Loading...
Dr. Paul Dhinakaran

உங்கள் குடும்பத்தினரை நேசியுங்கள்!

Dr. Paul Dhinakaran
02 Jun
நானும் என் மனைவி இவாஞ்சலினும் 31 வருட குடும்ப வாழ்க்கையை ஒற்றுமையாய் வாழ தேவன் கிருபை செய்தார். இன்று, எங்களுடைய 31 வது திருமண நாளை கொண்டாடுகிறோம். தேவன் எங்களுக்கு கொடுத்த எல்லா நன்மைகளுக்காகவும், சந்தோஷமான வருடங்களுக்காகவும், உள்ளத்தின் ஆழத்திலிருந்து அருக்கு நன்றி கூறுகிறோம். பலரின் குடும்ப வாழ்க்கை எரிச்சலாக தொடங்கி எரிச்சலாகவே முடிவடைகிறது. ஒவ்வொரு நாளும் நமது காலைப்பொழுதை நாம் குடும்ப ஜெபத்துடனே ஆரம்பிக்க வேண்டும். சரியான காரியங்களை செய்ய தேவ கிருபையை நாட வேண்டும். அப்பொழுது, தேவன் நம் குடும்ப உறுப்பினர்களை சமாதானத்தினாலும் மகிழ்ச்சியினாலும் நிரப்புவார். நாம் நம் துணையை மதிக்காதபோது, அவர்களை ஒரு பொருட்டாக எண்ணாதபோது, நம் வாழ்க்கை சமாதானமாய் இருக்காது. குடும்ப வாழ்க்கை என்பது கொடுப்பதில் இருக்கிறது. நம்முடைய அன்புக்குரியவர்களுக்கு நாம் நமது நேரத்தையும், அன்பையும், உடைமையையும் கொடுக்க வேண்டும். இதன்மூலம் நமது அன்புக்குரியவர்களோடு நாம் செலவிடுகிற நேரத்தை அவர்கள் சந்தோஷமாய் அனுபவிப்பார்கள்.

 “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக” (மாற்கு 12:31). என்ற வார்த்தையின்படி நாம் வாழ்ந்தால், அதுதான் தேவனை சந்தோஷிப்பிக்கும். மேலும், இந்த பிரதானமான கற்பனையில் கூறியுள்ளபடி நமது குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் அன்பு காண்பிக்க வேண்டும். முதலில் நாம் இதில் பரிபூரணமடைய தேவனிடத்தில் ஜெபிக்க வேண்டும். நம்மூலம் மற்றவர்களும் ஆசீர்வதிக்கப்படுவார்கள். நாம் தன்னலமற்றவர்களாக வாழ வேண்டும். நம்முடைய வாழ்க்கை துணையையும், குழந்தைகளையும் கனம் பண்ண வேண்டும். நமக்கு முன்னுரிமையாக தோன்றுகிற காரியங்களை அவர்களுக்காக தியாகம் செய்ய வேண்டும். தம்பதிகள் எப்பொழுதும் ஒருவருக்கொருவர் மனத்தாழ்மையை அணிந்துகொள்ள வேண்டும். மேற்கத்திய நாடுகளுக்கு நாங்கள் செல்லும்போது, சிலர் என்னையும் என் மனைவியையும் பார்த்து, என்னிடம் “நீங்கள் ஒரே மனைவியுடன் வாழ்கிறீர்களா?” என்று ஆச்சரியப்படுகிறார்கள்! நாம் ஒருவருக்கொருவர் கிறிஸ்துவின் பிரமாணத்தை இனிதே நிறைவேற்றும்போது, ஆண்டவர் குடும்ப வாழ்க்கையை தமது அன்பால் நிரப்புகிறார். 
இளவயதில் நான் ஊழியம் செய்துகொண்டிருந்தேன். என் மனைவிக்கு ஊழியம் புதியது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல ஊழியத்தின் சுமைகளை அவர்களும் பகிர்ந்துகொண்டு என்னோடு சேர்ந்து ஊழியம் செய்ய பழகிவிட்டாள். அவள் என் சுமையை பகிர்ந்துகொண்டாள், நான் அவளுடைய சுமைகளை பகிர்ந்துகொண்டேன். இப்படித்தான் எங்கள் வாழ்க்கை நகர்ந்தது. ஒரு குடும்ப தலைவன் தேவசாயலை கொண்டிருக்கிறான். இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் (எபேசியர் 5:31) என்று வேதம் கூறுகிறது. இந்த வார்த்தையின்படியே, உங்கள் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் முக்கித்துவம் கொடுங்கள். ஒரு கணவனும் மனைவியும் இணைந்து தங்கள் சொந்த குடும்பத்தை முதலாவது கவனித்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒருவருக்கொருவர் அவர்களது பெற்றோரை கவனித்துக்கொள்ள வேண்டும். குடும்பத்திற்காக கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் கருத்தை பகிர்ந்துகொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும். இதையெல்லாம் செய்வது குடும்பத்தில் அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரும். கணவனும் மனைவியும் அன்பில் நிலைத்திருக்க வேண்டும். அப்போதுதான் பெற்றோரின் சாட்சியுள்ள வாழ்வை காண்கிற பிள்ளைகளும் தெய்வீக வழியில் வளருவார்கள். தேவன்தாமே உங்களுக்கும் ஒரு அழகான குடும்ப வாழ்க்கையை தந்து உங்களை ஆசீர்வதிப்பாராக!
Prayer:
அன்பின் பரலோகப்பிதாவே,

என் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும். என்னுடைய நேரத்தையும், அன்பையும், உடைமையையும் என் குடும்பத்திற்காக கொடுக்கிற கிருபையை தாரும். தன்னலமற்ற அன்பை என் குடும்பத்தினரிடம் காண்பிக்க உதவும். எனக்கு அன்பானோருக்கு என் வாழ்க்கை சாட்சியாக இருக்க அருள்புரியும். எப்பொழுதும் என் குடும்பத்தில் சமாதானமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்படி உமது அன்பின் கயிறுகளால் கட்டியருளும். என் வார்த்தையிலும் செயலிலும் தாழ்மையுடன் இருக்க கிருபை செய்தருளும். என்னை நேசிப்பதுபோல மற்றவர்களை நேசிக்கவும், ஆசீர்வாதமாக மாறவும் எனக்கு உதவும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000