Loading...
Stella dhinakaran

தேவனுடைய கிருபை!

Sis. Stella Dhinakaran
15 Jan
தேவனை மையமாகக் கொண்ட ஒரு குடும்பத்தினர் ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென்று நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் குடும்பத்திலுள்ள ஒரு நபரின் தவறான வழிகளால் இது பாதிக்கப்படும்போது, குடும்பத்தின் அஸ்திவாரத்தில் விரிசல் ஏற்பட்டதைப்போன்று நாம் சரிந்து விடுகிறோம். கவலைப்படாதீர்கள், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மீதான உங்கள் அக்கறையையும் தாண்டி, ஒவ்வொரு நபருக்காகவும் அவருடைய விலைமதிப்பற்ற இரத்தத்தை சிந்திய கர்த்தராகிய இயேசு, தமது அன்பின் கயிறுகளால் உங்களை கட்டி இழுக்கிறார். அவர்கள் தேவனுடைய அன்பிலிருந்து அல்லது உங்கள் ஜெபத்திலிருந்து தப்ப முடியாது. ‘கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள், அப்பொழுது நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் இரட்சிக்கப்படுவீர்கள்.’(அப்போஸ்தலர் 16:31) என்று வேதம் கூறுகிறது, நிச்சயமாக இரட்சிப்பின் தீ உங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்குள்ளும் பரவும். 

ஒரு வாலிபப் பெண், வாலிப வயதில் தனக்கு இஷ்டமான வழிகளின்படி, தன் மனம்போல் உலக இச்சைகளுக்கும். ஆசாபாசங்களுக்கும் உட்பட்டவளாய் வாழ்ந்து வந்தாள். எத்தனையோ போதகர்கள், அவளுடைய சொந்த குடும்பத்தினர் எடுத்துரைத்தும், அவள் அவைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பாவத்தின் உச்சியில் ஏறிக்கொண்டேயிருந்தாள். இப்படிப்பட்ட பயங்கரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த அந்த பெண்ணுக்கு  ஒரு நாள் ஒரு சுவிசேஷக் கூட்டத்தில் பங்குபெறும் வாய்ப்பு எதிர்பாராமல் கிடைத்தது. முதலில் அலட்சியமாய் விருப்பமின்றி அமர்ந்திருந்தாள். ஆனால், தேவனுடைய வார்த்தைகளைக் கேட்கக் கேட்க அவளோடு அந்த வார்த்தை நேரடியாக பேசியது. ஏனென்றால், அவருடைய வார்த்தை ஜீவனும் வல்லமையுமுள்ளது (எபிரெயர் 4:12).  கேட்கக் கேட்க கண்களிலிருந்து கண்ணீர் புறப்பட்டது. அழுதாள், அழுதாள் அழுதுகொண்டேயிருந்தாள். இதுதான் தேவ கிருபை! “பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய் பெருகிற்று” (ரோமர் 5:20) என்ற வேத வார்த்தை இவள் வாழ்க்கையில் உண்மையாயிற்று முன்பு வாழ்ந்த வாழ்க்கைக்கு நேர் எதிரிடையாக ஆண்டவருடைய சாயலில், அவரைப்போல் வாழ்கிற வாழ்க்கையை ஆண்டவர் கரத்திலிருந்து பெற்றுக்கொண்டாள்.
ஒவ்வொரு நபரையும் பின்தொடர்ந்து விசுவாசத்தில் நிலைத்திருக்கச்செய்யும் அசைக்க முடியாத தேவனுடைய அன்பைப் பற்றிக்கொள்ளுங்கள். உங்கள் அன்புக்குரியவர்கள் தங்கள் பாவத்திலோ அல்லது அடிமைத்தனத்திலோ மூழ்கிபோகமாட்டார்கள். தேவனுடைய ஒளியின் மூலம் அவர்கள் இருளை வெல்லுவார்கள். “உம்முடைய ஜனங்களுக்கு நீர் பாராட்டும் கிருபையின்படி என்னை நினைத்து, உம்முடைய இரட்சிப்பினால் என்னைச் சந்தித்தருளும்” (சங்கீதம் 106:5) என்ற வார்த்தையின்படி, இவையெல்லாவற்றிலும் நம்மை நேசிப்பவர் மூலமாக நாம் முற்றிலும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம் (ரோமர் 8:37). உங்கள் வாசஸ்தலம் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இடமாக மாறும். 
Prayer:
அன்பு தெய்வமே! 

நீர் எவ்வளவு கிருபை பொருந்தினவர் என்பதை அறிந்து, என் உள்ளமெல்லாம் சிலிர்க்கிறது. எனக்கும் உம்முடைய தெய்வீகக் கிருபையை அளவில்லாமல் தந்து இன்றுமுதல் உம்மைப்போல் சகலவிதங்களிலும் பக்தியுடன் தெய்வீக அலங்காரத்துடன் வாழ அருள்தாரும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000