Loading...
Dr. Paul Dhinakaran

பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல்!

Dr. Paul Dhinakaran
06 Dec
“நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்..... வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன்.” (ஏசாயா 45:2-4) என்று வேதம் கூறுகிறது. தீர்க்கதரிசன வரத்தைக்கொண்டு, இந்த உலகில் நாம் எப்படி வாழவேண்டுமென்று தேவன் நம்மோடு பேசுவார். அவரே நமக்கு முன்பாக சென்று கோணலானவைகளை செவ்வையாக்கி, ஒளிப்பிடத்தில் இருக்கிற பொக்கிஷங்களை நமக்கு தருவேன் என்று வாக்களிக்கிறார்.  

பல வருடங்களுக்கு முன்பு, ஒரு குடும்பத்தினர் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றிருந்தனர். ஆவியானவருடைய வழிநடத்துதலின்படியே அவர்கள் ஒவ்வொரு காரியத்தையும் செய்தனர். ஒருநாள் பரிசுத்த ஆவியானவர் அவர்களிடம், “அர்மேனியா நாட்டில் மிகுந்த பஞ்சம் உண்டாகப்போகிறது. ஆகையினால் நீங்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு செல்லுங்கள்” என்று கூறினார். பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைக்கு அனைவரும் கீழ்ப்படிந்து அமெரிக்க தேசத்திற்கு சென்றனர். அங்கு பிழைக்க வழியில்லாமல், என்ன செய்வதென்றும் தெரியாமல் திகைத்தனர். மீண்டுமாக ஆவியானவர் அவர்களோடு இடைப்பட்டு, “கால்நடைகளை வாங்கி பால் வியாபாரம் செய்யுங்கள்” என்று கூறினார். தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, அவர் கூறியபடியே வியாபாரத்தை தொடங்கினர். தேவன் அவர்களுடைய வியாபாரத்தை ஆசீர்வதித்தார். இன்றைக்கு அவர்கள் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். உலகம் முழுவதிலும் வாழ்கிற வணிகர்களுக்காக, “பூரண சுவிசேஷ கூட்டுறவு” என்ற நிறுவனத்தை அவர்கள் ஸ்தாபித்தனர். “பூமியிலுள்ள மகிழ்ச்சியான மனிதர்கள்” என்ற புத்தகத்தையும் எழுதி வெளியிட்டனர். 
இதேபோன்று, தேவன் இன்றைக்கு உங்களையும் பூமியில் சந்தோஷமான மனிதராக மாற்ற விரும்புகிறார். பரிசுத்த ஆவியானவரை நீங்கள் பெற்றுக்கொண்டு அவருடைய வழிநடத்துதலின்படி வாழ்ந்தால் நிச்சயமாக செழிப்படைவீர்கள். “நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்” (கலாத்தியர் 5:25). உங்கள் வாழ்க்கையை இயேசுவுக்கு ஒப்புக்கொடுங்கள். பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொள்ளுங்கள். அவருடைய வார்த்தைக்கு நீங்கள் செவிகொடுத்தால், அவர் உங்கள் மனவிருப்பத்தை நிறைவேற்றுவார். மேலும், பரிசுத்த ஆவியானவரை நாம் துக்கப்படுத்தாமலும் இருக்க வேண்டுமென்று இயேசு நம்மை எச்சரிக்கிறார்.  “மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத் தூஷணங்களும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்; ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான்” (மாற்கு 3:28-29) என்று வேதம் கூறுகிறது. ஆகவே ஆவியானவருக்கு விரோதமாக எந்த வார்த்தையும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு அந்தகாரத்திலிருக்கிற பொக்கிஷத்தையும், ஒளிப்பிடத்திலிருக்கிற புதையல்களையும் தந்து உங்களை ஆசீர்வதிப்பார்.
Prayer:
தகப்பனே,

உம்மண்டையில் என் பாவங்கள் அனைத்தையும் நான் அறிக்கையிடுகிறேன். தேவனே, என்னை மன்னித்து உமது பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பும். என் வாழ்நாள் முழுவதும் நீரே என்னை போதித்து வழிநடத்தும். உமக்கு பிரியமாய் வாழ்கிற வாழ்க்கையை எனக்கு தந்தருளும். உம்முடைய நாம மகிமைக்காக சாட்சியாய் ஜீவிக்க என்னை வழிநடத்தும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, ஆமென். 

1800 425 7755 / 044-33 999 000