Loading...
DGS Dhinakaran

நற்செய்தி!

Bro. D.G.S Dhinakaran
26 Dec
தேவன் மனிதனாக தோன்றுவதற்கு முன் அந்நாட்களில் இஸ்ரவேல் வம்சத்தார் ரோம சாம்ராஜ்ஜியத்திற்கு அடிமைகளாயிருந்தார்கள். அதிகமான வேதனையில் தவித்துக் கொண்டிருந்தார்கள். ஒரெயொரு தீர்க்கதரிசன வசனம்தான் அவர்களுடைய நம்பிக்கையின் ஆதாரமாய் இருந்தது. அது ஏசாயா தீர்க்கதரிசியினால் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட வார்த்தை, “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.” (ஏசாயா 9:6). அவர் பிறந்தபோது தேவதூதன் இறங்கி வந்தான். பாலகனாக இரட்சகர் பிறந்துவிட்டார் என்று அறிவித்தான். யூதர்களாகிய உங்களுக்கு மட்டுமல்ல உலகிலுள்ள எல்லா ஜனங்களுக்கும் இது மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கும் நற்செய்தி என்றான்.

என் மனைவி கருவுற்றிருக்கும்போது, திடீரென்று அவளுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. இரண்டாவது முறையாக கருவுற்றாள். ஒரு ஆண் குழந்தை பிறந்தவுடனே இறந்துபோனது. என் மனைவி கதறினாள். என் பெற்றோர், என் மனைவியின் பெற்றோர், உறவினர் அனைவரும் கதறினார்கள். அவர்களுடைய கண்ணீரை மறக்கவே முடியாது. அவ்வளவு வேதனை. நாட்கள் கடந்தது! மூன்றாவது முறையாக என் மனைவி கருவுற்றாள். அவளுக்கு ஏழு மாதங்கள் நிறைவடைந்தபோது, மேட்டுப்பாளையத்தில் வசிக்கும் என் மனைவியை அவர்களுடைய அக்கா தன் வீட்டிற்கு பிரசவத்திற்காக அழைத்துச் சென்றார்கள். 15 நாட்களுக்கு முன்பதாகவே என்னை விடுப்பு எடுத்துக்கொண்டு வரச்சொல்லி விட்டார்கள். நானும் சென்றேன். பதினைந்து நாள் விடுப்பு முடிந்து போனது. ஆனால் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. வேறுவழியின்றி ஊருக்கு திரும்பினேன். அடுத்தநாள் வழக்கம்போல வேலைக்கு சென்றேன். மேலாளரும், உடன் வேலையாட்கள் அனைவரும் குழந்தை பிறந்துவிட்டதா? என ஆவலோடு கேட்டனர். இல்லை இன்னும் பிறக்கவில்லை என்று கூறினேன். மதியம் இரண்டு மணிக்குமேல் எனக்கு தொலைப்பேசி அழைப்பு வந்தது. நான் சென்று பேசினேன், குழந்தை பிறந்துவிட்டது என்ற நற்செய்தி வந்தது. தாயும் சேயும் நலமாய் இருக்கின்றனர் எனக்கூறினர். அலுவலகத்தில் அனைவருக்கும் ஒரே மகிழ்ச்சி!
பிரியமானவர்களே, ஒரு ஆண் குழந்தை பிறந்தது அனைவரின் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி. உலக வாழ்வில் ஒரு குழந்தையின் பிறப்பு நமக்கு அத்தனை பரவசத்தை கொடுக்குமென்றால், இவ்வுலகை இரட்சிக்கும் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு எத்தனை பரவசத்தை உருவாக்கியிருக்கும். “தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்” (லூக்கா 2:10,11). ஆம் தேவாதி தேவன் நம்மை இரட்சிப்பதற்காக மனுவுருக்கொண்டு இந்த பூமியில் மனிதனாய் பிறந்தார்.  அவர் இலவசமாய் தருகிற சுவிசேஷத்தின் நற்செய்தியை கேட்டு வெளிச்சத்தின் பிள்ளைகளாய் சந்தோஷமாய் வாழ்ந்து நற்சாட்சி பெறுங்கள். 
Prayer:
அன்பிற்குரிய பரமபிதாவே,

பாவத்தின் அடிமைத்தனத்தில் வாழ்கிற எங்களை மீட்பதற்காக உம்முடைய திருக்குமாரனை இந்த பூமிக்கு அனுப்பி வைத்த உம் கிருபையை எண்ணி உம்மை மனதார நன்றி செலுத்தி துதிக்கின்றேன். பாவியாகிய எனக்கும் கிறிஸ்துவின் பிறப்பின் நற்செய்தியை விளங்கச் செய்தீரே உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். நான் பெற்ற இரட்சிப்பின் நற்செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள உதவிச்செய்தருளும். என் இருதயத்தில் சமாதானத்தையும், சந்தோஷத்தையும் கட்டளையிட்டருளும். என் மனதிலுள்ள பயங்கள் அனைத்தையும் நீக்கியருளும். எந்நாளும் உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்த கிருபை செய்தருளும்.

இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், நல்ல பிதாவே.

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000