Loading...
Dr. Paul Dhinakaran

இயேசுவே சிறந்த ஈவு!

Dr. Paul Dhinakaran
25 Dec
இயேசுவின் பிறப்பை கிறிஸ்துமஸ் தினத்தன்று கொண்டாடுகிற நாம் அதையொட்டி கிடைக்கிற வெகுமதிகள் மூலம் அதிகமாக மனம் மகிழுகிறோம். மனிதகுலத்திற்காக பரமபிதா இந்த பூமிக்கு “இயேசுவை” அனுப்பினார். அதைத்தான் பரிசுத்த பவுல் 2 கொரிந்தியர் 9:1ல், தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவு” என்று குறிப்பிடுகிறார். இந்த வெகுமதியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது, நம் கைகளால் பிடிக்கவும் இயலாது, அவர் நம்முடைய இருதயத்தில் வாசம் செய்யும்படி இறங்கிவந்ததினால், நம் இருதயத்தில் பொக்கிஷமாக வாழுகிறார். அவர் தான் நம்முடைய மகிழ்ச்சிக்கு காரணர். ஆகவேதான், நாம் மனமகிழ்ந்து, “ஆண்டவரே, சொல்லி முடியாத இந்த ஈவை எனக்குத் தந்ததற்காக உமக்கு நன்றி” என்று மகிழ்ச்சியோடு சொல்கிறோம்.  ஆம் அவர் தமது அன்பை நமக்கு காட்டும்படியாய் எல்லாவற்றையும் தியாகம் செய்து, தமது மகிமையை துறந்து பாவமான மனுவுருவெடுத்து, பாவம் அறியாதவராயிருந்தும் நமக்காக பாவமானார். பாவம் செய்யாதவராயிருந்தும் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார். நாம் மிகச்சிறந்த கிறிஸ்துமஸ் வெகுமதியை பெற்றுக்கொள்ளும்படியாய் அவர் எல்லாவற்றையும் தியாகம் செய்தார். 

