Loading...
Stella dhinakaran

கர்த்தருக்கு முன்பாக தாழ்மைப்படுங்கள்!

Sis. Stella Dhinakaran
24 Dec
இந்த கிறிஸ்துமஸ் நாட்களில், உங்கள் வாழ்க்கையில் தாழ்மையின் சிந்தை இருக்கிறதா? என்று உங்களை சோதித்து பார்த்து, பொறுமையோடு தேவனுடைய பாதத்தில் காத்திருங்கள். இயேசுவின் தாயாகிய மரியாள் சொல்வதைப் பாருங்கள்: “அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப் பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லா சந்ததிகளும் என்னை பாக்கியவதி என்பார்கள்” (லூக்கா 1:48). மரியாள், இந்த பாக்கியம் பெறுவதற்கு முன்னால், எவ்வாறு தன்னை தாழ்த்தினார்கள்? திருமணமாவதற்கு முன்பே, பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியாகி தேவகுமாரனை வயிற்றில் சுமக்க வேண்டுமென்ற, தேவசித்தத்தை அவர்கள் அறிந்தபோது, அதனால் தன் வாழ்க்கையில் ஏற்படும் விளைவுகளைப்பற்றி சற்றும் கவலைப்படாமல், தேவசித்தத்திற்கு முழுமனதுடன் இசைந்து, “ஆண்டவரே, இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உமது வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது” (லூக்கா 1:38) என்று தன்னை ஒப்புக்கொடுத்தார்கள். ஆகவேதான், ஆண்டவர் அவர்களை பாக்கியவதியாக மாற்றினார்! நாமும் தாழ்மையின் சிந்தையை அணிந்துகொள்வோம்.

தேவனால் வல்லமையாக உபயோகிக்கப்பட்ட ஊழியர் ஒருவர், ஊழியத்தினிமித்தம் செல்லும் இடங்களில் தனக்கு ஒத்தாசையாக, மனைவியையும் தன்னுடன் அழைத்து செல்வார். அந்த இடங்களிலெல்லாம், ஊழியரை உபசரித்து விருந்து செய்யும்போது, அவருக்கு மட்டும் அன்போடு விசேஷித்த உணவைப் பரிமாறுவார்கள். ஆனால், அவருடைய மனைவியையோ வெறும் வார்த்தையினால் கவனிப்பதோடு நிறுத்திவிடுவார்கள். இந்த காரியம் ஊழியரின் மனைவிக்கு சற்று கடினமாக இருந்தது. ஆனால், நாளடைவில் அவர்கள் தன் உள்ளத்தில், “என் கணவர் தேவனால் வல்லமையாக பயன்படுத்தப்படுகிறார்; ஆகவேதான், அவரை அவ்வாறு உபசரிக்கிறார்கள்! நானோ, ஆண்டவருக்கென்று ஒன்றும் பெரிதாக செய்யவில்லையே! என் கணவருக்கு உதவியாய் இருக்கிறேன். அவ்வளவுதானே! எனக்கு இந்த மரியாதைபோதும்” என்று தன்னை தாழ்த்தினார்கள். நாட்கள் கடந்தன! அந்த சகோதரியின் தாழ்மையை ஆண்டவர் கண்ணோக்கினார்! அவர்களுக்கும் ஊழியத்திலே ஒரு பங்கைக் கொடுத்தார். வரங்களினாலும், வல்லமையினாலும் அவர்களை நிரப்பினார். அதன்பிறகு ஜனங்கள் அவர்களையும் மிகுந்த அன்போடு உபசரித்தார்கள். மனிதருக்கு முன்பாகவும், ஆண்டவருக்கு முன்பாகவும், தன்னை தரை மட்டும் தாழ்த்திய அந்த சகோதரியை ஆண்டவர் கனப்படுத்தி உயர்த்தினார்! 
ஆம் எனக்கன்பானவர்களே! நீங்களும் சிந்தையை அணிந்துகொள்ளுங்கள். “ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்” (1 பேதுரு 5 :6). கர்த்தர் உங்களை உயர்த்தி கனப்படுத்தும் வரைக்கும் அவர் சமூகத்தில் காத்திருங்கள். அப்பொழுது அவர் உங்கள் தாழ்மையை கண்ணோக்கி பார்ப்பார்.
Prayer:
என்னை நேசிக்கும் அன்பு பரமபிதாவே, 

இயேசுவின் நாமத்தில் உம்மிடம் வருகிறேன்; சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்கிற தெய்வமே உமக்கு ஸ்தோத்திரம்! உம்முடைய பாதத்தில் என்னை தாழ்த்தி அர்ப்பணிக்கிறேன். நீர் எனக்கு கொடுத்திருக்கும் இந்த வாழ்க்கையில் நீர் பெருகவும், நான் சிறுகவும் கிருபை பாராட்டும். ஒருபோதும் பெருமை என்னை ஆட்கொள்ளாதபடிக்கு என் சிந்தையை காத்தருளும்.  நீர் ஏற்றக் காலத்தில் எனக்கு நன்மை செய்பவராயிருக்கிறபடியால் உமக்கு நன்றி! நான் தாழ்மையின் சிந்தையை அணிந்துகொண்டு, உமக்குள் பொறுமையோடு காத்திருக்க எனக்கு இரக்கம் பாராட்டும்.

 இயேசுவின் நாமத்தில் இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறேன் தகப்பனே. 
       
ஆமென்.
 

For Prayer Help (24x7) - 044 45 999 000