Loading...
Evangeline Paul Dhinakaran

ஜெயம் பெறுவீர்கள்!

Sis. Evangeline Paul Dhinakaran
28 Oct
எனக்கு அன்பானவர்களே, இன்றைக்கும் தேவன் உங்களுக்கு 1 சாமுவேல் 26:25ம் வசனத்திலிருந்து ஆசீர்வாதத்தை தருகிறார்."சவுல் தாவீதை நோக்கி: என் குமாரனாகிய தாவீதே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீ பெரிய காரியங்களைச் செய்வாய்; மேன்மேலும் பலப்படுவாய் என்றான்."  இந்த வார்த்தைகளையே தேவன் இன்று உங்களுக்கும் ஆசீர்வாதமாக கூறுகிறார், "என் பிள்ளையே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்" என்று கூறுகிறார். நீ பெரிய காரியங்களை செய்வாய் பலப்படுவாய். இந்த காரியத்தை சவுல் தாவீதைப்பார்த்து சொல்லுகிறான். சவுல் தாவீதை மிகவும் வெறுத்தான். அவனைக்கொல்லும்படி பின்தொடர்ந்தான். அவன் தாவீதை நேருக்கு நேர் பார்த்தபோது, அவனைக் கொல்வதற்குப் பதிலாக அவனை ஆசீர்வதித்தான். இது தேவனுடைய பிள்ளைகளின் ஆசீர்வாதம். நாம் முழு இருதயத்தோடும் தேவனை நேசிக்கும்போது, நம்முடைய எதிரிகளும் நம்மை ஆசீர்வதிக்கும்படி கர்த்தர் கிருபை செய்வார். 

"ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்" (நீதிமொழிகள் 16:7) என்று வேதம் கூறுகிறது. ஒரு மனிதனுடைய வழிகள் தேவனுடைய பிரியப்படுத்துகிற விதமாக இருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனுடன் சமாதானமாக இருப்பார்கள். ஆம், தாவீது தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாயிருந்தான். தாவீதைக்குறித்து தேவனே சாட்சி அளித்தார். ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்து சாட்சியுங் கொடுத்தார். இதுதான் தாவீதின் வழிகள் தேவனுக்கு பிரியமாயிருந்தது. ஆகவேதான் அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி தேவன் கிருபை செய்தார். 
நம்மை விரோதிப்பவர்கள் நம்மை வெறுத்து, நம்மீது பொறாமைப்பட்டு, நமக்கு எதிராக தவறான வார்த்தைகளைச் பேசும்போது, நாம் அவர்களை வெறுக்கிறோம் அல்லவா? ஆனால், அவர்களை வெறுப்பதற்குப் பதிலாக, நாம் அவர்களை ஆசீர்வதித்து, அவர்களுக்காக ஜெபித்தால், நம்முடைய சத்துருக்களை விட கர்த்தர் நம்மை அதிகமாய் ஆசீர்வதிப்பார். "சவுலின் குடும்பத்துக்கும் தாவீதின் குடும்பத்துக்கும் நெடுநாள் யுத்தம் நடந்தது; தாவீது வரவரப் பலத்தான்; சவுலின் குடும்பத்தாரோ வரவரப் பலவீனப்பட்டுப் போனார்கள்" (2 சாமுவேல் 3:1). ஆம், தாவீது வரவர பலத்தான். இந்த ஆசீர்வாதத்தை தேவன் உங்களுக்கும் தருவார். நீங்கள் மேன்மேலும் பலப்பட்டு ஜெயங்கொள்வீர்கள். ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள் (1 பேதுரு 5:6). நீங்கள் பெரிய காரியங்களைச் செய்வீர்கள். வெற்றி பெறுவீர்கள்.  
Prayer:
அன்பின் பரலோகப்பிதாவே,

உமது வார்த்தையின்படியே என்னை ஆசீர்வதித்தருளும். ஒவ்வொரு நாளும் மேன்மேலும் பலப்பட வேண்டும். என் உள்ளார்ந்த மனிதனை நாளுக்குநாள் பரிசுத்த ஆவியினால் பலப்படுத்தும். நான் இழந்த எல்லாவற்றையும் திரும்ப மீட்டுக்கொள்ள கிருபை செய்தருளும். உமக்காக பெரிய காரியங்களை செய்கிறவனாக என்னை மாற்றும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000