Loading...
Dr. Paul Dhinakaran

தேவதிட்டம் நிறைவேறும்!

Dr. Paul Dhinakaran
06 Aug
பிரியமானவர்களே, ஆண்டவர் உங்களை வேறு யாரையும் நம்பி வாழவிடமாட்டார். யாரோ சொத்து கொடுப்பதினால் நீங்கள் உயர்ந்து விடப்போவதில்லை. யாரோ ஒருவர் உதவிச்செய்வதால் நீங்கள் பெரிய மாற்றத்தை பெற்றுவிடப் போவதில்லை. தேவன் உங்களுக்கென்று ஒரு திட்டத்தை வைத்திருக்கும்போது,  எந்த ஒரு மனிதனாலும் உங்களுக்கு உதவ முடியாது. தேவநோக்கம் நிறைவேறும்படி, அவரே உங்கள் வாழ்வில் உயர்வை கட்டளையிடுவார். “சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் இதை ஏற்றக்காலத்தில் தீவிரமாய் நடப்பிப்பேன்” (ஏசாயா 60:22) என்று கர்த்தர் கூறுகிறார். ஆகவே, தேவ சித்தத்தை அறிந்து அதை செயல்படுத்துவதை கருத்தில் கொள்ளுங்கள். அவருக்கு காத்திருங்கள்.  திட்டத்தை கொடுத்த தேவன், அதை செய்துமுடிப்பதற்கான வழியையும் உருவாக்குவார்.
 
1980-85ம் ஆண்டுகளில், காருண்யாவை கட்டி எழுப்பும்படி, ஆண்டவர் சொன்னபோது, மனிதர்களைத் தேடி ஓடினோம். அவர்களிடம், “ஆண்டவர் ஒரு திட்டத்தை கொடுத்திருக்கிறார். எப்படியாவது இந்த ஆர்டரை கொடுங்கள். காருண்யாவை ஆரம்பிக்க வேண்டும், இந்த நிலத்தை பதிவுசெய்ய வேண்டும்” என்று கூறுவோம். அப்போது எங்களிடம் பணமேயில்லை, ஒருவரும் எங்களுக்கு உதவிசெய்ய முன்வரவில்லை. சிலவேளைகளில், எங்கள் நண்பர்கள், “பெரிய கோடீஸ்வரர்களோடு சிறப்பு கூடுகையை ஆயத்தம் செய்கிறோம்; அவர்களிடம் உங்கள் திட்டத்தை சொல்லிவிட்டால், நிச்சயமாக அவர்கள் உங்களுக்கு காருண்யாவை கட்டியெழுப்ப உதவி செய்வார்கள்” என்று கூறி கூடுகையை ஒழுங்கு செய்வார்கள். நாங்கள் அந்த தொழிலதிபர்களிடம், “ஆண்டவர் ஒரு பல்கலைக்கழகத்தைக் கட்டியெழுப்பும்படி சொல்லியிருக்கிறார். தயவுசெய்து உதவிச் செய்யுங்கள்” என்று தேவதரிசனத்தை சொன்னால், சிலர் “காசு இல்லாதவர்கள் ஏன் பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க வேண்டும்? அதுவும் இறைவன் பெயரை சொல்லிக்கொண்டு வந்தால் காரியம் நடக்குமா?” என்று கேவலமாக பேசியிருக்கிறார்கள்.
நீங்கள் நம்பியிருந்த மனிதர்கள் உங்களை புறக்கணிக்கலாம். யாரும் உங்களுக்கு உதவி செய்யாமல் தங்கள் கைகளை முடக்கிக் கொண்டிருக்கலாம். மனம் கலங்காதிருங்கள்! “மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்” (சங்கீதம் 118:8) என்று வேதம் கூறுகிறது.  நீங்கள் நம்பிக்கையோடு தேவராஜ்யத்தைத் தேடுங்கள். நீங்கள் தேவனை தேடுவீர்களானால், அவர் உங்களுக்கு ஏற்ற நேரத்தில் நீதியும் நியாயமும் செய்வார். அவரே உங்கள் வீட்டை கட்டுவார். அவரே உங்கள் பிள்ளைகளுடைய எதிர்காலத்தை கட்டி எழுப்புவார். அவரே உங்களுக்காக யாவற்றையும் செய்து முடிப்பார் (சங்கீதம் 138:8). கர்த்தர் உங்களுக்காக காரியங்களை செய்யும்போது, நீங்கள் மற்றவர்களைவிட உயர்ந்திருப்பீர்கள்.
Prayer:
அன்பின் தேவனே,
 
நீர் எனக்காக ஏற்படுத்தியிருக்கிற திட்டங்களுக்காக நன்றி செலுத்துகிறேன். நீர் திறக்கிறதை ஒருவராலும் பூட்டமுடியாது. எனக்கான ஆசீர்வாதத்தின் வாசலை திறந்தருளும். எத்தனையோ மனிதர்களை நம்பி ஏமாற்றப்பட்டிருக்கிறேன். இந்த கடினப்பாதையில் என்னை நடத்தியதற்கு நன்றி. இதன்மூலம் நீர் எனக்காக யாவற்றையும் செய்து முடிக்கிறவர் என்ற விசுவாசத்தில் நிலைத்திருக்க கற்றுக்கொண்டேன். என் படிப்பு, பேர், புகழ், பணம் எல்லாவற்றைப்பார்க்கிலும் நான் உம்மையே முதன்மையாக எண்ணுகிறேன். நீர் எப்பொழுதும் என்னோடுனே இருந்தருளும். எனக்கான ஆசீர்வாதத்தின் ஊற்றுகள் திறக்கப்படுவது நிச்சயம்.
 
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
 
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000