Loading...
Evangeline Paul Dhinakaran

நீங்கள் நீதியின் கனிகளை தருவீர்கள்

Sis. Evangeline Paul Dhinakaran
28 Sep

அன்பு சகோதரரே / சகோதரியே, இன்று, "என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்" (யோவான் 15:4) என்ற வேதவசனத்தை ஆண்டவர் வாக்குத்தத்தமாக உங்களுக்குக் கொடுக்கிறார். ஆண்டவர் உங்களோடு பேசவும், ஐக்கியம்கொள்ளவும், உங்களோடு ஒன்றாய் இருக்கவும் விரும்புகிறார். ஆகவேதான் பவுல் அப்போஸ்தலன், "கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?" (ரோமர் 8:36) என்று தைரியமாகச் சொல்லுகிறான். கிறிஸ்துவின் அன்பு அப்படிப்பட்டது. இந்த உலகிலுள்ள எந்த காரியத்தாலும் நம்மை தேவனுடைய அன்பிலிருந்து பிரிக்க முடியாது.

மரியாள் மற்றும் மார்த்தாளின் வீட்டுக்கு ஆண்டவர் இயேசு பலமுறை சென்றதாக வேதத்தில் வாசிக்கிறோம். மார்த்தாள், விருந்தினர்களை உபசரிப்பதிலும், எல்லோருக்கும் உணவை ஆயத்தம்பண்ணுவதிலும் வேலையாயிருந்தாள். மரியாள், இயேசுவின் பாதத்தினருகே அமர்ந்து தேவனுடைய சமுகத்தை அனுபவித்து, அவருடைய போதனைகளை கேட்டுக்கொண்டிருந்தாள். ஆகவேதான் இயேசு மார்த்தாளிடம், "மரியாள் நல்ல பங்கை தெரிந்துகொண்டாள்," என்று கூறினார். அன்பு சகோதரரே / சகோதரியே, இயேசுவே உங்களுக்கு ஒரே வழியாக இருக்கிறார். நீங்கள் அவரில் நிலைத்திருக்கும்போது, நீதியின் கனிகளைக் கொடுப்பீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஆண்டவர் உங்களை இன்னும் பரிசுத்தமானவராக, நீதியுள்ளவராக மாற்றவேண்டுமென்று ஜெபித்து வாழ்த்துகிறேன்.

தம்மோடு ஒன்றாய் இருப்பதன் முக்கியத்துவத்தை ஆண்டவர், "நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்" (யோவான் 15:7) என்று கூறுகிறார். நீதியின் கனிகளைக் கொடுக்கும்படி இப்படியான வாழ்க்கையை உங்களுக்கு அளிக்கவே ஆண்டவர் விரும்புகிறார். ஆகவே, எளிதாக ஆண்டவரோடு இணைந்துகொள்ள முடியும். உங்கள் சத்துருக்களை கண்டு பயப்படாதிருங்கள். "தேவன் என் பட்சத்திலிருக்கிறார்; நான் பயப்படேன்," என்று விசுவாசத்தோடு அறிக்கையிடுங்கள். மனுஷன் உங்களுக்கு என்ன செய்துவிட முடியும்? இன்று ஆண்டவருடைய ஆசீர்வாதமான கரம் உங்கள்மேல் வரும். நீங்கள் கனி நிறைந்த மரமாக, நீதியின் கனிகளை கொடுக்கும் மரமாக மாறுவீர்கள். நீங்கள் ஜெபத்தில் தேவனிடம் எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவை உங்களுக்குக் கொடுக்கப்படும். ஆகவே, சந்தோஷமாயிருங்கள்!

Prayer:

அன்புள்ள ஆண்டவர் இயேசுவே, உம்முடைய வசனத்தின் மூலம் என்னோடு பேசுகிறதற்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, நான் உம்மை மட்டுமே பற்றிக்கொண்டிருக்கிறேன். நீரே என் ஒரே நம்பிக்கை. உம்மைப்போல என்னை வேறு யாராலும் நேசிக்க இயலாது. ஆண்டவரே, என்னுடைய இருதயத்தை உம்முடைய அன்பினால் நிரப்பும். உம்மோடு உறுதியான உறவை கட்டியெழுப்ப விரும்புகிறேன். நான் உம்மில் நிலைத்திருக்கவும், உம்மோடு ஒன்றாய் இருக்கவும் விரும்புகிறேன். நான் கனி தரும் மரமாக, உம்முடைய மகிமைக்கென்று நீதியின் கனிகளை கொடுக்க எனக்கு உதவும். இந்த உலகின் எந்த காரியமும் உம்முடைய அன்பினின்று என்னை பிரிக்காதிருக்கட்டும். என்னை இறுகப் பற்றிக்கொண்டு ஆசீர்வதித்தருளும். பழையவைகள் எல்லாம் ஒழிந்துபோகட்டும். எனக்கு எதிராக கிரியை செய்யும் அந்தகார வல்லமைகள் யாவும் இயேசுவின் நாமத்தில் ஒழிந்துபோவதாக. ஆண்டவரே என்னை விடுவித்து, உம்முடைய நீதியினால் நிறைத்தருளும். என்னுடைய கரத்தைப் பிடித்து, என்னை கனி தரும் மரமாக மாற்றுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் மற்றவர்களுக்கு ஆசீர்வாதத்தின் வாய்க்காலாக விளங்க விரும்புகிறேன். ஆண்டவரே, என் வாழ்க்கையை கட்டியெழுப்பி, என்னை பயன்படுத்துவீராக. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000