Loading...
Samuel Paul Dhinakaran

நீங்கள் தனிமையில் இல்லை!

Samuel Dhinakaran
20 Jun
நண்பர்களே, நாம் சில நேரங்களில் தனிமையாக உணர்கிறோம் அல்லவா! மக்கள் நம்மைச் சுற்றிலும் மனிதர்கள் இருந்தாலும் நாம் சில நேரங்களில் தனியாக உணர்கிறோம். நம் இருதயத்திலுள்ள வெறுமையை ஜனங்களால் நிரப்ப முடியாது. ஆகவே தான், நம்முடன் எப்பொழுதும் தேவபிரசன்னம் இருக்க வேண்டும். தேவன் நம்மோடுகூட இருப்பது உணர்வுகளை அடிப்படையாக கொண்டதல்ல. தேவன் உங்களோடு இருப்பதை ஒரு சிலிர்ப்பினால் அறிந்துகொள்ள வேண்டுமென்று எதிர்பார்ப்பது தவறான ஒரு உணர்வு. இதைக்குறித்து தேவனுடைய வார்த்தை கூறுகிறது, “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.” (ஏசாயா 41:10). தனிமையில் சோர்ந்து போகாமலிருக்க, தேவனுடைய வார்த்தையை விசுவாசியுங்கள்.

இந்த ஊரடங்கு நாட்களிலும்கூட ஜனங்கள் தனிமையுடன் போராடுகிறார்கள். சிலர் தனியாக தங்கள் வீடுகளில் சிக்கியுள்ளனர். இன்னும் சிலர் குடும்பத்தினருடன் இருந்தாலும் தனிமையின் பாதையில் செல்கிறார்கள். ஏனெனில், அவர்கள் தங்கள் நண்பர்களுடனோ அல்லது அவர்கள் விரும்பும் நபர்களுடனோ இருப்பதற்கு வாய்ப்பில்லை. இப்படிப்பட்ட காலங்களிலும் மாறாத உண்மையுடன் நம்மோடிருக்க விரும்புகிற ஒருவர் இயேசு மட்டுமே. நிழலைப்போல் ஆண்டவர் நிலைமாற மாட்டார். சூரியன் நிலை மாறும்போது, நிழல்கள் தங்கள் நிலையை மாற்றுகின்றன. ஆனால், ஆண்டவர் அப்படி இல்லை. உங்கள் வாழ்வின் மிக உயர்ந்த நிலையில் உங்களுக்கு எல்லா ஆசீர்வாதங்களையும் கொடுத்த ஆண்டவர், உங்கள் குறைவின் மத்தியிலும் மாறாதவராக உங்களோடுகூடவே இருக்கிறார். அவர் உங்களுடைய நல்ல மேய்ப்பராக இருப்பதால் நீங்கள் எங்கு சென்றாலும் அவர் உங்களைப் பின்தொடர்கிறார். நீங்கள் அவரைத் தேடவில்லை. அவர் உங்களைத் தேடிவந்தார் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். நீங்கள் எங்கு சென்றாலும் அவர் உங்களோடுகூடவே இருப்பார்.  
“இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது” (ஏசாயா 49:16) என்று கூறிய ஆண்டவர் எப்போதும் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். உங்கள் உட்காருதலையும் எழுந்திருக்குதலையும் அவர் அறிந்திருக்கிறார்;  உங்கள் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறார் (சங்கீதம் 139:2). நீங்கள் தனிமையாக உணரும் நேரத்திலும் உங்கள் எண்ணங்களை தேவன் அறிந்திருக்கிறார். நான் உன்னை நேசிக்கிறேன் என்று உங்களுக்கு சொல்ல விரும்புகிறார். “தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்; துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள்” (சங்கீதம் 68:6). நீங்கள் ஒரு அடிமையைப்போல சங்கிலியால் கட்டப்பட்டிருக்கலாம். உங்கள் சொந்த ஜனங்களால் கைவிடப்பட்டிருக்கலாம். தேவன் உங்களை எப்பொழுதும் அன்போடு அணைத்துக் கொள்வேன் என்று உறுதியளிக்கிறார். ஆனால், அன்பற்ற சூழ்நிலையில் நீங்கள் எவ்வாறு பிரதிபலிக்க விரும்புகிறீர்கள் என்பதை தேர்ந்தெடுப்பது உங்கள் விருப்பமே. நீங்கள் தேவனுடைய சத்தியத்தை பிடித்துக்கொள்ளலாம் அல்லது கோபத்துடனே செயல்பட தீர்மானிக்கலாம். எதிர்மறையான சூழலிலும் நாம் கர்த்தருக்காக காத்திருக்கும்போது, அவர் நமக்கு ஒரு தெய்வீக குடும்பத்தையும், சூழ்நிலையையும், நண்பர்களையும் கொடுப்பார். அவருடனே நீங்கள் இனிமையான ஒரு உறவை அனுபவிக்க முடியும். கர்த்தர் உங்களை இனிமையான பாடல்களால் சூழ்ந்துகொள்வார். உங்கள் ஆசீர்வாதத்தின் நாட்கள் மிக அருகில் உள்ளது என்று நான் விசுவாசிக்கிறேன். 
Prayer:
அன்பின் பரலோகத்தகப்பனே,

என்னுடன் பேசியதற்கு நன்றி. நான் தனியாக இல்லை என்பதை எனக்குதெரிவித்ததற்கும் நன்றி. நாள் முழுவதும் நீர் என்னை கவனித்துக் கொள்வீர் என்று வாக்குறுதியளித்ததற்க்கு நன்றி. என் மதில்கள் எப்போதும் உமக்கு முன்பதாக உள்ளது. நான் உமது நீதியைப் பற்றிக்கொண்டு அதிலே உத்தமமாய் நடக்க கிருபை செய்தருளும். என் தனிமை உணர்வை மாற்றியருளும். என்னைப்போன்ற தனிமையின் பாதையில் செல்லும் ஜனங்களுக்கு அன்பைக் காட்ட எனக்கு உதவும். என்னைச்சுற்றிதுலும் அன்பான மனிதர்களையும், தெய்வீக உறவுகளையும் வைத்தருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000