Loading...
Dr. Paul Dhinakaran

இயேசுவின் கண்ணீர்!

Dr. Paul Dhinakaran
02 Oct
பிரியமானவர்களே! சர்வ வல்லமையுள்ள தேவன், தன் ஜனங்களின் பாவங்களுக்காக இரத்தக் கண்ணீரை சிந்துகிறார். “நீங்கள் இதைக் கேளாமற்போனீர்களளனால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, கர்த்தருடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண் மிகவும் அழுது கண்ணீர் சொரியும்” (எரேமியா 13:17) என்று வேதம் கூறுகிறபடி, உங்கள் பெருமையினிமித்தம், கீழ்ப்படியாமையினிமித்தம், பாவஞ் செய்ததினிமித்தம், “நான் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
 
இயேசுநாதர் பவனியாக ஒலிவ மலையின் அடிவாரத்துக்கு சமீபமாய் வருகையில் திரளான கூட்டமாகிய சீஷரெல்லாரும் மிகுந்த சத்தத்தோடே அவரை புகழ்ந்தார்கள். அந்நேரத்தில் அவர் எருசலேம் நகரத்திற்கு சமீபமாய் வந்தபோது, “உனக்கு கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது” (லூக்கா 19:41,42) என்று வேதம் கூறுகிறபடி, எருசலேம் நகரத்தின் மக்களை நோக்கி, “எருசலேம் நகரத்தின் மக்களே, நீங்கள் பாவத்தில் இருக்கிறீர்களே, அழிவு உங்களை சந்திக்கும் காலத்தை அறியாதிருக்கிறீர்களே, உங்கள் கண்கள் மறைக்கப்பட்டிருக்கிறதே; இந்நாளிலாவது சமாதானத்துக்கு ஏற்றவைகளை அறிந்து கொண்டீர்களானால் நல்லது என்று எருசலேம் நகரத்திற்காக கண்ணிர் விட்டழுதார். அவருடைய கண்ணீர், அந்த நகரத்தின் மக்களை கழுவினது.
15 வருடங்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டிருந்த தன் கணவர், எப்படியாவது குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை பெறவேண்டும் என்ற கண்டிப்பினிமித்தம், இயேசு அழைக்கிறார் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு அவரது மனைவி அழைத்து வந்தார்கள்.  குடியின் மிகுதியினால் குடும்பத்தை கவனியாமல், கிடைக்கும் வருமானத்தை தவறான விதத்தில் செலவு செய்தவராய், மிகவும் கேவலமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். மட்டுமல்ல, அவர் வீட்டை விட்டு வெளியே போனால், வீட்டிற்கு திரும்பி வருவதற்கு அநேக நாட்களாகும். அந்நாட்களில் அவரது மனைவி கைபேசியில் தொடர்புகொள்ள முயற்சிக்கும்போது, அதை தொடர்புகொள்ள முடியாத நிலையில் வைத்துவிடுவார், மனைவியை அடித்து மிகவும் துன்புறுத்துவார். அடித்ததினிமித்தம் எத்தனையோ முறை மூச்சுத் திணறலினால் மரணப்பிடியில் சிக்கித் தவித்திருக்கிறார்கள். இதைப் பார்க்கும் குழந்தைகள் மிகவும் பயந்து நடுங்குவார்கள். இப்படியாய் அந்த மனைவி ஏழு வருடங்கள் கஷ்டப்பட்டார்கள். வேதனையை தாங்க இயலாமல் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று எண்ணங்கள் எழும்பும்போது, தன் குடும்பத்திற்கும், கிறிஸ்தவ சமுதாயத்திற்கு நேரிடும் அவமானத்தை எண்ணி, தற்கொலை எண்ணத்தை கைவிடுவார்கள். மிகுந்த மனவேதனையின் மத்தியில் ஆண்டவரை நோக்கி, “ஆண்டவரே, நீர் எப்படியாவது என் கணவரை குடிப்பழக்கத்திலிருந்து விடுதலையாக்கும்; என் குடும்பத்தை இரட்சியும்” என்று உபவாசித்து ஜெபித்து வந்தார்கள்.
 
இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவரது மனைவி ஒருநாள் பெதஸ்தா ஜெப மண்டபத்தில் நடைபெறவிருந்த ஆசீர்வாதக் கூட்டத்தைக் குறித்து கேள்விப்பட்டு, எப்படியாயினும் இக்கூட்டத்தில் பங்குபெறவேண்டும், அதில் "ஆண்டவர் டாக்டர். பால் தினகரன் மூலம் என் கணவரின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும், இல்லாவிடில், தற்கொலை செய்து மாண்டுவிடலாம்” என்ற தீர்மானத்துடன், தன் கணவரிடம், “நாம் பெதஸ்தாவில் நடைபெறும் இயேசு அழைக்கிறார் கூட்டத்திற்கு செல்வோம். டாக்டர். பால் தினகரன் செய்தியளித்து ஜெபிப்பார்கள். ஜெப வேளையில் ஆண்டவர் உங்களை பெயர் சொல்லி அழைத்து, உங்களைத் தொட்டு இந்த குடிப்பழக்கத்திலிருந்து  விடுதலை தருவார்” என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்கள்.  ஆனால் அவரோ, “நான் இப்படிப்பட்ட கூட்டங்களை நம்புவதில்லை. சகோதரர். பால் தினகரன், லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் ஏதோ சொல்லுகிறார்” என்று கூறி வர மறுத்தார். கடைசியில், தன் மனைவியின் வற்புறுத்துதலினால், “நான் முழுமையாக குடித்துவிட்டுத்தான் வருவேன், அவர் என் பெயரைச் சொல்லிக் கூப்பிடட்டும்” என்ற ஒரு நிபந்தனையுடன் ஒப்புதல் அளித்தார்.
 
