Loading...
Evangeline Paul Dhinakaran

சுகமளிக்கும் வார்த்தைகள்!

Sis. Evangeline Paul Dhinakaran
23 Dec
பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி உங்கள் பரலோகப் பிதா விரும்புகிறார் (3 யோவான் 2). எனவே, கிறிஸ்துவில் விசுவாசத்துடனும் அதிகாரத்துடனும், உங்கள் சுகத்திற்காக கேளுங்கள். ஒவ்வொரு வியாதியிலிருந்தும் உங்களை சுகப்படுத்தவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார்.  மேலும், “நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்” (யாத்திராகமம் 15:26) என்று அவர் சொல்லியிருக்கிறார். உங்களை உற்சாகப்படுத்தும்படி, தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி என்ற இடத்திலிருந்து செல்லதுரை என்ற சகோதரர் ஒரு சாட்சி கடிதத்தை எழுதியிருந்தார். உங்களை உற்சாகப்படுத்தும்படி அதை கீழே தருகிறேன்.

“என்னுடைய சிறுநீரகங்களில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பல ஆண்டுகள் நான் வேதனைப்பட்டு வந்தேன். எந்த வேலையும் செய்ய முடியாமல் சிரமப்பட்டேன். கடந்த செப்டம்பர் மாதம் ‘இயேசு அழைக்கிறார்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் சகோதரி இவாஞ்சலின் பால் தினகரன், செய்தியளித்து பிரார்த்தனை செய்தார்கள். அன்று சகோதரி, வியாதியில் உள்ளவர்களுக்காக ஜெபித்தார்கள். சிறுநீரக கோளாறினால் அவதிப்படுகிறவர்களுக்காக மிகச் சரியாக அவர்கள் ஜெபித்தபோது, நானும் இணைந்து ஜெபித்தேன். அப்போது தேவனுடைய வல்லமை என்மேல் இறங்கியது. வெகுநாட்களாக இருந்து வந்த சிறுநீரக கோளாறு, அந்த நேரத்தில் மறைந்துபோனது. இப்போது நான் சுகமாக இருக்கிறேன். ஆண்டவருக்கே மகிமை.” 

ஆம், உங்கள் அற்புதத்தைப் பெறுவதற்கு கடுகு விதையளவு விசுவாசம் போதுமானது என்பது உண்மைதான். நீங்கள் ஆண்டவரை பூரணமாய் விசுவாசித்தால், அவர் ஒருபோதும் உங்களை கைவிடமாட்டார். “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளிகளை இரட்சிக்கும்” (யாக்கோபு 5:15) என்று வேதம் கூறுகிறது. தேவனுடைய வார்த்தை ஜீவனுள்ளது, வல்லமையுள்ளது. பொக்கிஷமான அவருடைய வார்த்தையின் மூலம் நீங்கள் நன்மைகளை காண்பீர்கள். உங்களை குணமாக்கும் அற்புதரான இயேசு உங்களோடுகூட இருக்கிறார். அவருடைய வாக்குத்தத்தத்தை உறுதியாய் பற்றிக்கொள்ளுங்கள். “கர்த்தர் சகல நோய்களையும் உன்னைவிட்டு விலக்குவார்; உனக்குத் தெரிந்திருக்கிற எகிப்தியரின் கொடிய ரோகங்களில் ஒன்றும் உன்மேல் வரப்பண்ணாமல், உன்னைப் பகைக்கிற யாவர்மேலும் அவைகளை வரப்பண்ணுவார்” (உபாகமம் 7:15) என்ற வார்த்தையின்படியே உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் விசுவாசம் பெருகும்போது, “என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்” (மல்கியா 4:2). ஆம்! அவருடைய வார்த்தையிலிருந்து புறப்படுகிற வல்லமை, உங்களில் நோயைத் உண்டாக்குகிற இருளின் கிரியைகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.

Prayer:

அன்புள்ள ஆண்டவரே,

நீர் தருகிற நன்மையை நான் விசுவாசிக்கிறேன். நன்மையான ஈவுகளை கொடுப்பவர் நீரே. உம்முடைய பிள்ளைகள் எந்த வலியையும் நோயையும் அனுபவிப்பதை நீர் விரும்புவதில்லை. தவறான எண்ணங்கள், எதிர்மறையான உணர்வுகள், தவறான பழக்க வழக்கம் ஆகியவை என் உடலுக்கு நோயைக் கொண்டுவர அனுமதித்ததற்காக வருந்துகிறேன், என்னை மன்னித்தருளும். இப்போதும்கூட, உம்முடைய வாக்குறுதியையும், இயேசுவின் நாமத்திலும், இரத்தத்திலுமுள்ள குணமாக்கும் வல்லமையை நம்பி என் சுகத்திற்காக உம்மிடம் வந்துள்ளேன். உமது உயிர்த்தெழுதலின் வல்லமை என் சரீரத்தில் பாய்ந்து செல்லட்டும். செயலிழந்த என் உடல் பாகங்களை புதிதாய் உருவாக்கும். உம்மிடத்திலிருந்து ஒரு அற்புதத்தை எதிர்பார்க்கின்றேன். உம்முடைய  சிறகுகளின் கீழ் என்னை பாதுகாத்தருளும். தெய்வீக ஆரோக்கியம் ஒவ்வொரு நரம்பு வழியாகவும் வழிந்தோடட்டும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.  

For Prayer Help (24x7) - 044 45 999 000