Loading...
Evangeline Paul Dhinakaran

புது சிருஷ்டி!

Sis. Evangeline Paul Dhinakaran
20 Jan
உங்களை நேசிக்கிற, உங்களை கவனிக்கிற தேவன் ஒருவர் உங்களுக்கு இருக்கிறார்.  மேலே வானத்திலும் கீழே பூமியிலும் எல்லாவற்றையும் உருவாக்கிய தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.  இஸ்ரவேல் ஜனங்களுக்கு கற்பாறையிலிருந்து தண்ணீரை சுரக்க பண்ணிய தேவன்,  வானத்திலிருந்து மன்னாவை மழையாய் பொழியச்செய்த தேவனால் எல்லாம் கூடும். இன்றைக்கும் உங்கள் வாழ்க்கையில் ஒரு அற்புதமான முன்னேற்றத்தை கண்டறிய தேவனுடைய அளவற்ற வல்லமையை நாடுங்கள். 

சகோதரர் செல்வராஜ், பிறந்தலும்,  இறந்துவிட்டார் என்று சவக்கிடங்கிற்கு உடலை அனுப்பும்படி கூறிவிட்டார்களாம். அவருடைய தாயாரோ மிகுந்த பக்தியுள்ள பெண்மணி. ‘குழந்தை இறந்துபோனது’ என்ற செய்தியை கேள்விப்பட்டு மிகுந்த துக்கமடைந்த அவர்கள், அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவரிடம் குழந்தையை எப்படியாவது காப்பாற்றும்படி  அழுது புலம்பியுள்ளார்கள். மருத்துவரும்  இவர்கள் விடும் கண்ணீரைக் கண்டு அவர்களை சமாளிக்கும்படி இறந்து போனதாக கூறப்பட்ட குழந்தையின் நாசியில் ஊதி உடலை அசைத்துள்ளார். அப்போது யாரும் நம்ப இயலாத ஒரு காரியம்  நடந்தது.  அசைவற்றுக்கிடந்த குழந்தையின் உடலில் திரும்பவும் ஜீவன் வந்தது. இது ஆண்டவர் செய்த அற்புதம் என்று தாயார் தேவனை துதித்தார்கள். அதன்பிறகு அவர் வளர்ந்து 60 வயது வரை ஊழியம் செய்து 1994-ம் ஆண்டு  கர்த்தருக்குள் நித்தியரையடைந்தார். 
உலகப்பிரகாரமான ஒரு மருத்துவர் குழந்தையை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமென்றால், தேவன் உங்கள் உடல்நலத்தை,  உறவுகளை, பொருளாதாரத்தை மீண்டும்  உயிர்ப்பிக்க முடியும்.  உங்களுடைய உயிரற்ற பிரச்சினைகளை தேவ கரங்களில் அர்ப்பணித்து, அவருடைய வல்லமையான கிரியைகளை ருசிபாருங்கள். உயிரற்ற எலும்புகளை பார்த்து கர்த்தர் சொல்வது போல், “கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன், அப்பொழுது உயிரடைவீர்கள். நான் உங்கள்மேல் நரம்புகளைச்சேர்த்து, உங்கள்மேல் மாம்சத்தை உண்டாக்கி, உங்களைத் தோலினால் மூடி, உங்களில் ஆவியைக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நீங்கள் உயிரடைந்து, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்களென்று உரைக்கிறார் என்று சொல் என்றார்” (எசேக்கியேல் 37:5,6). இன்றைக்கும் ஆண்டவர் இறந்த சூழ்நிலையிலிருக்கும் உங்கள் ஜீவனை ஊதி, பூமியின் கடையாந்தரத்திலிருந்து அற்புதங்களை கொண்டு வருவார். புதிய மனம், புதிய உடல் மற்றும் புதிய இருதயத்துடன் நீங்கள் புத்துணர்ச்சியுடன் எழுந்து நிற்பீர்கள். “நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் சிருஷ்டிக்கப்படும்; நீர் பூமியின் ரூபத்தையும் புதிதாக்குகிறீர்” (சங்கீதம் 104:30). ஆம், தேவனுடைய ஆவி உங்களை நிரப்பும்போது, நீங்கள் புதியவராகவும் புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள். 
Prayer:
அன்புள்ள ஆண்டவரே, 

நான் நம்பிக்கையற்ற நிலையில் இருக்கின்றேன். என் பிரச்சனையிலிருந்து வெளியே வர வழியில்லாமல் தடுமாறுகிறேன். நீர் அதிசயம் செய்பவர் என்று நான் நம்புகிறேன். என் வாழ்வில் உமக்கு மறைவானது ஒன்றுமில்லை. நான் உம்முடைய நாமத்தை சொல்லி கூப்பிடும்போது நீர் என் பிரார்த்தனையை கேட்டு எனக்கு செவிக்கொடுப்பீர் என்று நம்புகிறேன். என் இறந்த சூழ்நிலைகள், இறந்த உறவுகள் மற்றும் இறந்த உறுப்புகள் அனைத்திலும் உமது ஜீவன் இறங்கி என்னை ஒரு புதுசிருஷ்டியாக மாற்றவேண்டுமென்று மன்றாடுகிறேன்.  

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000