Loading...
DGS Dhinakaran

சிலுவையின் நன்மை!

Bro. D.G.S Dhinakaran
17 Jun
கர்த்தராகிய இயேசு தம் பிள்ளைகளுக்கு மன்னிப்பையும் குணமாக்குதலையும் கொடுக்கும்படிக்கே சிலுவையில் பாடுகளை அனுபவித்தார். அவர் தலையில் சூட்டப்பட்ட முட்கிரீடத்தினால், கை கால்களில் கடாவப்பட்ட ஆணிகளால் இரத்தம் புரண்டோடியது. நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. நம்மை நோயிலிருந்து காப்பாற்றுவதற்காக அவர் தம் சரீரத்தில் காயமேற்றார். இன்றும் சுகத்திற்காக அவரை நோக்கிப்பார்க்கிற யாவரையும் அவர் குணமாக்குவார். மருத்துவர்கள் ஒருவேளை உங்களை குணப்படுத்த முடியாது என்று கூறலாம். உங்களை குணப்படுத்தக்கூடிய மெய்யான இரட்சகர் இயேசு இருக்கிறார் என்பதை மறவாதீர்கள். அவரிடத்தில் வந்து சுகத்தை பெற்றுக்கொள்ளுங்கள். “உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது” (மத்தேயு 9:29) என்று இயேசு கூறியிருக்கிறார். தேவனுடைய வார்த்தையின்மீது உங்கள் விசுவாசக் கண்களை பதித்திடுங்கள். “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை” (மத்தேயு 24:35) என்று கூறியிருக்கிற இயேசு கிறிஸ்துவின்மீது உங்கள் நம்பிக்கையை வைத்திடுங்கள். அவர் உங்களை நிச்சயமாக குணமாக்குவார். 

பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க ஐக்கிய நாட்டில் டெக்ஸாஸ் பகுதியில் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் ஒரு மனிதன் அழகிய தோட்டம் ஒன்றின் வழியாக சென்று கொண்டிருந்தான். அங்கு ஒரு குட்டிப்பையன் தோட்டத்தில் இருந்த பூக்களைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான். அப்போது கொடிய விஷமுள்ள பாம்பு ஒன்று அந்த சிறுவனை நெருங்கிக் கொண்டிருப்பதை இந்த மனிதன் பார்த்தார். கொஞ்ச நேரத்தில் அந்த பாம்பு அந்த சிறுவனை தீண்டும், அவன் மரித்துப்போவான் என்பதை அந்த மனிதன் புரிந்துகொண்டான். என்ன செய்வதென்று தெரியாத நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பாம்புக்கும் சிறுவனுக்குமிடையே இந்த மனிதன் பாய்ந்து சென்றான். பாம்பு அந்த மனிதனை பத்து முறை கொத்தியது. பாம்பு கொத்திய வேதனையில் அவன் அலறினான். அவனது அலறல் சத்தம் கேட்டு, அந்த குட்டிப்பையனின் தந்தையும் அருகில் இருந்தவர்களும் ஓடி வந்தார்கள். அந்த பாம்பு ஓடிப்போனது. அந்த குட்டிப் பையன் காப்பாற்றப்பட்டான். பாம்பால் கொத்தப்பட்ட மனிதனை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். உயிருக்காக போராடிய அவனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றினார்கள். அந்த பையன் பெரியவனாக வளர்ந்தபின்பு, அந்த நபரை பார்க்கும்போதெல்லாம், “எனக்காக இவர் தன் உயிரையே தியாகம் செய்ய இருந்தார்” என்று நினைவுகூர்ந்திருப்பானல்லவா!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் உங்களுக்காக தம் ஜீவனையே தியாகம் செய்தார். சிலுவையில் அவர் நமக்காக சிந்திய இரத்தம், நமக்கு பாவமன்னிப்பை கொண்டு வருகிறது. “என் பிள்ளைகள் பாவத்திலிருந்து மீட்கப்படுவதற்காக இதை பொறுமையோடு சகித்துக்கொள்வேன்” என்று அவர் எண்ணினார். நம்முடைய மீறுதல்களுக்காக அவர் காயப்பட்டார்; நம்முடைய அக்கிரமங்களுக்காக அவர் நொறுக்கப்பட்டார். சாத்தானிடமிருந்து நம்மை காப்பாற்ற அவர் மரணத்தை ருசிபார்த்தார். “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவான் 1:9). தேவனுடைய தியாகத்தின் மூலமாக பாவமன்னிப்பை நமக்கு எளிதாக கிடைக்கச்செய்துள்ளார். நம்மீது வரவிருந்த ஆக்கினைத்தீர்ப்பு அவர்மேல் வந்தது. “இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே” (ரோமர் 5:9). சிலுவையின் குணமாகுதலையும், மன்னிப்பு மற்றும் ஆசீர்வாதங்களையும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? வார்த்தையை உரிமையாக்கி ஜெபியுங்கள், அற்புதத்தை பெற்றிடுங்கள்.
Prayer:
அன்பின் இயேசுவே,

என்னிமித்தம் நீர் சிலுவையில் அனுபவித்த பாடுகளுக்காக நன்றி கூறுகிறேன். சிலுவையில் நீர் எனக்காக சம்பாதித்த ஆசீர்வாதங்களால் நிறைவான சமாதானத்துடன் என்னை ஆசீர்வதித்தருளும். என் பாவங்களை உம்மிடத்தில் அர்ப்பணிக்கிறேன். என் வழிகளிலிருந்து நான் மனந்திரும்புகிறேன். என்னை மன்னித்து, எல்லாவிதமான பாவத்திலிருந்தும் என்னை விடுவித்தருளும். என் பெலவீனங்களிலிருந்து என்னை விடுவியும். உமது காயங்களால் நான் குணமடைந்திருக்கிறேன் என்று விசுவாசிக்கிறேன்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000