Loading...
Evangeline Paul Dhinakaran

என் வாழ்வு தேவனுடைய வழியில்!

Sis. Evangeline Paul Dhinakaran
11 Jun
பிரியமானவர்களே, சில வேளைகளில் நம்முடைய தேவையில் யாருமே உதவுவதற்கு இல்லை என்று நாம் தனிமையை உணருகிறோம். இயேசுவின் பலத்த கரத்தினுள் நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்காகவே அதுபோன்ற சூழ்நிலைகள் வழியாக ஆண்டவர் நம்மை கடந்து செல்ல அனுமதிக்கிறார். ஆம் அவர் சகல நாட்களிலும் உங்களோடு கூடவே இருக்கிறார் (மத்தேயு 28:20).

உங்களுக்காக தேவன் ஏராளமான வாக்குத்தத்தங்களை கொடுத்திருக்கிறார். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், தேவனிடத்திலிருந்து வாக்குறுதியை பெற்ற பின் அந்த வார்த்தையை விசுவாசிக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளில் தேவனுடைய வாக்குறுதிகளையும் அவர்மீது கொண்ட விசுவாசத்தையும் விட்டுவிடாதிருங்கள். உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார். (செப்பனியா 3:17) என்று வேதம் நமக்கு நினைவூட்டுகிறது. அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் நீங்கள் விடுதலை பெற அவர்தாமே உங்களுக்கு உதவுவார். ஏற்றகாலத்தில் கர்த்தர் உங்களை உயர்த்தும்படிக்கு அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருக்க வேண்டுமென்று ஆண்டவர் எதிர்பார்க்கிறார் (1 பேதுரு 5:6).

‘புலம்பலின் தீர்க்கதரிசி’ என்று அழைக்கப்பட்ட எரேமியாவை ஆண்டவர் ஜனங்களுக்காக மன்றாடும்படி தேர்ந்தெடுத்தார். ஜனங்கள் தங்கள் பாவத்திலிருந்து மனந்திரும்ப வேண்டுமென்று அவன் ஆண்டவரிடம் மன்றாடினான். ஆண்டவர் இயேசுவைப்போன்றே எரேமியா அன்பினால், மனதுருக்கத்தினால், தைரியத்தினால் நிறைந்து மக்களுக்காக அழுது ஜெபித்தான். எரேமியாவைப்போன்று நாமும் மனதுருக்கத்துடனும், அதே நேரத்தில் நம் வாழ்வில் எல்லா சூழ்நிலையையும் எதிர்கொள்ளவும், விசுவாசத்தோடு தைரியமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.
 அவர் உங்களை உயர்ந்த ஸ்தானத்திற்கு உயர்த்துவார். “நீங்கள் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பீர்கள்” என்று ஆண்டவர் சொல்லுகிறார். “நீங்கள் கர்த்தருக்குள் களிகூர்ந்து, உங்கள் பிதாவாகிய யாக்கோபின் சுதந்தரத்தைப் புசிப்பீர்கள்” (ஏசாயா 58:11,14) என்றும் அவர் கூறுகிறார். நீங்கள் எந்த மனுஷனுக்குள்ளும் அல்ல, ஆண்டவருக்குள்ளேயே மகிழ்ந்திருப்பீர்கள். அவருடைய வார்த்தையை பற்றிக்கொள்ளுங்கள். இந்த உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு; ஆனாலும், திடன்கொள்ளுங்கள். ஆண்டவர் இந்த உலகத்தை ஜெயித்தார் (யோவான் 16:33). ஆண்டவரைப்போல நீங்களும் எல்லாவற்றையும் முற்றிலும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய் இருப்பீர்கள்.

கர்த்தர் எரேமியாவைப்போல, அவருடைய ராஜ்யத்தை கட்டியெழுப்பும்படி உங்களையும் அழைத்திருக்கிறார். அவர் தமது ஆவியினால் நம்மை நிறைத்திருக்கிறபடியினால், ஒன்றும் நம்மை அசைக்க முடியாது. நாம் அசைக்கப்படுவதில்லை. எந்த மனிதனைப் பார்த்தும் அஞ்சப்போவதுமில்லை. நாம் திடன்கொண்டு முன்னேறிச்செல்வோம். கர்த்தர் எரேமியாவின் நாவைத்தொட்டு அவனை பேசும்படி செய்ததுபோல உங்களையும் தொடுவார்.  

மோசேயோடும், எரேமியாவோடும் கூட இருந்த கர்த்தர், உங்களோடும் இருப்பார். இஸ்ரவேலின் ராஜா உங்கள் நடுவில் இருக்கிறார் (செப்பனியா 3:15,17). ஆகவே, நாம் ஒருபோதும் சோர்ந்துபோகக்கூடாது. நம்முடைய பலவீனங்கள் அவர் கிரியை செய்யாவொட்டாமல் தடுக்கக்கூடாது. அவரது கிரியையை மட்டுப்படுத்தும்படி நாம் சாக்குபோக்குச்சொல்லவும் கூடாது. திறப்பின் வாசலிலே அவர் முன்பாக நிற்போம். சிங்கத்தைப்போன்று தைரியமாக அவரது வார்த்தையை அறிவிப்போம். 

தேவனுடைய வார்த்தையை பற்றிக்கொள்ளும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறேன். தேவனை அறியாத ஜனங்கள் கிறிஸ்துவை அறிந்துகொள்ளும்படி திறப்பிலே நிற்பதற்கு ஆண்டவர் உங்களையும் அழைக்கிறார். நீங்கள் தேவனுடைய சேவையை செய்யும்போது எந்தவொரு கடினமான சூழ்நிலையும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. அவர் சிங்கத்திற்கு ஒத்த தைரியத்தை உங்களுக்கு தந்து அவர் நாம மகிமைக்காக உங்களை உபயோகப்படுத்துவார். 
Prayer:
ஜீவனுள்ள தேவனே,

என்னை நீர் தனியே விடவில்லை. என் தகப்பனாகிய நீர் என்னுடனே இருக்கிறீர் என்பதை நான் நம்புகிறேன். உம்முடைய தீர்க்கதரிசிகளைப்போல நானும் மற்றவர்களுக்காக திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்க எனக்கு நீர் கிருபை செய்தருளும். உம்மடைய வார்த்தைகளையே பற்றிக்கொள்கிறேன். நீரே என்னை வழிநடத்தி ஆசீர்வதியும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000