ப்படிவதால் கிடைக்கும் நன்மை

Dr. Paul Dhinakaran
28 Jun
எனக்கு அன்பான சகோதரரே / சகோதரியே, இன்றைக்கு உங்களுக்கு உரிய எல்லா ஆசீர்வாதங்களையும் தேவன் ஏற்கனவே ஆயத்தம் செய்து வைத்திருக்கிறார். அதை விசுவாசித்து, இயேசுவின் நாமத்தில் அந்த ஆசீர்வாத அனுபவத்தினுள் கடந்து செல்லுங்கள். "நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்" (ஏசாயா 1:19)என்று தேவன் கூறுவதே இன்றைய வாக்குத்தத்தமாகும்.

"தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார். தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்" (ஆதியாகமம் 2:8,9)என்று வேதத்தில் வாசிக்கிறோம். "நீங்கள் மனமுவந்து கீழ்ப்படிந்தால் நிலத்தின் நன்மையை புசிப்பீர்கள்," என்று கர்த்தர் கூறுகிறார். ஆனால், ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படியாததால், ஆசீர்வாதத்தை இழந்துபோனார்கள். கர்த்தருக்குக் கீழ்ப்படிவதே எல்லா ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்வதற்கான துவக்கம் ஆகும். பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம் என்று வேதம் கூறுகிறது (1 சாமுவேல் 15:22).
எது கீழ்ப்படிதல்? இயேசுவின் ஜீவியத்தை கொண்டிருப்பதே கீழ்ப்படிதலாகும். இயேசு மரணபரியந்தம் தேவனுக்குக் கீழ்ப்படிந்தார் என்று வேதம் கூறுகிறது (பிலிப்பியர் 2:8).  எல்லோருடைய பாவங்களும் மன்னிக்கப்படும்வண்ணம், தம்முடைய ஜீவனை கொடுப்பதற்கு, சிலுவைக்குச் செல்லும்படி இயேசு கீழ்ப்படிந்ததினால், தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி ராஜாதிராஜாவாக உயர்த்தினார். நாமும் தினமும் வேதத்தின் வாயிலாகவும் பரிசுத்த ஆவியானவர் மூலமாகவும் தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டு, அவருக்குக் கீழ்ப்படிவது அவசியமாயிருக்கிறது. நாம் தேவனுக்குக் கீழ்ப்படியும்போது, அவர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் நம்மை மேன்மையாக வைப்பார் (உபாகமம் 28:1). நாம் தேவனுடைய வசனத்துக்குக் கீழ்ப்படிந்து, தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக நீதியானவற்றைச் செய்யும்போது, பிதா நம்மில் அன்பாயிருப்பார்; சர்வவல்ல தேவனாகிய இயேசு, பரிசுத்த ஆவியானவர் மூலமாக நமக்குள் வந்து வாசம்பண்ணுவார். அப்போது தேசத்தின் உச்சிதமான நன்மைகள் நமக்கு அருளப்படும் (யோவான் 14:23). ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் இழந்த நல்ல போஜனத்தையும், தேவ பிரசன்னத்தையும், சகல ஆசீர்வாதங்களையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். உங்கள் வாழ்வில் எல்லா ஆசீர்வாதங்களையும் சமாதானத்துடன் அனுபவிப்பீர்கள். இயேசு உள்ளே வரும்படி, உங்கள் இருதயத்தைத் திறந்திடுங்கள்; அவரைப் போல ஜீவித்திடுங்கள்; அப்போது உலகின் உச்சிதமான நன்மைகளைப் பெற்றுக்கொள்வீர்கள். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
Prayer:
பிதாவாகிய தேவனே,

இந்த அருமையான வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய உச்சிதமான ஆசீர்வாதங்கள் என் வாழ்க்கையில் விளங்கும்படி, நான்  உமக்குக் கீழ்ப்படிந்து உமக்குப் பிரியமான காரியங்களை செய்வதற்கு எனக்கு உதவி செய்யும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000