Loading...

கீழ்ப்படிதலே அன்பு!

Sis. Evangeline Paul Dhinakaran
02 Dec
நாம் தேவனை நேசிக்க வேண்டும், அவருடைய வார்த்தையை கைக்கொள்ள வேண்டுமென்று அவர் விரும்புகிறார். “இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து....கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ள வேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்” (உபாகமம் 10:12,13) என்று வேதத்தில் வாசிக்கிறோம். ஒரு நபர் எப்போது தேவனுக்கு பயப்படுவார், அவருக்கு கீழ்ப்படிவார்? கீழ்ப்படிதல் அன்பான இதயத்திலிருந்து மட்டுமே வெளிப்படும். “...ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான். அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்” (யோவான் 14:23). பிரியமானவர்களே, உங்கள் தற்போதைய பிரச்சினைகள் தேவ அன்பை காண முடியாதபடி உங்கள் கண்களை கட்டியிருக்கிறதா? அவரிடத்திலிருந்து நீங்கள் பெற்ற நன்மைகளை பட்டியலிட நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் இதைச் செய்யும்போது, உங்கள் இருதயம் அவர் தருகிற அன்பினால் நிரம்பி வழியும். 

அன்பு தகப்பனார் தினகரன் அவர்கள். மருத்துவமனையில் இருந்தபோது, கடைசி நேரத்தில் எங்கள் ஒவ்வொருவரையும் அழைத்து ஆசீர்வதித்தார். அப்பொழுது என் மகன் சாமை அழைத்து, தன் பக்கத்தில் நிறுத்தி, மெதுவாக  சொன்னார்கள். “சாம் நீ வேதத்தை வாசி, ஜெபி, இப்படியாக மூன்று முறை சொன்னார்கள். ஆண்டவரும் நம்மிடத்தில் அதைத்தான் செய்யச்சொல்லுகிறார். “வேதத்தை வாசிக்க வேண்டும்; ஜெபிக்க வேண்டும்” என்பதையே அவர் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

மார்த்தாள் மரியாளின் வீட்டிற்கு சென்ற இயேசு, “தேவையானது ஒன்றே. என்னுடைய பாதத்தில் உட்கார்ந்து ஜெபிப்பதுதான் நல்ல பங்கு. அதையே தெரிந்துகொள். நான் உன்னை ஆசீர்வதிப்பேன்” என்று சொல்லுகிறார் (லூக்கா 10:42). அந்த ‘ஒன்று’ என்ன? அது நாம் அன்போடு அவருடைய சமூகத்தில் காத்திருப்பதேயாகும். ஆம் மரியாள் அவருடைய பாதத்தில் அமர்ந்து, அவர் சொல்லுகிற எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் அவ்வாறு காத்திருந்ததினிமித்தம், ஒரு தேவை ஏற்பட்ட போது, இயேசு அவர்களுடைய சகோதரர் லாசருவை மரணத்திலிருந்து உயிரோடே எழுப்பினார். 
பிரியமானவர்களே, நீங்களும், என் வாழ்க்கையில் இந்த காரியமெல்லாம் செத்துப்போயிற்று. இனிமேல் அவ்வளவுதான். எனக்கு ஆசீர்வாதம் இல்லை” என்று சொல்லலாம். பிரியமானவர்களே, நீங்கள் பயப்படுவதுபோல் ஒன்றும் அழிந்து போகவில்லை. ஆண்டவர் உங்களை மிகவும் நேசிக்கிறார். நீங்கள் அவருடைய வார்த்தையைக் கவனித்து, அவருடைய குரலுக்குக் கீழ்ப்படியும்போது, உங்களுடைய வறண்ட வாழ்க்கை செழிப்பதை காண்பீர்கள். பலவீனமானவர்கள் பலப்படுவார்கள். ஏழைகள் ஐசுவரியவான்களாவார்கள்! தேவ மகிமை உங்கள் வாழ்வில் வெளிப்படுவதை நீங்கள் காண்பீர்கள். மரித்த லாசரு இருந்த கல்லறைக்கு சென்ற இயேசு, மார்த்தாளிடம், “உங்கள் சகோதரன் பிழைப்பான்” என்று கூறினார். இன்று, ஆண்டவர் உங்களுக்கும் இதையே சொல்கிறார். அற்புதங்களை விசுவாசியுங்கள்!
Prayer:
அன்பின் பிதாவே, 

என் குடும்பத்தில் செத்த நிலையில் காணப்படுகிற எல்லாவற்றையும் உமக்கு முன்பாக அர்ப்பணிக்கின்றேன். நீரே எங்களை உயிர்ப்பித்தருளும். என் முகத்தில் காணப்படுகிற அவமானத்தை நீக்கியருளும். என் முட்டாள்தனத்திலிருந்து வெளியேற எனக்கு உமது ஞானமும் பலமும் தேவை. உமது வார்த்தையின்மீது வாஞ்சையை எனக்குத் தந்தருளும். உமது அன்பு நாளுக்கு நாள் அதிகரிக்கட்டும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.  

For Prayer Help (24x7) - 044 45 999 000