Loading...
Dr. Paul Dhinakaran

புதிய சிருஷ்டி!

Dr. Paul Dhinakaran
11 Jun
தேவன் மட்டுமே நம் வாழ்க்கையை கட்டப்படுத்தக் கூடியவர். ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்ள வேண்டிய காரியங்களை அவரே தீர்மானிக்கிறார் என்பதை நம்மில் பலர் உணர்வதில்லை. நம் வாழ்வில் நடக்கின்ற எல்லாவற்றையும் தேவன் பொறுப்பேற்கிறார் என்ற ஞானத்துடனே ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ள வேண்டும். இந்த உணர்வு நமக்குள் எழும்போது, நாம் அதிகாலையில் தேவனை தேடுகிறவர்களா இருப்போம். தேவ ஆசீர்வாதத்திற்காக அந்தந்த நாளை அவருடைய கரத்தில் ஒப்படைத்து, வேத வசனங்களையும் தியானிக்க வேண்டும். வேதவசனங்களின் மூலம் அந்தந்த நாளுக்குரிய வழிநடத்துதலை தேவன் நமக்கு வெளிப்படுத்துவார். நாம் அவரை நோக்கிப்பார்க்கும்போது அவர் நம்மை புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீரண்டையில் நடத்துவார். நாம் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் விலகியிருக்கும் வழி இதுவே. கண்ணுக்கு தெரியாத ஆபத்திலிருந்தும் அவர் நம்மை காப்பாற்றுவார். தேவன் நம் முன்னே செல்கிறபடியால், நமக்கு முன்னாக காணப்படுகிற பிரச்சினைகளை குறித்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை. இந்த அணுகுமுறை நம் இருதயத்தை சமாதானத்துடன் காத்துக்கொள்ள உதவும். 

கட்டடம் கட்டும் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவர் ஒரு சொந்த வீட்டைக் கட்ட நினைத்தார். ஆனால், கடுமையான இருதய நோய் அவரைத் தாக்கியது. தனது சேமிப்பை எல்லாம் மருத்துவ செலவுகளுக்காக செலவழித்தார். கடன், மலையைப்போல ஏறிற்று, அவர் நம்பிக்கையிழந்து குடிக்கு அடிமையானார். மருத்துவர்கள், இனி அவர் வேலைக்குச் செல்ல முடியாது என கூறிவிட்டார்கள். அவரது மனைவியோ அக்கம் பக்கத்து வீட்டு வேலைகளை செய்து வந்தார்கள். மகளின் கல்வியும் நின்று போயிற்று. எல்லா பக்கமும் வறுமை அவரை வாட்டியது. எல்லாவிதங்களிலும் அவர் புறக்கணிக்கப்பட்டார். அப்பொழுது இயேசு மனமிரங்கி, அவரை புதிய மனிதனாக்கி குணமாக்கினார். அதன்பிறகு, அவரது வாழ்க்கை மாறியது. குடிப்பழக்கம் ஒழிந்தது. இயேசுவை ஏற்றுக்கொண்டார். அவரது வாழ்வு மீண்டும் இயேசுவால் கட்டப்பட்டது.
நண்பரே, மூலைக்கல்லாகிய இயேசு, உங்கள் வாழ்வை கட்டுவார். இந்த உலகம் உங்களைக் கைவிட்டாலும், இயேசு உங்களை ஒருபோதும் கைவிடவே மாட்டார். உங்கள் வாழ்வை மீண்டும் கட்ட வல்லவராயிருக்கிற அவரிடம் வந்து சேர்வீர்களா? உங்களை நித்திய இராஜ்ஜியத்தின் சுதந்தரவாளியாக்குவார். நான் உங்கள் வாழ்க்கையை கட்டி எழுப்புவேன், உங்களோடு வந்து வாசம்பண்ணுவேன் என்று கூறுகிற இயேசுவை இன்றே பெற்றுக்கொள்ளுங்கள். பிரியமானவர்களே, இன்றைக்கு இயேசுவாகிய அஸ்திபாரத்தின் மீது உங்கள் வாழ்க்கையை கட்டி எழுப்புங்கள். நாம் அறிந்திருக்கிறபடியே அவர் ஏற்ற வேளையில் எல்லாவற்றயும் நேர்த்தியாக செய்து முடிப்பார் (பிரசங்கி 3:11). தேவனால் செய்ய முடியாத காரியமென்று எதுவுமில்லை. காகத்தை அனுப்பி எலியாவுக்கு உணவளித்ததுபோல, உங்கள் தேவைகளும் பூர்த்தி செய்யப்படும். யேசபேலின் கோபத்திலிருந்து தீர்க்கதரிசிகளை பாதுகாத்ததுபோல, அவர் உங்களையும் எல்லா தீங்கிலிருந்தும் பாதுகாப்பார். உங்களுக்கு ஒரு புதிய வாழ்க்கை தேவைப்பட்டால், முதலாவது நீங்கள் மாற வேண்டும். அதைத்தான் “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுஷ்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” (2 கொரிந்தியர் 5:17) என்று வேதம் கூறுகிறது,  தேவனுக்கு பிரியமற்ற பழைய வாழ்க்கையை களைந்து, புது சிருஷ்டியாய் மாறுங்கள். அப்பொழுது உங்கள் வாழ்வு செழிக்கும். இல்லாமைகள் மறைந்து பூரண ஆசீர்வாதங்கள் உண்டாகும்.
Prayer:
என்னை நேசிக்கிற அன்பின் தகப்பனே, 

நீர் இன்று என்னோடு பேசினபடியால் உமக்கு நன்றி. என் வாழ்க்கையில் நீர் மூலைக்கல்லாயிருக்கிறபடியால் உம்மைத் துதிக்கிறேன். உடைந்துபோன என் வாழ்வை உமது கரங்களில் ஒப்படைக்கிறேன். நீரே என் இரட்சிப்பின் கன்மலை. பாவம் நிறைந்த பழைய மனிதனை என்னிலிருந்து களைந்து, என்னை புதிய சிருஷ்டியாய் மாற்றும். உமக்குள் நான் என்றென்றும் வாழ்ந்திருக்க உதவும். இன்றைக்கு முழு இருதயத்தோடு என்னை உம்மிடத்தில் அர்ப்பணிக்கிறேன், ஏற்றுக்கொண்டருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000