அதன்படியே, கூட்டத்திற்கு புறப்படும் நாளில் குடித்துவிட்டு ஒரு மூலையில் வந்து உட்கார்ந்தார். ஜெப வேளையின் ஆரம்பத்திலேயே அவருடைய பெயரை அழைக்காததினால், “இதெல்லாம் மேஜிக்தான்”  என்று தன் உள்ளத்தில் எண்ணுவதற்குள், ஜெபவீரர் ஒருவர் அவரது தலையில் ஜெப எண்ணெய் பூசி ஜெபித்தார். அந்த நேரத்தில் தானே ஆண்டவர், அவரை பெயர் சொல்லி அழைத்து, “ரமேஷ்குமார், கர்த்தர் உன் பாவ வாழ்க்கை எல்லாவற்றையும் மாற்றி, நீ இழந்த எல்லாவற்றையும் இரண்டத்தனையாய் தருகிறார்” என்று கூறியதும், ஒரு நெருப்புத்தழல் அவரது உச்சந்தலையில் விழுந்ததை உணர்ந்தார். அந்த நேரத்தில் அவர் உள்ளத்தில் ஓர் தெய்வீக மாறுதல்! அன்றிலிருந்து அவர் குடிப்பழக்கத்திலிருந்து, பாவ வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விடுதலையானார். அதன்பின் ஆண்டவர் அவர் இழந்துபோன எல்லாவற்றையும் இரண்டத்தனையாய் கொடுத்து ஆசீர்வதித்தார். இப்பொழுது அதிகாலையில் 3 மணிக்கு விழித்து, வேதத்தைப் படிக்கிறார். கர்த்தர் அவர் இழந்த வேலையை மறுபடியும் கொடுத்திருக்கிறார். கர்த்தர் அவரை அளவில்லாமல் ஆசீர்வதித்துள்ளார். “அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது” (எபேசியர் 1:7). “(குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது” (கொலோசெயர் 1:14) என்ற வேத வசனங்களின்படி, இன்றைக்கும் இயேசு உங்கள் பாவம் மன்னிக்கப்பட வேண்டும், நீங்கள் பாவக்கட்டிலிருந்து வெளியே வரவேண்டும் என்று கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார். அவரது இரத்தக் கண்ணீர் உங்கள் பாவங்களைக் கழுவும், உங்களை சுத்திகரிக்கும்.
 
ஆம் பிரியமானவர்களே! பொல்லாத பாவ எண்ணங்கள் நம் வாழ்க்கையில் வரும்பொழுது, நம் கண்கள் குருடாக்கப்படுகிறது. அந்த பாவ பழக்கங்களிலிருந்து வெளியே வரவிடாமல் தடை செய்கிறது. ஆனால், கர்த்தர் இரக்கமுள்ளவர். அவர் நமக்காய் வடித்த இரத்தக்கண்ணீர் நம்மையும், நம் குடும்பத்தினரையும் கழுவுகிறது, பரிசுத்தமாக்குகிறது."நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்" (1 யோவான்1:9) என்று வேத வார்த்தையின்படியே உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, பாவமன்னிப்பை பெற்று இரட்சிப்படையுங்கள். அப்பொழுது தேவன் நீங்கள் இழந்த எல்லா ஆசீர்வாதங்களையும் உங்களுக்கு இரண்டு மடங்கு தருவார்.
Prayer:
என்னை நேசிக்கும் அன்பு பரமபிதாவே,
இயேசுவின் நாமத்தில் உம்மிடம் வருகிறேன். அப்பா! எங்கள் பாவங்களை மன்னிக்கிற தேவன் நீர். என் குறைவுகள் யாவையும் உம்மிடத்தில் அறிக்கை செய்கிறேன். நீர்தாமே முற்றிலுமாக பாவமற என்னை கழுவி சுத்திகரியும். இந்த உலகத்தில் பரிசுத்தமாய் உமது பாதையிலே நடக்க கிருபை தாரும். தீய பழக்கங்களையும், அடிமைத்தனங்களையும் விட்டுவிட்டு மனந்திரும்ப எனக்கும் ஒரு தருணத்தை ஏற்படுத்தி தாரும். உம்முடைய இரக்கங்கள் எப்பொழுதும் என் வாழ்வில் காணப்படுவதாக! அப்பா! பரலோகத்தில் உம்மோடு ஜீவிக்கும்படியான சிலாக்கியத்தைத் தந்து என்னை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே,       
 ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000