Loading...
Dr. Paul Dhinakaran

மேலான ஆசீர்வாதம்!

Dr. Paul Dhinakaran
05 Jan
இன்றைக்கும்  பிரியமானவர்களே, உங்கள் வாழ்வின் தேவைகள் உங்கள் சந்தோஷத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறதா? அவநம்பிக்கையில் நீங்கள் மூழ்கியிருக்கிறீர்களா? உங்களுக்கு ஒத்தாசை அளிக்கிற கர்த்தரை நோக்கிப்பாருங்கள் (சங்கீதம் 121:1,2). உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. உங்கள் வழிகளைப்பார்க்கிலும் தேவனுடைய வழிகள் மிகவும் உன்னதமானவைகள். “நாம் வேண்டிக்கொள்வதற்கும் நினைப்பதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவர்” (எபேசியர் 3:20) என்று வேதம் கூறுகிறது. நீங்கள் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் மிகவும் அதிகமாய் கொடுக்கிற தேவன் அவர். நீங்கள் சுகத்தை கேட்பீர்களாகில், அவர் பரத்திலிருந்து உங்களுக்கு தெய்வீக சுகத்தை அனுப்புவார். ஒரு கொள்ளை நோயும் உங்களை அணுகாதபடி உங்களை பாதுகாப்பதுடன், நீங்கள் மற்றவருக்கு ஆசீர்வாதமாயிருக்கும்படியான சாட்சியாக வைப்பார். மற்றவருக்கு நீங்கள் உதவும்படி உங்களை ஐசுவரியவானாக்குவார். தீய காரியங்களிலிருந்து உங்களை பாதுகாத்து, பிசாசின் ராஜ்யத்தையும் அழித்துப்போடுவார். 

சென்னையை சேர்ந்த திரு ஜெயராஜ் 2002ல் திருமணம் செய்தார். அதன்பிறகு ஆறு ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்தார். பிசாசின் கிரியைகளினால் பாதிக்கப்பட்டு தவித்து வந்தார். பல மருத்துவர்களைக் கலந்தாலோசித்து மருத்துவம் எடுத்துக்கொண்டனர். ஆனால் அதனால் மருத்துவம் பலனளிக்கவில்லை. ஒரு நாள் இரவு அவருடைய மனைவி இரத்தம் வாந்தி எடுப்பதைக் கண்டு மருத்துவரிடம் அழைத்துச்சென்றார். மருத்துவர்கள் மஞ்சள் காமாலை நோயின் கடைசி கட்டம் என்றும், அவருடைய உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், அவர் இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உயிர்வாழ்வார் என்றும் கூறிவிட்டனர். எந்தவொரு தீர்வுமில்லாமல் ஏறக்குறைய ஒரு வருட காலம் கண்ணீரில் கழித்தனர். அதே நேரத்தில், சென்னை, செயின்ட் ஜார்ஜ் பள்ளியில், இயேசு அழைக்கிறார் பிரார்த்தனைக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் அவர்கள் இருவரும் கலந்துகொண்டனர். திரு. ஜெயராஜ் அவர்கள், “ஆண்டவரே, எனக்கு குழந்தை கூட தேவையில்லை. தயவுசெய்து என் மனைவியை மட்டும் காப்பாற்றி அவளுக்கு நல்ல ஆரோக்கியத்தை தாரும் என்று கண்ணீரோடு பிரார்த்தனை ஏறெடுத்தார்” அவர்கள் நம்பிக்கையுடன் குடும்ப ஆசீர்வாத திட்டத்தில் தங்களை சேர்த்துக்கொண்டு வீடு திரும்பினர். மூன்று மாதங்களுக்குப் பிறகு, மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கடந்து சென்றனர். ஆச்சரியம் அவர்களுக்கு காத்திருந்தது. அவரது மனைவி கருத்தரித்திருந்தார்கள். ஆனால், அவர் மனைவிக்கு மண்ணீரல் இல்லாததால் கர்ப்ப காலத்தில் அவர்கள் ஆரோக்கியம் எப்படி இருக்குமென்று நினைத்து பயந்தார்கள். அவர்கள் இருவரும் பிரார்த்தனைக்காக அடிக்கடி இயேசு அழைக்கிறார் ஜெபகோபுரத்திற்கு வந்து ஜெபித்துச் சென்றனர். தேவன் அவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையை கொடுத்து ஆசீர்வதித்தார். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக!
பிரியமானவர்களே, உங்கள் வாழ்க்கையில் அதிசயங்களைச் செய்ய தேவன் காத்திருக்கிறார். தேவனுடைய அற்புதங்களை அனுபவிக்க, அவருடைய வாக்குறுதிகளை விசுவாசியுங்கள். நீங்கள் எப்பொழுதும் ஆண்டவருடைய வார்த்தைகளை தியானிக்கும்போது உங்கள் இருதயத்தில் நம்பிக்கை துளிர்விடும். நீங்கள் தியானிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு விதை போன்றது என்பதால் இயற்கையாகவே, அற்புதங்கள் செடிபோல முளைத்தெழும்பும். “இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய்” (யோவான் 1:50) என்று வேதம் கூறுகிறபடி, அவர் உங்களுக்காக வைத்திருக்கும் மேலான ஆசீர்வாதங்களை காண்பதற்கு, உங்கள் இருதயம் துக்கங்கள், பற்றாக்குறைகள் மற்றும் அவமானங்களைத் தாண்டி பயணிக்கட்டும். “தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப்போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்” (மீகா 2:13).
Prayer:
அன்புள்ள ஆண்டவரே,

உம்முடைய அற்புதமான வாக்குறுதிகளுக்கு நன்றி. எனது நம்பிக்கையின்மையை நீக்கியருளும். இப்போதும்கூட என்னை உமது நம்பிக்கையினால் நிரப்பும். நான் நினைப்பதற்கும்  வேண்டிக்கொள்வதற்கும் மேலாக நீர் என்னை ஆசீர்வதிப்பீர் என்று நான் நம்புகிறேன். புரிந்துகொள்ள முடியாத அதிசயங்களையும், பெரிய அற்புதங்களையும் நீர் செய்வீர் என்று நான் விசுவாசிக்கிறேன்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, 

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000