Loading...
Dr. Paul Dhinakaran

காத்திருப்பு மதிப்புள்ளதை தரும்!

Dr. Paul Dhinakaran
10 Sep
வேதத்தில் ரூத் என்ற பெண்ணைக் குறித்து வாசிக்கிறோம். அவள் தன் கணவனை இழந்தபோது, தன் பெற்றோரிடம் செல்வதற்கு பதிலாக, தன் மாமியார் நகோமியின் தேவன் தன் தேவன் என்று சொல்லி, தன் மாமியாரைப் பற்றிக்கொள்கிறாள். தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று ஒரு புதிய வாழ்க்கையைப் பெற்றுக்கொள்வதற்குப் பதில், ரூத் தன் மாமியாருடன் இருப்பதையே தெரிந்துகொண்டு, பொறுமையாக தேவன் அவளில் கிரியை செய்யும்படி அர்ப்பணித்தாள். நடந்தது என்ன? போவாஸின் ஆசீர்வாதங்கள் ரூத்தின்மேல் வந்தது. போவாஸ் ரூத்தைப் பார்த்து, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின் கீழே வந்தபடியால், அவர் உனக்கு ஆசீர்வாதம் கொடுப்பார்” என்றான். அவன் ரூத்தை விவாகம் பண்ணினபோது, திரும்பவும் அவளது வாழ்க்கை கட்டப்பட்டது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், அவளுடைய வம்ச வரலாற்றில் உதித்தார் என்று வேதம் கூறுகிறது.

பிரியமானவர்களே, இன்றைய சந்ததியினர் திடீர் காஃபி, திடீர் உணவு ஆகியவற்றையே விரும்புகிறார்கள். எல்லாமே வேகமாக செய்யவேண்டிய நிலை இருப்பதால், தேவனும், சீக்கிரமாக கிரியை செய்ய வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அவர் பொறுமையின் ஆண்டவர், அவர் சரியான நேரத்தில் நேர்த்தியாய் காரியங்களைச் செய்வார். ரூத், எப்படி பொறுமையாக இருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டாள் என்று வாசித்து அறிந்திருக்கிறீர்கள் அல்லவா! இன்றைக்கு நீங்களும் உங்களை தேவனுக்கு முன்பாக தாழ்த்தி பொறுமையோடு காத்திருங்கள். அவர் உங்கள் வாழ்க்கையில் அதிசயங்களை செய்வார். நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்ல தேவன் அவர் (எபேசியர் 3:20). தேவன் எல்லாவற்றையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார் (பிரசங்கி 3:11). தேவன் நிர்ணயித்திருக்கும் சரியான நேரத்தில் நமக்கு ஆசீர்வாதம் வரும். அவர் தரும்போது அவை நமக்குத் தேவையான சரியான காரியமாகவே இருக்கும். 
கானாவூரில் இயேசு என்ன செய்தார் என்பதை நாம் புதிய ஏற்பாட்டில் வாசிக்கிறோம். அவர் திருமணவீட்டில் இருந்தபோது, திராட்சரசம் குறைவு ஏற்பட்டபோது, இயேசுவின் தாயாகிய மரியாள் இயேசுவிடம் தேவையானதைச் செய்யும்படி கேட்டபோது, “என் வேளை இன்னும் வரவில்லை” என்று இயேசு கூறினார். ஆனால், அவருக்கான வேளை வந்தபோது, தண்ணீரை திராட்சரசமாய் மாற்றினார். திராட்சரசத்தை பருகியவர்கள் கலியாண விருந்தில் பிந்தினோருக்கும் நல்ல ரசம் பரிமாறப்பட்டது என்று சாட்சி கூறினர். லாசரை அடக்கம் செய்து நான்கு நாட்களுக்குப் பின்பு கர்த்தர் எவ்வாறு அற்புதம் செய்தார் என்பதையும் நாம் வேதத்தில் வாசிக்கிறோம். எல்லோரும் கைவிட்ட கடைசி தருணம் தான், தேவன் மகிமைப்படுவதற்கான சரியான நேரம் என்பதை இயேசு அனைவருக்கு முன்பாகவும் விளங்கச்செய்தார். சில நேரங்களில் தேவன் ஆசீர்வாதத்தை தருவதற்கு தாமதிக்கலாம். ஆனால், தேவன் அதை தரும்போது, ஒவ்வொரு கண்களும் இது தேவனால் கொடுக்கப்பட்டது என்பதை காணும். கர்த்தரை உறுதியாய் பற்றிக்கொள்ளுங்கள். உங்கள் அற்புதம் வந்துகொண்டிருக்கிறது.
Prayer:
பரம தகப்பனே,
 
நீர் சரியான வேளையில் காரியங்களை நடப்பிக்கிற பொறுமையின் தேவன். தேவனே, இந்த பொறுமையை என்னிலும் தாரும். உமது ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்ட ரூத், யோசேப்பு போல, நானும் பொறுமையோடு காத்திருக்க எனக்கு உதவி செய்யும். சரியான நேரத்தில் நீர் எனக்கு நேர்த்தியானதைத் தருவீர் என்று விசுவாசிக்கிறேன்.
 
இயேசுவின் நாமததில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
 
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000