Loading...
Paul Dhinakaran

இருளை அகற்றும் ஒளி!

Dr. Paul Dhinakaran
12 Jan
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை இரட்சகர் என்று நம்பினபடியால், பாவத்தின் இருளிலிருந்து விடுதலையான நீங்கள் பாக்கியவான்கள்.  இந்த ஆசீர்வாதம் உங்கள் தகுதியினால் அல்ல. தேவனுடைய நிபந்தனையற்ற அன்பினாலும், இரக்கத்தினாலும் உண்டானது. ஆதி அப்போஸ்தலர்கள் உலக இரட்சகராகிய இயேசுவைக்குறித்து பிரசங்கித்தபோது, ஜனங்கள் தங்கள் பாவத்தின் குற்றத்தை உணர்ந்தார்கள். அவர்கள் உள்ளத்தின் ஆழத்தில் தொடப்பட்டு மனந்திரும்பினர். அவர்களுடைய துக்கம் மனந்திரும்புதலுக்கு வழிவகுத்தது. அவர்கள் தேவனிடமாய் திரும்பியபோது சுத்திகரிக்கப்பட்டனர். “உங்கள் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்” (அப்போஸ்தலர் 3:19) என்று வேதம் கூறுகிறது. ஆம், அவருடைய கிருபையுடனான ஒரு சந்திப்பு மட்டுமே தெய்வீக முறையில் பாவத்தின் பிடியிலிருந்து உங்களை விடுவிக்க முடியும். 

“போதனையாளர்களின் இளவரசன்” என்று அழைக்கப்பட்ட தேவமனிதர் சார்ல்ஸ் ஸ்பர்ஜன் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நான் வாசித்தேன். அவரது வெற்றிகரமான ஊழியத்தின் உச்சியில் அவர் இருக்கும்போது, அவரது கூட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பாவத்தைக் குறித்து மனஸ்தாபப்பட்டு, மனந்திரும்பி தேவனுடைய கிருiபாயல் இரட்சிப்பட்டார்கள். ஆனால், புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அவர் அடிமையானார். ஒருநாள் மாலையில், மார்க்கெட் வழியாக அவர் நடந்து செல்கையில், ஒரு குறிப்பிட்ட விளம்பரத்தைப் பார்த்ததும் அப்படியே அதிர்ச்சியால் உறைந்துபோய் நின்றுவிட்டார். வண்ண வண்ண சிகரெட் அட்டைப் பெட்டிகளை, கவர்ச்சிகரமாக அடுக்கி வைத்து, அதன் கீழே, “இதுவே ஸ்பர்ஜன் புகைப்பிடிக்கும் சிகரெட்” என எழுதியிருந்தது. உடனே அவர் தேவனிடம் ஒப்புரவாகி தன்னைச் சரிப்படுத்தி கொள்வதற்காக திரும்பி வீட்டிற்கு ஓடினார். பரிசுத்த ஆவியானவர் அவர்மீது வந்து இறங்கினார். தேவபிரசன்னத்தை அதிகமான அளவில் அனுபவித்தார். அன்றே புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுதலைப் பெற்றார்.
அன்பு நண்பரே, நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளாக இருந்தால், எந்த பிசாசுக்கும் இடமே இல்லை. நீங்கள் வெளிச்சத்தின் பிள்ளைகள். இன்றைக்கும் ஏதாவது இருள் உங்களில் இருந்தால் தேவனுடைய வல்லமையைப் பெற்று அந்த இருளை அகற்றிவிடுங்கள். நீங்கள் அவரது இரத்தக் கிரயத்தால் மீட்கப்பட்டீர்கள் என்பதை அறிக்கையிடுங்கள். நீங்கள் பரிசுத்த ஜாதியும், ராஜரீக ஆசாரியக் கூட்டமுமாயிருக்கிறீர்கள் (1 பேதுரு 2:9) .  எந்த இருளும் உங்களுக்குள் வரமுடியாது. எழும்பி பிரகாசியுங்கள் உங்கள் ஒளி வந்தது. இயேசுவின் இரத்தம் சகல பாவத்திலிருந்தும் உங்களை கழுவி சுத்திகரிக்கும்.  பாவம், இச்சை மற்றும் துன்மார்க்கத்திலிருந்து உங்களை விடுவிப்பதற்கு அவருடைய இரத்தமும் பெயரும் போதுமானது.  “இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார்” (எபேசியர் 1:7,8) என்று பவுல் அப்போஸ்தலர் கூறுகிறார். ஆம், ஒளியின் தேவன் உங்களை அடிமைத்தனத்திலிருந்தும் பாவத்திலிருந்தும் விடுவிக்கிறார். அவரிடத்தில் கேளுங்கள். அவர் உங்கள் பாவங்களையும் மன்னித்து உங்களை பிரகாசிக்கிற ஒளியாக மாற்றுவார்.
Prayer:
அன்புள்ள பரம தகப்பனே, 

என்னுடைய மறைமுகமான பாவங்களுக்காகவும், அடிமைத்தனத்திற்காகவும் நான் மிகவும் மனஸ்தாப்படுகிறேன். அறிந்தோ, அறியாமலோ அவற்றுக்கு நான் இடம் கொடுத்துவிட்டேன்.  உமது விலையேறப்பெற்ற நாமத்தினால் எல்லா இருள் அந்தகாரங்களையும், என் மனதையும் சரீரத்தையும் விட்டு விலக்கும். உம்முடைய தெய்வீக பெலத்தால் என்னை நிரப்பும். ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான் என்று வேதம் கூறுகிறபடி, என்னையும் புதுமனிதனாக மாற்றும்.  அடிமைத்தனத்திலிருந்து என்னை விடுவித்து, உமது நாம மகிமைக்காக எழும்பி பிரகாசிக்க உதவிச்செய்தருளும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000