குட்டிப் பையன் ஒருவன், மருந்து கடைக்கு ஓடிவந்தான். அவன் கையில் 500 ரூபாய் நோட்டு இருந்தது. கடைக்காரரின் முன்னே நின்று கொண்டு, உயரம் போதாமல் குதித்து குதித்து பணத்தைக் காட்டிக்கொண்டிருந்தான். மருந்து கடைக்காரர் அவனிடம், “குட்டிபையா! என்ன வேண்டும்?” என்று கேட்டார். “எனக்கு ஒரு அற்புதம் வேண்டும். இந்த 500 ரூபாயை வைத்துக்கொண்டு எனக்கு அற்புதத்தைத் தாருங்கள்.” என்று கேட்டான். அங்கு நின்றுகொண்டிருந்த கடைக்காரரின் நண்பர் ஒருவர், அந்தப் பையனை கவனித்துக் கொண்டிருந்தார். அவர், சிறுபையனிடம், “என்ன நடந்தது?” என்று கேட்டார். அவன், “என்னுடைய குட்டி தங்கைக்கு உடல்நலம் சரியில்லை. அவள் மரண படுக்கையில் இருக்கிறாள். என்னுடைய அப்பாவின் நண்பரான மருத்துவர் வந்து பார்த்துவிட்டு, ‘இவளுக்கு தேவை ஓர் அற்புதம்,’ என்று கூறினார். அப்பாவோ, ‘என்னால் அற்புதத்தை வாங்க இயலாது’ என்று கூறிவிட்டார். நான் 500 ரூபாய் சேர்த்து வைத்திருக்கிறேன். இதை வைத்து ஓர் அற்புதத்தை என்னால் வாங்க முடிந்தால் என்னுடைய தங்கையை காப்பாற்றி விடுவேன். அவள் உயிர் பிழைத்துக் கொள்வாள். என் தங்கையை காப்பாற்றுவதற்கு எனக்கு ஒரு அற்புதத்தைத் தாருங்கள்.” என்று கேட்டான். கடைக்காரரின் நண்பர், குட்டிப் பையனிடம், “என்னை உன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போ, நான் உன் தங்கையை பார்க்கட்டும்,” என்று கூறினார். அந்தப் பையனும் அவரை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அவர்தான் அந்த நகரத்திலேயே புகழ்பெற்ற நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர். அவர் அந்த சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, தேவையான அறுவை சிகிச்சையை செய்து அவளை பிழைக்க வைத்தார். அந்தச் சிறுவனின் தந்தை, மருத்துவரிடம், “ஐயா, இதற்கான கட்டணம் எவ்வளவு? நீங்கள் என் மகளை காப்பாற்றியிருக்கிறீர்கள். நான் உங்களுக்கு உரிய கட்டணத்தைத் தரவேண்டும். தயவு செய்து எவ்வளவு என்று சொல்லுங்கள்.” எனக் கேட்டார். அந்த அறுவை சிகிச்சை நிபுணர் ரசீதை எடுத்து அவரிடம் கொடுத்தார். அதில் 500 ரூபாய் என்று எழுதப்பட்டிருந்தது. ஆம், அந்த சிறுவன் தன் தங்கைக்காக 500 ரூபாய்க்கு ஒரு அற்புதத்தைப் பெற்றுக்கொண்டான்.
இன்றைக்கும், நம்முடைய ஆண்டவரோ,  அற்புதத்தைப் பெற்றுக்கொள்ள நீ எதுவும் செலுத்த வேண்டியதில்லை. உனக்காக அற்புதத்தைச் செய்யும்படி நான் ஏற்கனவே என் இரத்தத்தை சிந்தியிருக்கிறேன். அதுவே, கிறிஸ்துமஸ் பண்டிகையின் சாராம்சம். உங்களுடைய நற்கிரியை மூலமாக நீங்கள் ஆண்டவரிடம் தயவுபெற முயற்சிக்கிறீர்களா? பிரியமானவர்களே, ஆண்டவருக்கென்று நான் இதுவரை செய்தது போதாது. நான் செய்த ஜெபம் போதாது. உபவாசம் போதாது. நான் கொடுத்த காணிக்கை போதாது. ஏழை எளியோருக்கு நான் செய்த உதவி போதாது. ஆகவேதான், எனக்கான அற்புதத்தை நான் இதுவரை பெற்றுக்கொள்ள இயலவில்லை” என்று உங்களை நீங்களே குறைகூறிக்கொள்வதை நிறுத்துங்கள். ஆண்டவர் உங்களுக்காக வைத்திருக்கிற ஆசீர்வாதங்களுக்கு உங்களால் ஒருபோதும் கிரயத்தை செலுத்த முடியாது. நீங்கள் செய்த  கிரியைகளுக்காக அல்ல, இயேசு சிலுவையில் செய்த தியாகத்தின் மூலமே நீங்கள் அற்புதத்தை பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே, இருக்கிற வண்ணமாகவே வாருங்கள். நாம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடலாம்.  
Prayer:
அன்புள்ள பரமபிதாவே,

என்னை காப்பாற்றுவதற்காக இயேசுவை சொல்லிய முடியாத ஈவாக இந்த பூமிக்கு அனுப்பியதற்காக உமக்கு நன்றி. உம்முடைய விலையேறப்பெற்ற இரட்சிப்பை எந்தவொரு காரியத்துடனும் ஒப்பிட முடியாது. எனக்காக மரித்து, உயிர்த்த உமக்காக நான் பரிசுத்தமாய் வாழ விரும்புகிறேன். உமது வழியில் நடப்பதற்கும், இந்த மகிழ்ச்சியை பலரின் வாழ்க்கையில்  கொண்டு வருவதற்கும் அருள்புரியும். இந்த நாளிலும் மெய்யான ஈவாகிய இயேசுவை என் இருதயத்தில் சந்தோஷமாய் ஏற்று மற்றவருக்கு சாட்சியாய் வாழ அருள்புரியும். என் வாழ்வில் ஒரு அற்புதத்தை செய்தருளும். இந்த பூமியில் ஆசீர்வாதமான வாழ்க்கையை வாழ உதவும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000