Loading...
Dr. Paul Dhinakaran

நமக்காக பரிந்துபேசும் இயேசு!

Dr. Paul Dhinakaran
22 Dec
உங்கள் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் சில காரியங்கள் அழிக்கிறது என்பதில் ஏதேனும் குற்ற உணர்வுடன் இருக்கிறீர்களா? “அவர் நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார். தேவரீர் பூர்வநாட்கள் முதல் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட சத்தியத்தை யாக்கோபுக்கும், கிருபையை ஆபிரகாமுக்கும் கட்டளையிடுவீராக” என்று மீகா 7:19,20 கூறுகிறது. ஆண்டவர் இயேசு உங்களை மிகவும் நேசிக்கிறார் என்ற உறுதியுடன் அவருடைய கிருபாசனத்தண்டையில் சேருங்கள். ஏனெனில், அவர் தாம் சிந்திய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் உங்களை சுத்திகரித்து, மாசற்றவர்களாய் மாற்றி உங்களுக்காக பிதாவினிடத்தில் பரிந்துபேசுகிறவராயிருக்கிறார். 

எனது தந்தை சிறுவனாயிருக்கும்போது, பள்ளிப்பருவத்திலே அவரது மதிய உணவை ஒரு மாந்தோப்பிலே வைத்து சாப்பிடுவார். அவரது நண்பர்களெல்லாம், அவர் வேகமாக மரத்தில் ஏறிப்பறிப்பவராகையால், அவரை மாங்காய் பறித்துத் தரும்படி கேட்பர். அவரும் மாங்காய் பறித்துக் கொடுப்பார். ஒருநாள் அவர் இவ்விதமாக மாங்காய் பறித்துக் கொண்டிருக்கும்போது, திடீரென ஒரே நிசப்தம் நிலவியது. என் தகப்பனார் கீழே எட்டிப் பார்த்தார். அங்கே நண்பர்களில் ஒருவர் கூட இல்லை. தோப்பின் காவல்காரரைப் பார்த்தவுடன் எல்லோரும் ஓடிவிட்டார்கள். அவர் மரத்தை விட்டுக் கீழே இறங்கும்படியும், தோப்பின் சொந்தக்காரன் வசம் ஒப்படைத்துவிடுவதாகவும் கூச்சல் போட்டார். வகுப்பின் மாணவ லீடர்கூட அந்த காவலாளியிடம் பரிந்துபேசி, எப்படியோ என் தகப்பனார் அன்று தப்பித்துக்கொண்டார்.
ஆம், உங்களுக்காகவும் பிதாவிடம் பரிந்து பேச ஒரு வழக்கறிஞர் இருக்கிறார். அவர் தான் இயேசு. நீங்கள் பரிசுத்தத்தில் நடக்க முயற்சிக்கும்போது தோல்வியடையலாம். மனந்தளர்ந்துபோகாதிருங்கள். இயேசு கிறிஸ்து பிதாவிடம் தமது இரத்தத்தைக் கொண்டு பேசி, தண்டனையிலிருந்து உங்களை தப்புவிக்கிறார். “ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்” (1 யோவான் 2:1). மேலும், நீங்கள் பாவத்தில் விழாதவாறும் அவர் உங்களை காக்கிறவராயிருக்கிறார். ஆகவே, நீங்கள் தோல்வியை சந்திக்கும்போது, விரக்தியின் குழியிலேயே இருந்துவிடாதீர்கள். மேலே ஏறி வாருங்கள்! தூசியை உதறிவிட்டு பந்தயத்தில் தொடர்ந்து ஓடுங்கள். விலையேறப்பெற்ற உங்கள் இலக்கை இழந்துவிடாதிருங்கள். தேவனுடைய இரத்தத்தின் மூலம் உங்களை கட்டி வைத்திருக்கும் ஒவ்வொரு கட்டுகளிலிருந்தும் நீங்கள் விடுவிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.
Prayer:
அன்பு தகப்பனே,

இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்காக உமக்கு நன்றி. நீர் எனது வழக்கறிஞராகவும் இருந்து என்னைத் தண்டனைக்கு தப்புவிக்கிறீரே உமக்கு நன்றி. உமது இரத்தத்தினால் என் பாவக் கட்டுகளிலிருந்து நான் விடுதலை பெற்றிருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். நல்ல மனச்சாட்சியை எனக்கு அருளிச் செய்வதற்காக உமக்கு நன்றி. நான் எப்போதும் பரிசுத்தத்தில் நடக்க எனக்கு உதவி செய்யும். என்றென்றும் என்னை கைவிடாமல் காத்தருளும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000