Loading...
Samuel Paul Dhinakaran

கர்த்தரை கனம்பண்ணு!

Samuel Dhinakaran
28 Dec
மகாத்மா காந்தியைப்போன்ற ஒரு பெயரும் புகழும் தனக்கும் வேண்டுமென்று  அநேகர் நினைக்கின்றனர். தேசத்திற்காக அஹிம்சை வழியில் போராடி சுதந்தரத்தை பெற்றுத்தந்த தேசப்பிதா என்று அவர் அழைக்கப்பட்டார். வரலாற்றில் அவருக்கென்று தனித்துவமான ஒரு இடத்தை பிடித்தார். அதுபோல சிலர் விளையாட்டு துறையிலுள்ள சச்சின் டெண்டுல்கரை போன்று தானும் பெயரெடுக்க வேண்டுமென்று விரும்புகின்றனர். ஒரு சாதனையாளராக அவருடைய பெயரும் வரலாற்றில்  இடம்பெற்றிருக்கும். நாம் பொதுவாகவே இந்த சமூகத்தில் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவர்களுடைய பெயரும் புகழும் நமக்கும் வேண்டுமென்று நினைக்கின்றோம்.

2 சாமுவேல் 7:9ல், ஆண்டவர் தாவீதுக்கு பெரிய நாமத்தை கொடுத்திருப்பதை வாசிக்கின்றோம்.  அவர் தாவீதோடே, “நீ போன எவ்விடத்திலும் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம்.... நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்துக்கு ஒத்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்”  என்று கூறுகிறார். கர்த்தருக்கென்று எதையும் செய்ய ஆயத்தமாயிருக்கிறவர்களின் இருதயத்தை அவர் கனம்பண்ணி, அவர்கள்  நாமத்தை பிரஸ்தாபப்படுத்துகிறார்.  தாவீது ஆண்டவர்மீது வைராக்கியம் கொண்டவனாய் அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, அவருக்காக எதையும் செய்ய ஆயத்தமாயிருந்தான். “உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன். உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்” (சங்கீதம் 119:8,140) என்று கூறினான். சங்கீதம் புத்தகத்தில் அநேக இடங்களில் நான் உமது அடியேன் என்று குறிப்பிடுகிறான். ஆகையால் தான் தேவன் “தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாக கண்டேன்” (அப்போஸ்தலர் 13:22) என்று கூறுகிறார்.   ஆம் இயேசுகிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் தாவீதின் பெயர், “தாவீது ராஜா” என்ற கனத்துடன் குறிக்கப்படும்படி கர்த்தர் அவனுடைய நாமத்தை கனப்படுத்தினார். 
தாவீதின் நாமத்தைப்போல் ஒரு மிகச்சிறந்த நாமத்தை ஆண்டவர் உங்களுக்கும் கொடுக்க ஆவலுள்ளவராயிருக்கிறார். “அவருடைய நாமம் மாத்திரமே உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது” (சங்கீதம் 148:13). இந்த உயர்ந்த நாமத்தையுடைய தேவனை நீங்களும் மகிமைப்படுத்துவீர்களா? “நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்” (யாத்திராகமம் 20:24) என்று கூறியிருக்கிறார். தாவீதைப்போல, அவர் உங்கள் நாமத்தையும் பூமியெங்கும் பிரஸ்தாபப்படுத்துவார். இன்றைக்கு ஆண்டவர் இதை உங்களுக்கு வாக்குக்கொடுக்கிறார்.  “அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்” (சங்கீதம் 113: 7,8). அவருடைய வார்த்தையை விசுவாசியுங்கள். அவர் உங்களை பிரபுக்களோடு உட்காரச்செய்து, உங்கள் பெயரை வரலாற்று பக்கங்களில் இடம்பெறச்செய்வார். 
Prayer:
எல்லாம் வல்ல பிதாவே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எல்லா நாமத்திற்கும் மேலாக உயர்த்தினதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அற்புத வல்லமையை என் வாழ்விலும் அனுபவித்திட உதவியருளும். ஆபத்துக் காலத்திலே அவரை நோக்கிக் கூப்பிடவும், விடுதலை பெற்று அவருடைய நாமத்தை மாத்திரம் மகிமைப்படுத்தவும் கிருபையளித்தருளும்! இந்த வல்லமையுள்ள, மகத்துவமுள்ள நாமத்தைப் பற்றி அறிந்திடாத ஜனங்களை சந்தித்து அறிவிக்க உமது ஆசீர்வாதத்தை என் மேல் பொழிந்தருளும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன்.

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000