Loading...

நல்ல மேய்ப்பன்!

Stella Ramola
30 May
ஒரு மேய்ப்பன் தனது ஆடுகளை மிகவும் நேசிக்கிறான். ஒவ்வொரு ஆடுகளையும் அறிந்து வைத்திருக்கிறான். ஒரு செம்மறி ஆடு வழிதவறும்போது, தொலைந்த அந்த செம்மறியை தேடி கண்டுபிடித்து தன் மார்போடு அணைத்து வீட்டிற்கு எடுத்துச் செல்கிறான். தேவனும் நம்மை ஆடுகளோடு ஒப்பிடுகிறார். வேட்டையாடுகிற சாத்தானிடம் இருக்கின்ற ஆபத்தை அறியாத அப்பாவி மக்களாய் அவர் நம்மை எண்ணுகிறார். ஒரு நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காக தன் ஜீவனையே கொடுக்கிறான். இயேசு கிறிஸ்துவும் நமக்காக தன் ஜீவனையே கொடுத்ததினால், அவர் நமக்கு நல்ல மேய்ப்பராக இருப்பேன் என்று வாக்குறுதி அளிக்கிறார். அவர் ஆடுகளை தண்ணீரண்டைக்கு வழிநடத்துகிறார். ஆடுகள் சரியாக உறங்கி ஓய்வெடுக்காத ஒரு விலங்கு. ஆகவே, தான் மேய்ப்பன் அவைகள் ஓய்வெடுக்கும்படியாக தண்ணீரண்டைக்கு அழைத்து செல்கிறான். ராஜாவாகிய தாவீதும் ஒரு மேய்ப்பனாகையால் இதை அறிந்திருந்தார். ஆகவே தான் ஆடுகளைப்போல அமைதியற்ற நம் ஆத்துமாவிற்கு ஆண்டவர் எப்படி இளைப்பாறுதலை தருகிறார் என்பதை அவர் விவரிக்கிறார்.

ஆடுகளைப் பற்றிய ஒரு கதையை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒருமுறை ஓநாய் ஒன்று நீண்ட காலமாக ஆட்டு மந்தையைச் சுற்றி திரிந்து கொண்டிருந்தது. ஓநாய் தன் ஆட்டுக்குட்டியை எடுத்துச் செல்வதை தடுக்கும்படி மேய்ப்பன் விழிப்புடன் பார்த்துக்கொண்டே இருந்தான். ஆனால், ஓநாய் ஆடுகளுக்கு எந்தத் தீங்கும் இழைக்க முயற்சிக்கவில்லை. அதற்கு பதிலாக ஆடுகளை பராமரிக்க ஓநாய் தனக்கு உதவுவதாக மேய்ப்பன் எண்ணினான். கடைசியில் ஓநாயும் மேய்ப்பனும் நன்றாக பழகிவிட்டனர். ஓநாய் ஒரு பொல்லாத விலங்கு என்பதையே மறந்துபோனான் அந்த மேய்ப்பன். ஒருநாள் அவர் தனது மந்தையை ஓநாயின் பராமரிப்பில் விட்டுச்செல்லும் அளவிற்கு ஓநாயை மேய்ப்பன் நம்பிவிட்டான். ஆனால், அவன் திரும்பி வரும்போது மந்தைக்குள்ளிருந்த எத்தனையோ ஆடுகளை அது கொன்று எடுத்துச் சென்றிருப்பதை கண்டு, ஓநாய்மீது நம்பிக்கை வைத்தது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை உணர்ந்தான். ஓநாய் எப்போதும் ஓநாய் தான் என்ற பாடத்தை மேய்ப்பன் கற்றுக்கொண்டான்.
பிரியமானவர்களே, இயேசு தன்னை ஒரு நல்ல மேயப்பராக ஒப்பிடுகிறார். “மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளை சிதறடிக்கும்” (யோவான் 10:12) என்று அவர் விவரிக்கிறார். ஆனால், நம்முடைய தேவன் கூலியாள் அல்ல! பிசாசின் கிரியைகளிலிருந்தும், உலகத்தின் சாபங்கள் மற்றும் தொல்லைகளிலிருந்தும் நம்மை பாதுகாக்க அவர் சிலுவையில் பாடுபட்டார். பிசாசின் கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவகுமாரன் வெளிப்பட்டார் (1 யோவான் 3:8). எனவே, இன்றைக்கும் நீங்கள் எதைக்குறித்தும் அஞ்ச வேண்டியதில்லை. அவர் உங்களை தமது கண்ணின் மணியைப்போல பாதுகாப்பேன் (சகரியா 2:8) என்று கூறுகிறார். உங்களுக்கு எதிராக உருவாகும் எந்தவொரு ஆயுதமும் வாய்க்காது (ஏசாயா 54:17) என்று அவர் வாக்களித்துள்ளார். எந்தவொரு தீங்கும் உங்களை நெருங்காது. எனவே இந்த வாக்குறுதிகளை பற்றிக்கொண்டு சமாதானமாயிருங்கள்.
Prayer:
அன்பின் தேவனே,

நீரே என் நல்ல மேய்ப்பர் என்பதை அறிந்துகொள்வது என் இருதயத்திற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த உண்மையான சத்தியத்தின் பக்கமாக என் கண்களை திருப்பியதற்காக நன்றி. என் வாழ்வில் எதுவும் குறைவுபடாதபடி, நீர் எனக்கு எல்லாவற்றையும் கொடுப்பீர் என்று நான் நம்புகிறேன். நீரே என்னை பாதுகாப்பீர். அதனால் நான் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை. இந்த உண்மையை நான் ஒருபோதும் மறந்துவிடாமல் காத்தருளும். என் இருதயத்தை சமாதானத்தினால் நிரப்பும். நீரே என்னை வழிநடத்தும். உமது பாதைகளிலிருந்து நான் ஒருபோதும் விலகிச்செல்லாமல் காத்தருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.  

For Prayer Help (24x7) - 044 45 999 000