Loading...
Paul Dhinakaran

வழிகாட்டும் கண்கள்!

Dr. Paul Dhinakaran
14 Jan
வாழ்வின் முக்கிய தருணங்களில் என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் குழப்பமான சூழ்நிலையில் இருக்கிறீர்களா? இதோ, உங்களுக்காக ஒரு அழகான வாக்குத்தத்தம். “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (சங்கீதம் 32:8).  தேவனுடைய கண்கள் உங்கள்மீது இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் தேவைகளையும், கண்ணீரையும் அவர் ஒருநாளும் புறக்கணிக்கமாட்டார். தேவனுடைய வழிகளை நீங்கள் தெளிவாக கேட்பீர்கள். 

ஜெனரல் பேட்டன் என்பவரது வாழ்க்கை சரிதையை ஒருமுறை நான் வாசித்தேன். ஜெர்மானியர்களுக்கு எதிராக வீரமிக்க போர் புரிந்து வெற்றிமேல் வெற்றியைக் குவித்த புகழ்பெற்ற இராணுவ உயர் அதிகாரி அவர். மிகவும் கடினமான இடங்களை எதிரிகளிடமிருந்து ஜெனரல் பேட்டனுடைய வீரமும், மனஊக்கமும் மீட்டுத் தந்தன. பத்திரிகை நிருபர்கள் அவரிடம் எதிரிகளின் குண்டுமழை மிக அதிகமாக இருக்குமிடத்திலிருந்து எப்படி அந்த இடங்களை பிடிக்க முடிந்தது எனவும், தினமும் காலையிலும், மாலையிலும் அவர் படிக்கும் புத்தகத்தைப் பற்றி தங்களுக்கு சொல்லும்படியும் கேட்டுக்கொண்டனர். அவர் சிறிதும் தயக்கமின்றி, அது பரிசுத்த வேதாகமம் எனவும், யுத்தம் மும்முரமாக நடந்துகொண்டிருக்கும் வேளைகளிலும், அவர் தினமும் வேதத்தை வாசிப்பதாகவும் கூறினார். மேலும் தேவன் அவருக்கு யுத்தத்தில் எவ்வாறு முன்னேறி செல்ல வேண்டும் என்று வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் இருக்கிறார் எனவும் கூறினார். தொடர்ந்து, அவர், தம்முடைய நாட்கள் ஆண்டவரது கரங்களில் உள்ளன எனவும், இந்த உலகத்தில் தமக்கு வாழ்வதற்கு குறிப்பிட்ட காலம் உண்டு. அதேபோல் தம்முடைய மரணத்துக்கு குறிப்பிட்ட காலம் உண்டு என்றும் கூறினார். வேதத்தை வாசிப்பதினால் தன்னுடைய ஆவி உற்சாகப்படுகிறது என்றும் யுத்தம் கடுமையாக இருந்தாலும் தான் பயப்படாது அமைதியாக இருப்பதாகவும் கூறினார். 
பிரியமானவர்களே, முழு வேதாகமும் ஒரு பயணிக்கு வழிகாட்டும் வரைபடத்தை போன்றது. இந்த வழிகாட்டியின்மேல் உங்களுடைய இருதயத்தை பதிப்பீர்களானால், நீங்கள் சென்றடைய வேண்டிய இடத்தை எளிதாக சென்றடைவீர்கள். எதைக்குறித்தும் கவலைப்படாமல், தேவனுடைய வார்த்தைகளால் உங்கள் இருதயத்தை நிரப்புங்கள். நீங்கள். இன்றைக்கும் வேலை, குடும்பம் மற்றும் பள்ளியில் நீங்கள் எதிர்கொள்ளும் சோதனைகளையும், நிச்சயமற்ற தன்மைகளையும் தேவன் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் தமது ஞானத்தின் மூலம் உங்களுக்கு வழிகாட்டுவார். தெளிந்த சிந்தையை  தந்து, தெளிவான முடிவுகளை எடுக்க உதவுவார். அவருடைய கண்கள் எப்பொழுதும் உங்களை நோக்கிக்கொண்டிருக்கிறது என்பதை நினைவிற்கொள்ளுங்கள். நீங்கள் ஆசீர்வாதத்தை பெறுகிறவரைக்கும், தேவனுடைய வழிநடத்துதலில் இருந்து ஒரு காரியமும் உங்களை வழிவிலகச்செய்ய  முடியாது. “ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பாhக்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?” (மத்தேயு 6:26). ஒவ்வொரு நாளும் தமது வழிகாட்டுதலினால் உங்களை உற்சாகப்படுத்துவார். 
Prayer:
அன்பின் பரலோகப்பிதாவே, 

இத்தனை நாளும் உமது வார்த்தைகள்மீது என் கண்களை பதிக்காமல் போனதற்காக என்னை மன்னித்தருளும். என்னை தேற்றவும், உற்சாகமூட்டவும் உமது வார்த்தையைப் போல இந்த உலகத்தில் வேறு எந்த வார்த்தையும் இல்லை. நான் இரவும், பகலும் உம்முடைய வார்த்தையை தியானிக்க உதவி செய்யும். உமது வார்த்தைகளிலுள்ள அதிசயங்களைப் பார்க்கும்படி என் கண்களைத் திறந்தருளும். தெளிதேனிலும் மதுரமான உமது வார்த்தைகளை அனுதினமும் ருசிக்கும் அனுபவத்தை எனக்கு தந்து என்னை ஆசீர்வதித்தருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000