Loading...
Stella dhinakaran

பொருத்தனைகளை நிறைவேற்றுங்கள்!

Sis. Stella Dhinakaran
16 Jun
அன்னாள் என்ற பெண்ணின் மனக்கிலேசத்தை ஆண்டவர் கவனித்தார். அதுமட்டுமல்லாமல், அவள் செய்த பொருத்தனையை கூர்ந்து நோக்கினார். பொருத்தனை செய்த அவளுக்கு அவள் விரும்பி வேண்டிக்கொண்ட ஆசீர்வாதமாகிய குழந்தையையும் அருளிச்செய்தார். குழந்தையை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்ட அவள் தன் பொருத்தனையின்படியே அந்த குழந்தையை ஆண்டவருக்கென்று அர்ப்பணித்து, அதை நிறைவேற்றினாள் (1 சாமுவேல் 1:28). அப்படி பொருத்தனையின் மூலமாய் அர்ப்பணிக்கப்பட்ட மகன் தான் “சாமுவேல்” தீர்க்கதரிசி. அந்த தாயின் பொருத்தனையின் மூலமாய் எவ்வளவு அருமையான ஒரு பாலகனை ஆண்டவர் அவளுக்கு கொடுத்தார் (1 சாமுவேல் 2:21). இன்றைக்கும் அன்னாளைப் போலவே ஆண்டவருக்கு பொருத்தனை செய்து, அதை நிறைவேற்றும்பொழுது, கர்த்தர் அந்த பொருத்தனையின் மூலமாய் உங்களையும் நிறைவாய் ஆசீர்வதிப்பார் (சங்கீதம் 116:18,19).

ஒரு விதவைத் தாய் தன் இரண்டு பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தாள். தானும் ஒரு வேலை செய்து அதின் மூலமாய் கிடைத்த பணத்தில் பத்தில் ஒரு பாகத்தை தனது கஷ்டமான வாழ்வின் மத்தியிலும் கர்த்தருக்கென்று கொடுப்பதில் ஜாக்கிரதையாய் இருந்தாள். எதிர்பாராதவிதத்தில் அவள் மகனுக்கு தகப்பனுடைய வேலையை அவர் பணி செய்த அலுவலகத்திலிருந்து கூப்பிட்டு கொடுத்தார்கள். இதன் மூலமாய் அவர்களுடைய வருவாய் மேலும் அதிகரித்தது. அதிலும் அந்த தாய் கர்த்தருக்கென்று தசமபாகம் ஒழுங்காய் செலுத்தி வந்தார்கள். ஆண்டவரே, என் பிள்ளைகளுடைய எதிர்காலத்தை நீரே பொறுப்பெடுத்துக்கொள்ளும். அவர்கள் இரண்டு பேரையும் எல்லாக் காரியங்களிலும் சிறந்து விளங்கும்படி நீரே வழிநடத்த வேண்டுமென்றும், உம்முடைய சமுகத்தில் எப்படியாவது ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை உம்முடைய ஊழியத்திற்கென்று அளிப்பேன் என்றும் பொருத்தனை செய்து கொண்டார்கள். அந்த குறிப்பிட்ட அளவு என்பது அவர்களுக்கு மிகப்பெரிய தொகை தான். எனினும், அதையெல்லாம் அவர்கள் யோசிக்கவில்லை. என்ன ஆச்சரியம்! அவர்களுடைய மகளும் நிறைய படித்து முடிக்கவும், அவளுக்கும் ஒரு அருமையான வேலையை ஆண்டவர் எதிர்பாராத அளவில் கொடுத்தார். இரண்டு பிள்ளைகளும் சம்பாதிக்க ஆரம்பித்தபடியால், இந்த தாய் தான் பொருத்தனை செய்தபடியே அந்த பெரிய தொகையை உடனடியாக ஆண்டவருடைய ஊழியத்திற்கென்று அர்ப்பணித்தார்கள்.
ஆம்! அன்பு சகோதர சகோதரிகளே, இன்று நீங்களும் ஆண்டவருடைய காரியத்தில் ஜாக்கிரதையாய் பொருத்தனை செய்வீர்களானால், கர்த்தர் உங்கள் பொருத்தனையையும் நிறைவேற்றி பலன் கொடுப்பார் அதன்மூலம் நீங்கள் எதிர்பார்த்ததற்கு மேலான ஆசீர்வாதத்தை அருளிச்செய்வார் (ஆதியாகமம் 28:22; 32:10,12). உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பொருத்தனை செய்யுங்கள். ஆனால், அன்னாளைப்போன்று தீவிரமான தேவையிருப்பின், பொருத்தனை செய்து அதை தேவநாம மகிமைக்காக தீவிரமாய் நிறைவேற்றுங்கள். உணர்ச்சியின் மிகுதியால் நிறைவேற்ற முடியாத பொருத்தனைகளை செய்யாதீர்கள். “பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும்” (நீதிமொழிகள் 20:25). “நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற்போவதைப்பார்க்கிலும், நேர்ந்துகொள்ளாதிருப்பதே நலம்.” (பிரசங்கி 5:5). ஆகவே, நீங்கள் பொருத்தனை செய்யும்போது, தேவநாமத்தை மகிமைப்படுத்துகிற பொருத்தனைகளையே செய்யுங்கள். தேவனுடைய நற்செய்தி பரம்புவதற்கு உங்கள் பொருத்தனை உதவியாயிருக்கும். அன்னாளைப்போலவே உங்கள் தியாகமும் ஜனங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அத்தகைய பொருத்தனைகளை மட்டும் செய்யுங்கள். தேவன் உங்களை வழிநடத்துகிறபடி, உங்கள் பொருத்தனைகளை நிறைவேற்ற ஆயத்தமாகவும் இருங்கள். நீங்கள் கேட்பதை அவர் நிச்சயமாக உங்களுக்கு அருளுவார்.
Prayer:
அன்பு இரட்சகரே,

நான் உமக்கு பயப்படும் பயத்தோடு, அன்னாளைப் போல பொருத்தனை செய்வதிலும், அதை நிறைவேற்றுவதிலும் கவனமாய் இருந்து அதன்மூலம் உம்முடைய ஆசீர்வாதங்களை நிறைவாய் பெற்றுக்கொள்ள அருள்தாரும். எனது வருமானத்தில் ஒரு பகுதியை உமக்கு கொடுக்கும்படி என்னை வழிநடத்தும். அதினால் நீர் என்னை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பீர் என்று நான் விசுவாசிக்கிறேன். எந்நிலையிலும் என் பொருத்தனையை நிறைவேற்றவும், அதன்மூலம் உமது நாமம் மகிமைப்படவும் உதவிச்செய்தருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000