Loading...
Stella dhinakaran

ஆத்துமாக்களை காக்கும் அன்பு!

Sis. Stella Dhinakaran
19 May
கிறிஸ்து இயேசுவின்மேல் அன்போடுகூடிய பக்தி வைராக்கியம் கொள்வது மிகவும் ஆழமான பக்தி நிறைந்த வாழ்வாகும். பவுல் அப்போஸ்தலன், ஊழியத்தில் பல்வேறு பாடுகளினால், நிந்தை, அவமானங்களினால் சூழப்பட்டார். இருப்பினும், அவைகள் ஒன்றுக்கும் அவர் கவலைப்படவேயில்லை. அப்போஸ்தலர் 17:16-ல், அத்தேனே என்ற பட்டணத்தில் அந்த பட்டணத்தின் குறைவைக் குறித்து அவர் ஆவியில் வைராக்கியமடைந்து, ஜெபஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான் என்று வாசிக்கிறோம். நம் வாழ்வில் இப்படிப்பட்ட பக்தி வைராக்கியம் கர்த்தருக்காக உண்டா? இயேசு திரளான ஜனங்களை கண்டபோது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறடிக்கப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மீது மனதுருகினார்.  நம்மில் பலரும் ஆடுகளைப்போன்று தொய்ந்தவர்களும், சிதறடிக்கப்பட்டவர்களுமே. இயேசு தமது ஆடுகள்மீது வைத்த அன்பினால் ஆடுகளுக்காக சிலுவையில் தம் ஜீவனையே கொடுத்தார். 

சகோதரன் தினகரன் அவர்கள், யார் யார் இயேசுவைக் குறித்த அறியாமையில் நிறைந்திருக்கிறார்களோ, அவர்களை எந்தவிதமான வேதனை நிறைந்த வார்த்தைகளாலும் திருத்த முயலாமல், மிகுந்த தாழ்மையோடும், கிறிஸ்துவின் அன்பினால் நிறைந்தும், தன் குறைவுபட்டிருந்த வாழ்வை ஆண்டவர் எப்படி மாற்றி ஆசீர்வதித்தார் என்பதையும் சொல்லி, “அதே அன்பை அவர்களுக்கும் கர்த்தர் காண்பிப்பார்” என்று, பக்தி வைராக்கியத்துடன், மிகவும் எளிய முறையில் விளக்குவார். படித்தவர்களும், பெரிய பதவியில் இருக்கும் இயேசுவை அறியாத மக்களும்கூட, இதை அதிக வாஞ்சையோடு கேட்பார்கள். சத்தியத்தை அறிந்துகொள்வார்கள்.
ஆகவே, பிரியமானவ்hகளே, இவ்விதமாக செயல்படுவதற்கு கர்த்தருடைய அன்பினால் நிறைந்து வழிகிற தெய்வீக வாழ்வும், அவரைப்பற்றிய அறிவும் நமக்கு முதலாவது தேவை. நாம் எப்படிப்பட்ட அறிவும், பக்தி வைராக்கியமும், கிறிஸ்துவின் மேல் அன்பும் உள்ளவர்களாயிருக்கிறோம் என்று சோதித்துப் பார்த்து, நாம் பக்தி விருத்தியடைந்து, மற்றவர்களையும் அந்த தெய்வீக அன்பின் மேன்மையை அறிய செய்வோமா? வேதத்தில், பழைய ஏற்பாட்டில், நினிவே மக்களைக் குறித்து ஆண்டவர் “வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருக ஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்” (யோனா 4:11). இன்றைக்கும் உண்மையை அறியாமல்,  அறியாமையில் வாழ்கின்ற  ஜனங்களால் இவ்வுலகம் நிரம்பியுள்ளது. அவர்கள் அத்தனை பேர்மீதும் தேவன் அன்பும் இரக்கமும் வைத்திருக்கிறார். நம் வாழ்வின் மூலம் கிறிஸ்துவை அவர்களிடம் அழைத்துச்செல்வது நம்முடைய கடமையாகும். பலர் இயேசுவின் அன்பை அறிந்துகொள்வதற்கு நாம் உப்பாகவும், வெளிச்சமாகவும் இருந்து அநேகரை கிறிஸ்துவண்டைக்கு வழிநடத்துவோம்.
Prayer:
அருமையான அன்பு தெய்வமே! 

உம்மைக் குறித்த காரியங்களில் பக்தி வைராக்கியத்தையும், மெய்யான அன்பையும் அறியவேண்டிய சகல அறிவையும் நீரே என் வாழ்விலே தந்து, ஆழமான காரியங்களை, முதலாவது எனக்கு கற்றுக்கொடுத்து, என் பக்தி வைராக்கியத்தினிமித்தம் மற்றவர்களையும் உம் அன்பை உணரச் செய்ய உம் தெய்வீகக் கிருபையைத் தாரும். ஆத்தும பாரத்தையும் அவர்களின் இரட்சிப்பிற்காக ஊக்கமாய் ஜெபிக்க என்னை பெலப்படுத்தும். பத்து நீதிமான்கள் இருந்தால் நகரத்தை அழிப்பீரோ என்று ஆபிரகாம் திறப்பின் வாசலில் நின்று ஜெபித்ததுபோல, நானும் அழிந்துபோகிற ஆத்துமாக்களுக்காக ஜெபிக்க உதவிச்செய்தருளும்.  

இயேசுவின் நாமத்தில் தாழ்மையுடன் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000