Loading...
DGS Dhinakaran

சிநேகிதருக்காக ஜீவனைக் கொடுக்கும் அன்பு!

Bro. D.G.S Dhinakaran
11 Oct
“ஒருவன் தன் சிநேகிதருக்காக தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” (யோவான் 15:13).
பிரியமானவர்களே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன் சீஷர்களைப்பார்த்து “நான் உங்களை சிநேகிதர் என்றேன்” (யோவான் 15:15) என்றார். “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்.” (நீதிமொழிகள் 17:17) “சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு” (நீதிமொழிகள் 18:24) என்று வேதம் கூறுகிறது. சிநேகிதன் சந்தோஷமான நேரத்திலும், துக்க நேரத்திலும் சிநேகம் பாராட்டுவான்.  இவ்வுலகில் உங்களுக்கு ஒருவேளை நண்பர்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களுக்கு நல்ல நண்பனாயிருக்கிறார். அவருடைய அன்பு பெரியது.  
பல வருடங்களுக்கு முன்பு என் இருதயம் ஒன்றரை மணி நேரம் நின்று போனது. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். என் ஜீவனை மீட்க பதினைந்து மணிநேரம் மருத்துவர்கள் போராடினார்கள். அந்நேரத்தில்  என் சரீரத்தில் செலுத்தும்படி 18 பாட்டில் இரத்தம் தேவைப்பட்டது. மருத்துவர்கள் எனக்கு இரத்தம் தேவைப்படுகிறது என்று அறிவித்தபோது, கல்லூரி மாணவர்கள், நண்பர்கள், காவல் துறையினர் என்று அநேகர் வந்து என்னுடைய இரத்தத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்றனர். மருத்துவக்கல்வி பயிலும் மாணவன் ஒருவன் ஓடோடிவந்து, என் இருதயத்தை எடுத்து அவருக்கு வைத்துவிடுங்கள். நான் மரித்தாலும் பரவாயில்லை, அவர் உயிர் பிழைக்கட்டும்  என்றான். இவர்களெல்லாம் என்னுடைய உறவினர்கள் அல்ல; என்னுடைய நண்பர்கள். அவர்கள் என்மீது அளவில்லாத அன்பை ஊற்றும்படி ஆண்டவர் அவர்களை நண்பர்களாக கொடுத்திருந்தார். இதுபோலவே,  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தம்ஜீவனையே நமக்காக கொடுத்து நம்மை மீட்டிருக்கிறார். எத்தனை பெரிய அன்பு?
 
எனக்கன்பான சகோதர/சகோதரியே, இயேசு உங்களை மிகவும் நேசிக்கிறார். அவர் உங்களோடு உலாவ வேண்டும், பேசவேண்டுமென்று ஆவலாயிருக்கிறார். உங்கள் நம்பிக்கையை இழந்துபோகாதிருங்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு உங்கள் இருதயத்தில் இடங்கொடுங்கள். ஆபத்து நேரத்தில், தேவையின் மத்தியில், மற்றவர்கள் உங்களை விட்டு ஓடிப்போகலாம். ஆனால் உங்களோடுகூடவே இருக்கிற இயேசுவானவர் ஒருநாளும் உங்களை கைவிடமாட்டார். அவர் உங்களை விட்டு விலகுவதுமில்லை, உங்களை கைவிடுவதுமில்லை (எபிரெயர் 13:5). ஆபத்தில் அருந்துணை அவரே. முடிவில்லாத அன்பை நம்மீது ஊற்றுகிறவர். நேற்று மட்டுமல்ல நாளை மட்டுமல்ல, நித்திய காலமாய் நம்மை நேசிப்பவர். இந்த நல்ல நண்பன் நம்மோடிருக்கும்போது, நாம் எதைக்குறித்தும் கலங்கவேண்டியதில்லை.  “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” (யோவான் 15:13). உங்களுக்காக தன் ஜீவனையே கொடுத்த இந்த அன்பு நண்பரை உங்கள் இதய தெய்வமாக ஏற்றுக்கொண்டு, அவரிடத்தில் உங்கள் வாழ்க்கையை அர்ப்பணியுங்கள். அவர் உங்களை ஆசீர்வதிப்பார்.  
Prayer:
அன்பு நிறைந்த எங்கள் பரம தகப்பனே,

எனக்காக உம்முடைய ஜீவனையே கொடுத்து என்மீது அன்பு செலுத்தியிருக்கிறீர் உமக்கு ஸ்தோத்திரம். இந்த மேலான அன்பை நான் எப்பொழுதும் போற்றித் துதிக்க கிருபை செய்தருளும். பாவியாகிய என்மீது நீர் எப்பொழுதும் சிநேகம் பாராட்ட வேண்டும்.  உம்மிடத்தில் என்னை அர்ப்பணிக்கிறேன். நான் உமக்கு பிரியமாக வாழ எனக்கு கிருபை தாரும். எதை செய்தாலும் அதை உமக்கென்று முழு மனதுடன் செய்யும்படியாய் என்னை தகுதிப்படுத்தும். நீர் கொடுத்த இரட்சிப்பை நான் பெற்றுக்கொண்டதோடு நின்றுவிடாமல், மற்றவர்களும் பெற்றுக்கொள்ள உதவிச்செய்யும்படி எனக்கு கிருபைச் செய்தருளும். இயேசு என்ற இணையற்ற நாமத்தில் இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறேன் நல்ல பிதாவே.

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000