Loading...
Paul Dhinakaran

நித்திய ஆசீர்வாதங்கள்

Dr. Paul Dhinakaran
30 May
அன்பு நண்பரே, இன்றைய நாளுக்கான தேவனுடைய வார்த்தை “நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்” (ஏசாயா 54:8). தேவன் நம்மீது இரக்கமுடையவர். நாம் மனந்திரும்பும்போது, அவர் நம்மை அணைத்துக்கொண்டு தம் மார்பில் சாய்த்துக்கொள்வார்.  நாம் செய்த பாவங்களுக்காக மன்னிப்பு கேட்கும்போது அவர் தமது இரத்தத்தினால் நம்மைக் கழுவி சுத்திகரிக்கிறார். அவர் நம்மை தேவ சாயலாக மாற்றி, பொன்னாக விளங்கச்செய்வார். 

எந்தவொரு மனிதனும் நம்மீது ஒரு குற்றச்சாட்டையும் கண்டுபிடிக்க முடியாது. தேவனுடைய கிருபைக்காக நன்றி. அவருடைய இரக்கம் பெரியது. காலைதோறும் அவருடைய கிருபைகள் புதியனவாயிருக்கிறது. ஆகவே தான் அவர், “அதிகாலையில் என்னை தேடுகிறவர்கள் என்னை கண்டடைவார்கள்” என்று கூறுகிறார். அவர் காலை தோறும் உங்களுக்கு புதிய கிருபைகளை தர ஆயத்தமாயிருக்கிறார். ஆகவே, “தேவன் என்மீது கோபமாயிருக்கிறார்” என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். “தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்” (மீகா 7:18).
 “அவருடைய கோபம் ஒரு நிமிஷம்; அவருடைய தயவோ நீடிய வாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்” (சங்கீதம் 30:5) என்று வேதத்தில் வாசிக்கிறோம்.  இதுவே தேவனுடைய கிருபை.  இயேசு உங்களை நேசிக்கிறார்.  அவர் உங்கள்மீது கோபமாயிருக்கவில்லை. அவரது கிருபைகள் காலைதோறும்  புதிதாயிருக்கிறது. அவரிடத்தில் திரும்புங்கள். அவர் உங்களை நித்திய ஆசீர்வாதங்களால் நிரப்புவார். நீங்கள் பிழைத்திருந்து, அவருடைய துதியையும் மகிமையையும் சொல்லி வருவீர்கள். “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்” (1 பேதுரு 2:9). நீங்கள் விசேஷித்தவர்கள், உங்கள் தேவன் எவ்வளவு விசேஷித்தவர் என்பதை நீங்கள் உலகிற்கு சொல்லுங்கள். வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றி ஆசீர்வதிக்கப்படுங்கள். 
Prayer:
அன்பின் தகப்பனே,

உமது இரக்கங்களுக்கு நன்றி. உமது கிருபைகள் இன்று என் வாழ்க்கையில் ஊற்றப்படட்டும். நீர் என்னை நேசிக்கின்றீர். நித்திய கிருபையுடன் இரங்குவேன் என்ற உமது வாக்குறுதிக்காக நன்றி. ஆண்டவரே, என்னை கழுவி சுத்திகரியும். நான் பிழைத்திருந்து உமது துதிகளை சொல்லி வருவதற்கு உதவி செய்தருளும். நான் சந்தோஷமாய் வாழ்ந்து நீடித்த நாளாய் நிலைத்திருக்க அருள்புரியும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000