Loading...
DGS Dhinakaran

இரட்சிக்கும் இயேசு!

Bro. D.G.S Dhinakaran
10 Jun
இவ்வுலகில் பாவமறியாத ஒரே மனிதர் இயேசு கிறிஸ்து மட்டுமே. நித்திய ஜீவனை தமது பிள்ளைகளுக்கு கொடுக்கும்படியன உன்னத நோக்கத்துடனே அவர் இந்த பூமிக்கு வந்தார். ஆகவே தான், அவர் நமக்காக தமது ஜீவனை சிலுவையில் தந்தார். அவருடைய மரணத்தின் மூலமே மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டு மறைந்தது. இன்றைக்கும் நாம் இயேசுவின் மூலமாக தேவனை அணுகினால் அவர் நம்மை ஏற்றுக்கொள்வார். இயேசு கிறிஸ்து மூலமாக நாம் தைரியமாக தேவனுடைய சிம்மாசனத்திற்கு முன்பாக வரலாம். “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்.” (1 தீமோத்தேயு 1:15). அவர் நம்ம பாவமற கழுவி சுத்திகரித்து, தேவனுக்கு முன்பாக நாம்  குற்றமற்றவர்களாக நிற்பதற்கு நம்மை பரிசுத்தமாக்குகிறார். அவருடைய நீதி நமக்கு இலவசமாக வழங்கப்பட்ட ஒரு பரிசாகும். இயேசு பாவியை நேசித்து, பாவத்தை வெறுக்கிறார். ஆகவேதான், பாவமறியாத அவர் நம்முடைய பாவத்தை ஏற்றுக்கொண்டு, நமக்கு பரிசுத்தத்தை அளிக்கும்படி சிலுவையில் பாவமானார் (2 கொரிந்தியர் 5:21). 

ஒருமுறை எருசலேம் நகரை பிடிப்பதற்காக ஒருபக்கம் யூதர்களும், மறுபக்கம் அரேபியர்களும் முயன்றார்கள். அப்பொழுது ஒரு சமயம், அரேபிய இராணுவம், யூதருடைய இரண்டு ராணுவங்களுக்கும் நடுவே மாட்டிக்கொண்டது. அப்பொழுது ஒரு பக்கத்திலிருந்த யூத இராணுவத் தலைவன், மறுபக்கத்திலிருக்கும் இராணுவத் தலைவனுக்கு ஒரு முக்கிய செய்தி அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த வேளையில், “நான் யாரை அனுப்புவேன்?” என்று அங்கலாய்த்தனர். யூத இராணுவத்தை சேர்ந்த எந்த வீரனையும் அங்கு அனுப்பமுடியாது. காரணம், போகும் வழியில் அரேபியரின் இராணுவம் வீரனை கொன்றுவிடுவார்கள். இந்த சமயத்தில், பள்ளிக்கூடம் செல்லும் ஒரு சிறுமி அந்த வழியே வந்தாள். அவள், “ஐயா, அந்த செய்தியை என்னிடம் கொடுங்கள்; நான் கொண்டுபோய் கொடுக்கிறேன்” என்றாள். அப்படியே அந்த செய்தி மடலை அவள் தன்னுடைய வலது கரத்தில் வாங்கிக்கொண்டாள். இடது கரத்தில் தான் வைத்திருந்த ரொட்டியை சாப்பிட்டவாறு, பாட்டு பாடிக்கொண்டே வேகமாக போனாள். அரேபிய இராணுவத்தை அவள் கடந்து செல்லும்போது, திடீரென்று துப்பாக்கிக் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. அந்தோ பரிதாபம்! அவளது கையில் அரேபியருடைய துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. கை துண்டிக்கப்பட்டு கீழே விழுந்தது. மயக்கமடைந்த நிலையில், அவள் தன்னுடைய மற்ற கையினால் துண்டிக்கப்பட்ட கையை எடுத்துக்கொண்டு, மறுபக்கத்திலுள்ள யூத இராணுவ முகாமிற்குள் வேகமாக ஓடினாள். அதை அங்கிருந்து பார்த்துக்கொண்டிருந்த ராணுவ தலைவனின் உள்ளம் உருகியது. “ஐயா, உங்களுக்கு கொடுக்க வேண்டிய செய்தி இதுதான்” என்று சொல்லி, அவள் செய்தி மடல் அடங்கிய தன் வலது கையை அவனிடம் கொடுத்த மறுவினாடி அப்படியே மயங்கி விழுந்து ஜீவனை விட்டாள்.
இயேசு நமக்கு விடுதலை என்ற நற்செய்தியை கொடுக்க வந்தார். பாவம், நோய் மற்றும் சாத்தனுடைய கட்டுகளிலிருந்து விடுதலை அளிப்பதற்காகவே இந்த பூமிக்கு வந்தார். ஆகவே தீங்கைகுறித்து நாம் இனி பயப்படத் தேவையில்லை. நாம் செய்த பாவத்தினிமித்தம் தேவன் நம்மை தண்டிப்பதில்லை. தேவன் தாம் நேசிக்கிறவர்களை சிட்சிக்கிறார் (எபிரெயர் 12:6) ஆனால் தண்டிப்பதில்லை. உங்கள் வியாதி தேவன் கொடுத்த தண்டனையில்லை. நீங்கள் குணமடைவதே அவருடைய சித்தமாயிருக்கிறது. பாவ மன்னிப்பை பெற்றுக்கொள்ளும்படி அவர் உங்களை தம்மிடத்தில் அழைக்கிறார். உண்மையான விடுதலை என்பது பாவத்தின் படியிலிருந்து நாம் விடுதiலாகி, இயேசுவைப்போல மறுரூபமடைவதே. இது பரிசுத்த ஆவியானவரின் உதவியினால் சாத்தியமாகும். அவர் உங்களை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவார் (யோவான் 16:13). நீங்கள் தேவனுடைய வார்த்தையை நோக்கி பார்க்கும்போது, அவர் உங்களை அற்புதமாய் நடத்துவார். பரிசுத்த ஆவியானவர் நடத்துகிற வேத வசனத்தின் வழியில் நடப்பீர்களா?
Prayer:
அன்பின் பரலோகப்பிதாவே,

என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து இயேசு கிறிஸ்து அளிக்கும் நீதியின் வழியில் என்னை நடத்தும். நீர் பாவியை நேசித்து, பாவத்தை வெறுக்கிறீர் என்பதை நான் அறிந்துகொண்டேன். பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பி, கிறிஸ்து தருகிற விடுதலையான வாழ்க்கையை வாழும்படி என்னை வழிநடத்தும். வேத வார்த்தையின்படி நடக்க உதவிச்செய்தருளும். இயேசுவைப்போல என்னையும் மறுரூபமாக்கும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000