Loading...

பரிபூரண ஆனந்தம்!

Samuel Dhinakaran
07 Oct
பிரியமானவர்களே! நம்முடைய உடைந்துபோன உள்ளத்தைத் தேற்றும்படியாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்குள் வருகிறார். உங்கள் வாழ்வில் நீங்கள் கடந்து செல்கிற பாதைகள், உங்கள் இருதயத்தில் இருக்கிற கவலைகள், வேதனைகள், பெலவீனங்கள் அனைத்தையும் அவர் அறிவார்.
 
பரிசுத்த ஆவியானவர் உங்கள் இருதயத்திற்குள் வரும்போது, பரலோக சந்தோஷத்தை உங்களால் அனுபவிக்க முடியும் (ரோமர் 14:17). இல்லாவிட்டால், இயேசுவோடுகூட உங்களால் சம்பாஷிக்கவோ, தனிப்பட்ட ஐக்கியம் கொள்ளவோ முடியாது. ஆகவே, நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரம்பியிருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். பரிசுத்த ஆவியானவர் மூலமாக கிறிஸ்துவின் சந்தோஷம் உங்கள் இருதயத்தில் வரும்போது, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், உங்களைச் சுற்றி யார் இருக்கிறார்கள் என்பதையும், உங்களை வேதனைப்படுத்துகிற கவலைகள், பயங்கள், பிரச்சினைகள் அனைத்தையும் நீங்கள் மறந்துவிடுவீர்கள். ஏனெனில், தேவனோடுகூட முழுவதுமாக இணைக்கப்பட்டிருப்பீர்கள். உங்கள் கண்கள் பிரச்சினைகளையல்ல, தேவனையே நோக்கிப் பார்க்க ஆரம்பிக்கும்பொழுது பரிசுத்த ஆவியானவர் உங்களைத் தேற்றுகிறார் (மத்தேயு 11:28). பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு விடுதலையை கட்டளையிடுகிறார் (கொலோசெயர் 2:13-15; 2 கொரிந்தியர் 3:17). உங்களுக்குள் நம்பிக்கையை உண்டுபண்ணுகிறார் (யோசுவா 1:5).
“தேவனால் விடப்பட்ட ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமண்டலத்தை எடுத்து, தன் கையினால் வாசிப்பான்; அதினாலே பொல்லாத ஆவி அவனைவிட்டு நீங்க; சவுல் ஆறுதலடைந்து சொஸ்தமாவான்” (1 சாமுவேல் 16:23) என்ற வேதவசனத்தின்படி, சவுல் இருளின் ஆதிக்கத்தினால் சிக்கி, சமாதானம், சந்தோஷத்தை இழந்து தவித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது தேவனுடைய பிரசன்னத்தால் நிரம்பியிருந்த தாவீது வந்து, இசை வாசித்து, தேவனைத் துதித்துப் பாடினபோது, சவுலைப் பிடித்திருந்த அசுத்தஆவி அவனைவிட்டு விலகினது; சவுல் ஆறுதல் அடைந்து சொஸ்தமானான். 

பரிசுத்த ஆவியானவருக்கு நாம் இடம் கொடுக்கும்போது, இந்த இளைப்பாறுதல் நம் உள்ளத்தையும் நிரப்பும். மேலும், நம்மை வேதனைப்படுத்தும் இருளின் கிரியைகள், அசுத்த ஆவிகள் விலகுகிறது. அவர் நம்மை தேற்றுகிறார். “அவருடைய  சமூகத்தில் பரிபூரண ஆனந்தம் உண்டு” (சங்கீதம் 16:11) என்று வேதம் கூறுகிறது.  ஆகவே, பரிசுத்த ஆவியானவரை உங்கள் வாழ்க்கையில் பெற்று சந்தோஷமாய் வாழுங்கள்.
Prayer:
அன்பின் பரம பிதாவே,
நான் பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தை நிறைவாய் பெறும்படிக்கு என்னை ஆசீர்வதியும். கேளுங்கள் அப்பொழுது நிறைவாய் பெற்றுக்கொள்வீர்கள் என்று சொல்லியிருக்கிறீரே, என்னிலும், என் குடும்பத்திலுமுள்ள வேதனைகளையெல்லாம் நீக்கி, பரிபூரண சந்தோஷத்தினால் நிரப்பும். தேவனே உம்முடைய சமூகத்தில் என்னை தாழ்த்தி உம் சித்தத்துக்கு என்னை ஒப்பு கொடுக்கிறேன், என்னை ஏற்றுக்கொள்ளும்! என் குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் முன்மாதிரியாய் நான் நடக்கக்கூடிய விசுவாச வாழ்க்கையை எனக்குத்தந்தருளும்.
இயேசுவின் இனிய நாமத்தில் ஜெபத்தை ஏறெடுக்கிறேன், நல்ல பிதாவே.
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000