Loading...
Stella dhinakaran

தேவ வல்லமையின் மாட்சிமை!

Sis. Stella Dhinakaran
05 Jun
சாத்தியமற்ற சூழ்நிலையை எதிர்கொள்கிறீர்களா? ஆரோக்கியத்தில் பிரச்சினையா? குடும்பத்தில் பிரச்சினைகளா? போதைபழக்கம் போன்ற அடிமைத்தனமா? நம்முடைய தேவன் முழு உலகத்தையும் படைத்தவர் (ஆதியாகமம் 1ம் அதிகாரம்), செங்கடலை இரண்டாக பிரித்தவர் (யாத்திராகமம் 14:21), மரித்த லாசருவை உயிரோடே எழுப்பியவர் (யோவான் 11:44), ஐந்து அப்பத்தையும், இரண்டு மீனையும் கொண்டு 5000 பேரை போஷித்தவர் (மத்தேயு 14:21). நம்முடைய தேவனால் செய்ய முடியாத காரியங்கள் ஒன்றுமில்லை. நீங்கள் எப்படிப்பட்ட சோதனைகளை எதிர்கொண்டாலும், நீங்கள் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும், இயேசுவை நோக்கி பாருங்கள்! நீங்கள் எதிர்கொள்கிற ஒவ்வொரு பிரச்சினையிலிருந்தும், உங்களை பலவீனப்படுத்தி விழச்செய்கிற பாவச்செயல்களிலிருந்தும் அவர் உங்களை விடுவிக்க வல்லவர். 

ஒரு பெண்கள் மாநாட்டில் நான் செய்தி கொடுத்துக்கொண்டிருக்கும்போது, மனநிலை சரியில்லாமையினால் வாழ்க்கையில் வேதனையோடிருந்த ஒரு சகோதரி அந்த கூட்டத்தில் வந்து அமர்ந்திருந்தார்கள். அப்போது நான், “நீங்கள் விசுவாசித்தால் தேவ மகிமையை காண்பீர்கள்” என்று கூறி அங்கு குழுமிருந்த சகோதரிகள் ஒவ்வொருவரையும் ஆறுதல்படுத்திக்கொண்டிருந்தேன். அந்த குறிப்பிட்ட சகோதரி பைத்தியக்காரி போல் அடிக்கடி வீட்டை விட்டே ஓடிவிடுவார்களாம். மட்டுமல்ல, உதிரப்போக்கினால் அவர்கள் சரீரம் மிகவும் துர்நாற்றமெடுக்கும். பிள்ளைகள் கூட அவர்கள் பக்கத்திலே உட்காரமாட்டார்கள். திடீரென்று வீட்டை விட்டு ஓடிவிடுவதால், அலுவலகத்திற்கு செல்லும் கணவர் தன் மனைவியை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டுதான் போவாராம். அடுத்த வாரம் மனநிலையிழந்தோர் மருத்துவமனைக்கு கொண்டு சேர்ப்பதாக அவர் திட்டமிட்டிருந்தார். இந்த நிலைமையிலே அவர்கள் மிகுந்த விசுவாசத்துடன், இடம் தெரியாமல் இருந்தபொழுதும், ஒரு ரிக்ஷாக்காரரிடம் வழிகேட்டு அழுதுகொண்டே கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். அவர்கள் உள்ளே நுழையும்போது, பிரசங்கித்துக்கொண்டிருந்த நான், “பிரிசில்லா, நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்” என்று கூறினேன். அவர்கள் பெயரும் பிரிசில்லா என்றிருந்தபடியால், நான் கூறின அந்த வார்த்தைகளை அவர்கள் தனக்காகவே எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விசுவாசம் பெருகியது. அவர்கள் தேவ மகிமையைக் காணும்படி தேவன் உடனடியாக ஒரு அதிசயம் செய்தார். தேவ வல்லமை அந்நேரமே அவர்களுக்குள் இறங்கியது. உடனே பரிபூரண சுகம் பெற்று, மகிழ்ச்சியோடு வீடு திரும்பினார்கள்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இன்றும்கூட இந்த வல்லமையுள்ள தேவனால் நம்முடைய வாழ்க்கையிலும் அதிசயங்களை செய்ய முடியும் (சங்கீதம் 77:14). உங்கள் வாழ்வில் அற்புதத்தை நடப்பிக்க ஆண்டவரும் வாஞ்சையாயிருக்கிறார். உங்கள் நம்பிக்கை ஒருநாளும் வீண்போகாது. தேவனால் கூடாத காரியம் என்று எதுவுமில்லை. தேவனால் எல்லாம் கூடும். உங்கள் துன்பங்கள், நோய்கள், இழப்புகள், ஏக்கங்கள் எதுவாயிருப்பினும், விசுவாசத்துடன் தேவனை நோக்கிப்பாருங்கள் (எபிரெயர் 12:2). அவரையே பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். அதிசயங்கள் செய்கிறவர் உங்கள் பிரார்த்தனைக்கு பதிலளிப்பார். நிச்சயமாக உங்கள் வாழ்வில் அற்புதம் நடக்கும். 
Prayer:
அன்பின் பரலோகப்பிதாவே,

என் வாழ்வில் நான் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எதுவாயிருப்பினும், அதை மாற்ற உம்மால் கூடுமென்பது எனக்குத் தெரியும். எப்போதும் உம்மை நம்புகிற நம்பிக்கையை எனக்குள்அதிகமாய் வைத்தருளும். உம்மீதும் உமது வல்லமையின்மீதும் நான் கவனம் வைக்க உதவிச்செய்தருளும். என் வாழ்விலுள்ள கஷ்டங்கள், வேதனைகள் அனைத்தையும் உம்மண்டையில் கொண்டு வருகிறேன் (1 பேதுரு 5:7). பயப்படாமல் உம்மை நம்புவதற்கு எனக்கு உதவிச்செய்தருளும். உம்முடைய பலத்தின்மீது எனக்கு பூரண நம்பிக்கை உண்டு.  நீர் எனக்காக யுத்தம்பண்ணி, எனக்கு வேண்டியதை பெற்றுத்தருவீர் என்று விசுவாசிக்கிறேன். நீர் வல்லமையும், நீதியும், இரக்கமும், உருக்கமும் நிறைந்த தேவன்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000